Thursday, July 9, 2015

ஔவை

படு சுட்டிக் கிழவி 

ஔவைக் கிழவியை  பற்றி அவள்  வெண்பாக்களை  சிறுவயதிலேயே  நாங்கள் படித்தோம்.  இப்போது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு  இந்த கிழவியைத் தெரியுமோ என்றே  சந்தேகமாக இருக்கிறது.  ஔவை ஒரு சிறந்த சங்க காலப் பெண் புலவர்.  
அவரிடம் எனக்குப் பிடித்தது  அவர்  தமிழ்.  மற்ற  சங்ககால புலவர்கள்  போல்  கரடு முரடு தமிழ், தலையைப் பிய்த்துக்கொண்டு  பேந்த பேந்த முழிக்க வைக்காத  தமிழ் அவளுடையது.  அருமையான  தெள்ளிய  நீரோடை  போன்ற  நடை,  அதற்கேற்ப  தகுந்த  உபமானங்கள்,  இந்த கிழவி  எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. அவளைத் தான்  நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்தோம். 

எங்களில் சிலரும் எங்களுக்கு  அடுத்த தலைமுறையும்  ஔவை என்றவுடனே  சற்று பூசின சுருக்கமில்லாத   சதுர முகம், பட்டை பட்டையான  வெண்ணீறு,  பயோரியா பல்பொடி விளம்பரத்துக்கேற்ற பல்வரிசை, வெள்ளை  புடவை ரவிக்கை, கருப்பும் வெளுப்புமான  தலை, சுருக்கமில்லாக கன்னம்.  ஆனால்  பக்கத்துத்தெரு வரை  ஒலி பெருக்கி இல்லாமலே  கேட்கும் குரல், அதில் ஒலிக்கும்  அசுர சாதக  பாடல்கள்.  இது தான்  ஔவை  என்கிற  வேஷத்தில்  தமிழ் மக்களை  கவர்ந்த  திருமதி  கே.பி. சுந்தராம்பாள்.  இன்றும்  எத்தனையோ காதுகளில்  ''வேலைப் பிடித்ததென்ன, என்ன  என்ன  என்ன  என்ன........'' கணீரென்று ஒலிக்க  காரணம்  ஔவைகிழவியின் முருக பக்தி  என்பதை விட  KBS  குரல் வளம், இனிமையான சாரீரம்  என்று வேணுமானால்  சொல்லலாம்.  SS வாசன் ஔவை இப்படித்தான் என்று  தமிழகத்துக்கு  அறிமுகப்படுத்தியவர் K B S.   

பள்ளிக் கூட புத்தகங்களில், மற்றும்  இலக்கிய  இதழ்களில் காணும் ஔவை  வேறு மாதிரி.  ஒடிசலான முதுகு வளைந்த எலும்பு தெரியும் உடல், பல்லில்லாத வாய், சுருங்கிய  ஒட்டிய கண்கள், கன்னங்கள்,  தாடை மூக்கை விட நீண்டு கையில் பிடித்த கம்பு தலைக்கு மேலே  நீட்டிக்கொண்டு,  ஏதோ ஒரு ஒற்றைத் துணியை மெலிந்த எலும்பு தேகத்தில்  சுற்றிக்கொண்ட குடு குடு கிழவி. காசைத்தேடாத ஒரு கலய கஞ்சிக்கு  பாடியவள்.

அவள் தமிழ் என்றும்  இளமையானது. காந்த சக்தி கொண்டு அனைவரையும்  காலம் காலமாக  என்றும்  அழியாமல் கவரும் சக்தி வாய்ந்தது.   தனி முத்திரை பதித்த  வாக்கு சுத்தம்.  கொஞ்சம் படித்தால்,   தானே  புரியும்  உங்களுக்கு. 

''செய் தீவினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால் 
எய்த வருமோ  இரு நிதியம்?  வையத்து 
அறும் பாவம் என்ன வறிந்து   அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்! '' 

இதற்கு  அர்த்தமே  தேவையில்லை.  எனினும் சொல்கிறேன்.

தினை  கஷ்டப்பட்டு  விதைத்தவன் தானே   அது வளர்ந்ததும்  தினையை அறுப்பான்.  வினையையே  விதைத்தவன்  தினை  அறுக்க முடியுமா? வட்டி போட்டு  அவன் செயத  தீவினைகள்  மொத்தமாக அவனை அடையும்போது   ''ஏ   கடவுளே  உனக்கு  கண்ணில்லையா?   எனக்கு மட்டும்  ஏன்  இவ்வளவு கஷ்டமும்  துன்பமும்  தருகிறாய்  என்று  செய்ததை  (முன் வினை வட்டியோடு வரும்போது) மறந்து  கடவுளை  நொந்து கொள்ளுவதால்  என்ன  பயன்? ஆண்டவனை குற்றம் சொன்னால்  அடுத்த  வயலில்   ஆனந்தம் பிள்ளைக்கு  கிடைத்தது போல்  ஏராளமாக  செல்வம்  அவனை  வந்தடையுமா?  இதைத்தான்  கிழவி  ''வெறும்பானை  எங்காவது  பொங்கி  வழியுமா?  நிறைய  பாலை  அதில்  ஊற்றினால்  தானே  பொங்கி  ''பொங்கலோ பொங்கல்''   என்று  சந்தோஷமாக கூவ முடியும்''  என்று சொல்ல வருகிறாள்.   

 ஒரு  அப்பன்  தனது வீட்டில்  மகனுக்கு  என்று  நிறைய  பொன்னும்  பொருளும்  வைத்து விட்டு போனான். மகன்  தறுதலை யாக இருந்தாலும்  நினைத்தபோது  ஆடம்பரமாக செலவு செய்ய  அவனுக்கு சொத்து இருக்கிறதல்லவா?  எத்தனை நாளைக்கு?   அப்பன் சேர்த்து வைத்த  சட்டியில்  காசு  இருந்தவரை தானே!. பிறகு? 
இதுபோலவே  நல்வினை யின்  பயனை  ஒருவன்  அது தீரும் வரை  அனுபவிக்கலாம்.

அதற்காகத்தான்  சேமிப்பை  வளர்க்க  நமது முன்னோர்  நமது எண்ணமும்  செயலும்  நல்வழியில்  இருக்கவேண்டும்  என்று  உபதேசித்தார்கள்.  புத்தகங்கள் பக்கம் பக்கமாக  நிரம்பியிருக்கிறது. பெரியோர்கள், ஞானிகள், குருமார்கள், ஆச்சார்யர்கள்  நம்மை  நல்ல செயல்களையே செய், இறைவனை நினை,  தீயோரோடு  சேராதே. சேமிப்பு  குறையாமல்  பார்த்துக்கொள்  என்று  திரும்ப திரும்ப  சொன்ன  காரணம்  இதற்குத் தான்.

கண்ணாயிரம்  படிக்கவில்லை.  எப்பாடு பட்டோ  அவன்  தகப்பன்  புண்ய கோடி  அவனை  பள்ளிக்கனுப்பி பார்த்தான். கண்ணாயிரத்திற்கு  படிப்பு ஏறவில்லை.  நான் செய்த  பாபமே  இந்த பிள்ளை என்று  புண்ணியகோடி தலையில் அடித்துக் கொண்டது தான்  மிச்சம்.  ஆனால்  கண்ணாயிரம் வளர்ந்தான்.    தோட்டத்தில்  வெள்ளரிக்காய் பயிர் செய்தான்  கூடை கூடையாக  சந்தையில் அதையும் மிளகாயும் விளைத்து அதிக விலைக்கு விற்றான். தோப்புகள் வாங்கினான். மாம்பழம் கொய்யா பழம் சீசனில் ஓஹோ என்று  கொடிகட்டி பறந்தான். பெண் கொடுக்க அநேகர்  முன் வந்தார்கள். கல்யாணமும் ஆகி  பெண் வீட்டார்  பணத்தையும் போட்டு  எண்ணை ஆட்டும் தொழிலில் பணம் பண்ணினான்.  ஊரார் அவனை பெரிய மனிஷன்  என்று புகழ்ந்து கை கூப்பி  வரவேற்கிறார்கள்.  அவன் குதிரை மேல் சவாரி செய்து வந்தால்  ராஜா மாதிரி இருக்கிறான். கண்ணாயிரத்தை பார்க்க  கண்  ஆயிரம் வேண்டும்  என்று  புகழ்ந்தார்கள். 

அவன்  அதிர்ஷ்டசாலியாக இல்லாமல்  இருந்திருந்தால்  எப்படி இருப்பான் என்று ஒரு கணம் யோசிக்கலாம்.  எல்லோராலும் ஏசப்பட்டு , ஒருவேளை உணவுக்கு  கெஞ்சி, அவனுக்கென்று வாய்த்த மனைவிகூட சீ  நீ எல்லாம் ஒரு புருஷனா? தூ  என்று  அவனை அலட்சியப் படுத்தி, பெற்ற  தாயே   ஜடம் என்று அவனை கேலி செய்து, இன்னும் என்ன  கேவலமான நிலை வேண்டும். அவன்  எதாவது  நல்ல விஷயம் ஒன்று சொன்னால் கூட  கேட்க  ஆளில்லை.  அவனுக்கே மதிப்பில்லை அவன் சொல்லுக்கு எங்கே மதிப்பு.  இதை அழகாக படம் பிடித்து காட்டுகிறாள் ஔவை.

''கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்''

மற்றொரு காட்சி  காட்டுகிறாள் கிழவி.   சல சலவென்று  ஆறு  வேகமாக  குழி பறித்துக்கொண்டு  ஓடுகிறது.  காலை வைத்தால் வெள்ளம்  இழுத்துக்கொண்டு போய்விடும். அதன் கரையில் வெகுகாலமாக  ஓர் அரச மரம்.  ஆற்றின் நீர்  அதை நெருங்காத அளவுக்கு  அது  கரைமேல்  சற்று தூரத்தில் தான் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது.  காலம் செல்லச்  செல்ல ஆற்றின் போக்கு  மாறிவிட்டது. நீர்  கரையை எட்டி  அரச மரத்தடிக்கே  வந்து விட்டது. வேரைப் பறித்து சில நாளில்  அந்த பிரம்மாண்ட மரமும்  வேரோடு சாயப்போகிறது. 

சரித்திர புத்தகமும் சொல்கிறதே  பெரிய பெரிய  சாம்ராஜ்யமும் சக்ரவர்த்தியும்  கூட  போன  இடம் தெரியவில்லை. 

ஆனால் ஒன்று மட்டும்  நிச்சயம். காலையில் கஞ்சி  குடித்துவிட்டு வயலில்  நாள் முழுதும்  உழுகிறானே அந்த சிறந்த மனிதனின் உயர்ந்த வாழ்க்கைக்கு  எதுவுமே சமானமாகாது. உலகமே  பிழைப்பது அவனாலேயே.   உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்  மற்றெல்லோரும் தொழுது  கொண்டு அவர்  பின் செல்பவர்  என்று  வள்ளுவர் கூட  இதை  புரிந்தும் தெரிந்தும் தான் சொல்லியிருக்கிறார். எனவே  உழவைத்தவிர  மற்றெந்த வேலைக்கும்  பழுது கட்டாயம் உண்டு  என்கிறாள்  ஔவை.

''ஆற்றங் கரையின் மரமும் அரசறிய 
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு''


ஔவை நம்மை விட  சிறந்த முற்போக்கு வாதி.  அதுவும்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. கழகம் இல்லாத  சங்கம் இருந்த  காலத்திலேயே சீர்த்திருத்த வாதி அவள்.  

சாதி  என்ன  சாதி?  அதெல்லாம் ஒன்றுமே இல்லை.  ரெண்டே  ரெண்டு தான்  ஆண்சாதி  பெண் சாதி . இயற்கை வித்தியாசத்தை தவிர வேறெதற்கும் இடமில்லையே.  நீதி சாஸ்திரம் எல்லாம் தெரிந்த பெரியோர் என்ன சொல்கிறார்கள். ''மனிஷன்லே எவனய்யா பெரியவன், எவன் சிறியவன்?    இந்த உலகத்திலே  எவன்  நாலுபேருக்கு  தர்மம் தானம் எல்லாம் செய்து  உதவுகிறானோ அவன் தான் பெரியவன். பிச்சைக்காரன் தட்டிலிருந்து கூட  காலணா திருடி சேர்த்துவைப்பவன் மனிஷன்லேயே  ரொம்ப  தாழ்ந்தவன் -- ஏன்,   மனிஷனே இல்லை  என்று கூட  சொல்லுகிறாள் ஔவை.   

''சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பொ¢யார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி''

''ச்சே  என்ன உலகம் இது. எதையோ நினைக்கிறோம்,  அது நடந்து விடும் போல்  போக்கு காட்டிவிட்டு  வேறு ஏதோ நடக்கிறது. ஏமாற்றம்.   இதைவிட  கொடுமை  ஏதோ  ஒண்ணு நடக்காம இருக்கணுமே என்று  வேண்டுவோம்.  அது  நேரம் தப்பாமல் வந்து நிற்கும். தடுக்க வழியில்லையே.  ஒன்று  நடக்கப்போகிறது  என்று கூட  நினைக்காமலேயே  இருப்போம். அது எது என்று கூட தெரியாது.  ஆனால் அது வந்து சேர்ந்து அதன் பலனை அனுபவிக்கிறோம். 
சரி,   இதெல்லாம் நம்முடைய  எத்தனத்தால், பிரயத்தனத்தாலா நடக்கிறது? நமக்கும் மேலே  ஒருவன்.    அவனன்றி,  அந்த சிவனன்றி ஓரணுவும்  அசையாதே  என்று  ஔவை  முடிக்கிறாள்  ஒரு  பாடலை. படித்தால்  நன்றாகவே புரியும்.

''ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.''  

முடிந்த போதெல்லாம் ஔவையை  சந்திக்கலாமா? 

No comments:

Post a Comment