Monday, July 6, 2015

லண்டனில் (14 ஜூன் 2015) நடந்த ஹரே க்ருஷ்ணா இயக்க தேர்த் திருவிழா

0a128-img_4265லண்டனில்  (14 ஜூன் 2015) நடந்த ஹரே க்ருஷ்ணா இயக்க தேர்த் திருவிழா— ரத யாத்ரா – லண்டனை ஒரு கலக்கு கலக்கி விட்டது. மத்திய லண்டனையே குலுக்கியது என்று சொன்னாலும் மிகை இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் தேர்த் திருவிழாதான் இது. என்றாலும் நான் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் மீண்டும் ஹரே க்ருஷ்ணா தேர் விழாவில் கலந்து கொண்டதால் 25 ஆண்டுகளில் – கால் நூற்றாண்டில் – ஏற்பட்ட மாறுதல்களை எடை போட்டுப் பார்க்க முடிந்தது.
b9ce0-img_4272
லண்டனில் 25-க்கும் மேலான தமிழ்க் கோவில்கள் உள. அவற்றின் தேர்த் திருவிழாக்களிலும் நான் கலந்து கொள்வதுண்டு. இருந்தபோதிலும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் பக்கத்தில் கூட அவர்கள் வர முடியாது. இதற்குக் காரணம் வெள்ளைக்கார பக்தர்கள் இருப்பதாலும், கட்டுப்பாடான ஒரு இயக்கம் என்பதாலும் இவர்கள் ஒருவருக்கு மட்டுமே மத்திய லண்டனில் தேரை இழுக்க அனுமதி தருகிறார்கள். இது ஒரு பெரிய வேறுபாடு. மத்திய லண்டனின் முக்கிய சுற்றுலா இடங்களை தேர் கடந்து செல்வதால் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது.
இனி இன்றைய தேர்விழாவின் சொல் சித்திரம் இதோ:
ஆண்டுக்கு ஒரு முறை பிரிட்டிஷ் மஹாராணி, பக்கிங்ஹாம் அரண்மனையில்– கார்டன் பார்ட்டி—தோட்ட விருந்து தருவார். ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் அரண்மனைக்கு வர அழைப்பு வந்தது. நானும் என் மனைவியும் போனோம். மஹாராணி மிக அருகில் நின்றோம். ஆனால் அவரோ எங்களைக் கண்டு கொள்ளவில்லை. பகத்தில் இருந்த தெரிந்த முகங்களைப் பார்த்து குசலம் விசாரித்தார். இது ஆண்டுதோறும் நடக்கும். 1000 பேருக்கு அழைப்பு வரும். அங்கே எங்களைப் போன்ற வெஜிட்டேரியன்களுக்கு தனி ஸ்டாலில் உணவு. அது தவிர 20 வகையான ஐஸ்கிரீம், 20 வகையான கேக்குகள், 20 வகையான பானங்கள் என்று பரிமாறினர். இது ஆயிரம் பேருக்குதான்.
IMG_1158
ஆனால் இன்றோ தேர் வந்து நிலை சேரும் டிரபால்கர் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இலவச சாப்பாடு!! பகல் 12 முதல் மாலை 5 மணி வரை மிக மிக நீண்ட வரிசையில் 200 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களோடு நின்று உணவு உண்டு களித்தனர். இந்த அரிய காட்சியை காணும் இந்துக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்கும்.
நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகும்போது வாரத்தில் ஒரு நாள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வந்து மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுப்பர். அதை வாங்க எல்லா இன மாணவர்களும் வரிசையில் நிற்பர். இன்றோ அதை விட பல நூறு மடங்கு பல இன மக்கள் வரிசையில் நின்றனர்.
IMG_1219
நான் 25 ஆண்டுகளுக்கு முன் ‘’மார்பிள் ஆர்ச்’’ சென்றபோது தேர் இழுக்க குறைவான ஆட்களே இருந்ததால் நானும் ஒரு கை கொடுத்தேன். இன்றோ பல்லாயிரம் மக்கள்; தேர் பக்கத்தில் சென்று வடக் கயிறைத் தொடக்கூட முடியவில்லை! லண்டனின் முக்கிய கடைத்தெருக்கள், பிக்கடில்லி சர்கஸ், ஹைட் பார்க், டிரபால்கர் ஸ்கொயர் என்று எல்லா இடங்களும் தேர்ச்சக்கரத்தின் தடம் படும் புண்ணியம் பெற்றது. அடியார்களின் பாத துளிகள் பட்ட இடத்தில் நடு ரோட்டில் பல ஹரே கிருஷ்ணா பக்தர்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர்.
பல்வேறு குழுக்கள் மதுரைத் தேர்த் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடுவது போல ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வந்தனர். ஹரே கிருஷ்ணா, ஹரே ராம என்ற புண்ய கோஷம் ஆங்கில உச்சரிப்பில் மைக்குகள் மூலம் அலறின. மத்திய லண்டன் முழுதும் பக்தி அலைகள் பரவின.
f79dc-img_4281
சில சிறுவர்கள் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடம் தரித்து வந்து பலரையும் கவர்ந்தனர். தேர் சென்ற வழித்தடம் முழுதும் 200 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் காமெராக்கள் பல்லாயிரம் தடவை க்ளிக் சப்தம் எழுப்பின. கிருஷ்ணன் — ராதை வேடம் அணிந்தோருடன் படம் எடுத்துக் கொள்ள போட்ட போட்டி!!
தேர் நிலை சேர்ந்த இடத்தில் பல புத்தகக் கடைகள் — இலவச பகவத்கீதை புத்தகம் விநியோகம் — பொதுவாக அவர்கள் புத்தங்களை விற்பதில்லை. நன்கொடை கொடுத்தால் மட்டும் ஏற்பர்.
இது போன்ற தேர்த்திருவிழாவைப் பார்த்தாலேயே புத்துணர்ச்சி பெற முடியும். எங்கும் நல்ல உணர்வுகளை எழுப்பும் ஒரு சூழ்நிலை. 25 ஆண்டுகளில் ஹரே கிருஷ்ணா இயக்கம் பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதை உணர முடிந்தது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் அதீத பக்தி பாராட்டப்பட வேண்டியதே. சிவன் முதலிய தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று கூறுவதால் அவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்க முடியாவிட்டாலும்  அவர்களுடைய குருட்டுத் தனமான பக்தியையும் கட்டுப்பாட்டையும் மெச்சாமல் இருக்க முடியாது. மது, மாமிசம் சாப்பிடாததும், புகை பிடிக்காததும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு எடுத்துக் காட்டு.
IMG_1148
இன்றைய லண்டன் தேர்த் திருவிழாவில் போலீஸ் ‘கார்’களும் வரவில்லை—போலீஸ்காரர்களும் வரவில்லை. இயக்கத் தொண்டர்களே கட்டுப்பாடாக வழி நடத்திச் சென்றனர். மற்ற விழாக்களில் முன்னும் பின்னும் போலீஸ்’கார்’கள் வரும். இந்த இயக்கத்தினர் மீது அவ்வளவு நம்பிக்கை! 30 ஆண்டுக்காலத்துக்கும் மேலாக உலகம் முழுதும் பெரிய நகரங்கள் அனைத்திலும் ஹரே கிருஷ்ணா இயக்கத் தேர்கள் பவனி வருவதிலிருந்தே இதை அறியலாம். இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநில பூரி ஜகந்நாதர்  ரதத்தைப் போல வடிவமைத்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ராவை வைத்து கொண்டு செல்வர்.
IMG_1150
IMG_1239
ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா! கிருஷ்ண, க்ருஷ்ணா ஹரே ஹரே!!

ANBUDAN

<>KSR<>

No comments:

Post a Comment