இந்து மதத்தை வளர்ப்பது தான் என் நோக்கம். அதற்காக தான் ரிஷி தர்மா இயக்கத்தை துவங்கியுள்ளேன். இதில் யாரும் சேரலாம். இதற்கு மதம் கிடையாது. கட்டணமும் இல்லை என்று சொல்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜோசப் அய்யங்கார்.
அவர் பேசியதில் இருந்து...
* பல தெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு பலமா? பலவீனமா?
இந்து மதத்திற்கான சொத்து தான் பல தெய்வ வழிபாடு. இங்கே நீங்கள் விரும்பும் தெய்வத்தை மட்டும் வணங்க முடியும். உங்கள் குணத்திற்கேற்ற தெய்வத்தை தேர்ந்தெடுக்க முடியும். கவிஞர் கண்ணதாசனுக்கு கண்ணனை பிடித்ததால் அவர் பெயரில் தாசனை சேர்த்துக் கொண்டார். நடிகர் சாண்டோ சின்னப்பா தேவர், பாடகர் டி.எம்.சவுந்தராஜனுக்கு பிடித்தது முருகக்கடவுள். கம்பராமாயணத்தில் முக்குணத்தில் முதல் குணத்தானாக ராமனை சொல்லியிருப்பார். பொறுமை, சகிப்புத் தன்மையுடன் சாத்வீக குணமுடையவர். மன்னிக்கிற மனப்பான்மை உடையவர்.
* மற்ற சொற்பொழிவாளர்களுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு.
மற்ற சொற்பொழிவாளர்கள் மக்களை விட்டு விலகி பரி பாஷையில் தான் மேடையில் பேசுகின்றனர். சக மனிதனிடம் சகமனிதனை போன்று பேச வேண்டும். இதை நான் சொன்னால் ஏற்றுக்
கொள்வதில்லை. மெல்போர்னைச் சேர்ந்த ஒரு பெண் எனது சொற்பொழிவு 'சிடி'யை இணையதளத்தில் கேட்டு விட்டு 'உங்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது. ஆனால் ரிக்ஷாகாரன் போல்,
சென்னைத்தமிழ் பேசுவது நன்றாக இல்லை' என்று விமர்சனம் செய்தார். படித்தவர்களுக்கு புத்தகம் இருக்கிறது. எல்லோரையும் இந்து மதம் சென்றடைய வேண்டும் எனில் பழகுதமிழ் தான் சிறந்தது. உபன்யாசம் உயர்ந்தது தான். ஆனால் அது இப்போது வீட்டின் மாடியில், பால்கனியில், நுாலகத்தில், கூகுளில் மட்டுமே உள்ளது. அதை தெருக்கள்தோறும், மனிதர்கள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். அதைத் தான் செய்கிறேன்.
* உங்கள் மனைவி பாத்திமா, மகன் சுரேஷ் இருவரும் உங்களுக்கு உதவுகின்றனரா
உபன்யாசம் என்பது ஒரு கலை. பல ஆண்டுகளாக முயற்சி செய்து அதை அடைந்திருக்கிறேன். மனைவி, மகன் இருவரும் என் ஆன்மிக பயணத்தை வழிநடத்தி செல்கின்றனர்.
* அய்யங்கார் பட்டம் கிடைத்தது எப்போது?
ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் தான் 2004ல் இப்பட்டத்தை கொடுத்தார். ஜோசப் என்ற உன் பெயரை இந்து
பெயராக மாற்றினால் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடுவாய். மதம் மாறாமல், பெயர் மாற்றாமல் சொற்பொழிவு செய். அய்யங்கார் என சேர்த்துக் கொள் என்று மேடையில் சொன்னார்.
* சமூக ஒழுக்கங்கள் சமீப காலமாக குறைந்து வருவதற்கு காரணம்
ஆன்மிகம் இல்லாமலேயே சமுதாய வாழ்வு சாத்தியம் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம். அதுதான் சமூகத்தில் தற்போது காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். இந்து மதத்தில் குழந்தைப் பேற்றில் துவங்கி, காதுகுத்து, மொட்டை போடுதல் என ஒவ்வொரு விழாவையும் மதத்துடன் இணைத்தே செய்தனர். மதத்தோடு இணைந்த வாழ்வியல் உணர்வு இன்றில்லை. மதத்தை வெளியே தள்ளிவிட்டு வாழ்க்கை மட்டும் போதும் என நினைத்து விட்டோம். இந்நிலை மீண்டும் மாறவேண்டும்.
* ஆன்மிக சொற்பொழிவுகளை இளைஞர்கள் கேட்கிறார்களா?
இளைஞர்களுக்கு பழகு தமிழில் ஆன்மிக சொற்பொழிவாற்றும் போது, அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை பிரமித்து ஏற்றுக் கொள்கின்றனர். இளைஞர்களுக்கு இதை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை.
இவரை தொடர்பு கொள்ள- 96008 24414.
No comments:
Post a Comment