Monday, July 6, 2015

அம்பாள் 02

இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு  கீழ்கண்ட முறைப்படி  அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.

அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்

மஞ்சள் பொடி -ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.

ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி

பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்.

பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்.

தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.

நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.

தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.

கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.

சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.

வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.

பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.

எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.

அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.

இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.

பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.

பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.

சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.



ANBUDAN
<>KSR<>
++++++++++++++++++++++
ஆதி யனாதி யகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே+++++++++++++++
அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
'நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்' என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா? ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.

அவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார். அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும். எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிருக்கும்! இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.
எதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார். அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்கவேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார். பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார். சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார். சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார். ஜனங்களுக்கு, 'இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்' என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரிரு சந்தர்பங்களில் காட்டிக் கொள்வார்கள். கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளூர இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள். உள்ளூரத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்தபோதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.
இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. பரமேசுவராவதாரமான ஆசார்யாள், சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக - இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.
நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்
"பகவான்" என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது ஸெளந்தரிய லஹரியின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.
'ஸெளந்தரிய லஹரி' போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தரியம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது 'ஸெளந்தரிய லஹரி'. இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த நம் ஆச்சாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை. ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து அம்பாளின் சரண கமலத்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார். (ப்ரதீப ஜ்வாலாபி:என்று தொடங்கும் ஸ்லோகம்)
அம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது? சூரியனுக்கு கர்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது" என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே? கர்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே! சூரியனால்தான் கர்ப்பூரத்திற்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம்? சூரிய ஒளியில் கர்ப்பூரத்தின் ஸ்வாபமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப்போவதைத்தான் பார்க்கிறோம். அம்பாளைத் தாம் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் ஸ்ரீ ஆச்சார்யாள்.
இன்னோர் உதாரணம் சொல்கிறார்: "சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்" என்கிறார். சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள். வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக (poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபச்சாரங்களில் ஒன்றாக 'அர்க்கியம் சமர்ப்பயாமி' என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும்? அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆச்சார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.
முன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம்.
"சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்" என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் - அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆச்சார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!
அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++
இயற்கை ஏமாற்றுகிறது!
அம்பாள் ஏமாற்றுகிறாள்!
மனிதனுக்கு பலவிதமான இச்சைகள், பாசங்கள், ஆசைகள். தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கிறான்; அதில் பூரித்துப் போகிறான்; ஆனால் இது சாசுவதமான பூர்த்தியா, பூரிப்பா என்றால் இல்லவே இல்லை. இன்னோர் இச்சை அப்புறமும் இன்னொன்று என்று பிரவாகமாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஓயாத அலைச்சலுக்கு நடுவில் அவ்வப்போது இப்படி ஒரு பூரிப்பும் பெறுகிறான். இது ஒரு விதத்தில் அம்பாள் செய்கிற கிருபை! இன்னொரு விதத்தில் அவளே செய்கிற ஏமாற்று வித்தை!
தான் ஆசையும் பாசமும் வைப்பவர்கள், திருப்பித் தன்னிடம் ஆசையும் பாசமும் வைத்தால் ஒரேடியாகச் சந்தோஷப்படுகிறான். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகள் பெற்று இவ்வாறு தன் இச்சை பூர்த்தியானதாக சந்தோஷப்படுகிறான். குழந்தையை இவன் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது அது 'களுக்' என்று சிரித்தால், 'அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது?' என்று ஒரே ஆனந்தம் அடைகிறான். அதை மேலும் அன்போடு கவனத்தோடு வளர்க்கிறான்.
மனிதன், இந்த காம இச்சை, வாத்ஸல்யம் எல்லாம் தன் சுகத்துக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அதுதான் இல்லை. பல ஜீவர்கள் மறுபடி பிறவி எடுத்துத் தங்கள் கர்மத்தை அநுபவித்தாக வேண்டும். முடிவாகக் கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷநிலையைப் பெற வேண்டும். அதற்காகத்தான் இவனுக்குக் காமமும் கலியாணமும் சந்ததியும். ஆனால், இவன் தன் இன்பத்துக்கென்று நினைத்து ஆனந்தப் படுகிறான். இப்படியாக மனுஷ்யனை இயற்கை ஏமாற்றுகிறது. இயற்கை என்றால் என்ன? அம்பாள் ஏமாற்றுகிறாள்.
இப்படி மநுஷ்யனை பலவிதத்தில் ஏமாற்றியாகிறது! பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது? இல்லை. இவன் தன் கர்மாவை அநுபவிப்பதற்கு உடம்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு வளருவதற்கு ஆகாரம் வேண்டும். ஒரே ருசியுல் ஆகாரம் இருந்தால் சாப்பிட அலுத்துப் போகும். அதனால் - இயற்கை - அம்பாள் - பலவித ருசிகளைக் காட்டி இவனைச் சாப்பிட வைத்து, இவனை, 'ருசியாகச் சாப்பிட்டோம்' என்று சந்தோஷப்படவும் செய்து, இவன் கர்மாவை அநுபவிக்க வசதியாக உடம்பை வளர்க்கிறாள்.
தன் குழந்தையிடம் உள்ள அபிமானம் பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் இவனுக்கு இல்லை. 'எனது'; 'எனது' என்று இந்தக் குழந்தையிடமே அலாதி வாஞ்சை காட்டிப் பூரித்துப் போகிறான். எல்லாக் குழந்தைகளிடம் இவனுக்கு ஒரே மாதிரியான அபிமானம் இருந்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்து குளிப்பாட்டி, உணவூட்டி தூங்க வைத்து, அதற்காகவே உடல், பொருள், ஆவியைச் செலவு செய்து வளர்ப்பானா? அந்த குழந்தை வளர வேண்டும் என்பதற்காகவே அதனிடத்தில் இவனுக்கு விசேஷ அபிமானம் உண்டாகச் செய்திருக்கிறாள் அம்பாள்.
'ஒரு சரீரம் பிறந்து வளருவதற்காக இவனிடம் கர்மத்தை வைத்து, பிறகு வாத்ஸல்யத்தைத் தந்திருக்கிறாள் அம்பாள். இவனுடைய சரீரம் வளருவதற்காகவே இவனுக்கு ருசி, பசி முதலியனவற்றை அம்பாள் வைத்திருக்கிறாள்' என்று சொன்னேன். 'சரி, இப்படி இவன் வாழ்வதாலோ, இவனால் இன்னொரு ஜீவன் பிறந்து வளர்வதாலோ என்ன பிரயோஜனம்! பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன்? இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன? ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் கூடத் தோன்றக் காணோமே!' என்று சந்தேகம் வரலாம்.
இப்படிச் சந்தேகப்பட வேண்டாம். ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் உண்டாகின்றன. பழம் உண்டாவதன் பயன் அதன் கொட்டையிலிருந்து மீண்டும் ஒரு மரம் தோன்றுவதற்குத்தான். ஆனால் ஒவ்வொரு மாமரத்திலும் உண்டாகிற அத்தனை பழங்களில் உள்ள வித்துக்களும் மரமானால் உலகிலே வேறெதற்குமே இடம் இராதே. ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானால் நாம் திருப்திப்படவில்லையா! பாக்கியெல்லாம் வியர்த்தமாயிற்றே என்றா வருத்தப்படுகிறோம்?
அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் வீணாகப் போனாலும் பரவாயில்லை. நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும். அப்படிக் கோடானு கோடி ஜீவர்களில் ஒன்று தோன்றவே, இத்தனை காமமும், சஞ்ஜலமும் இன்ப துன்பமும் வைத்திருக்கிறது. நாம் இத்தனை பேரும் வாழ்வதன் பயனும் அந்த ஒருத்தன் தோன்றுவதுதான்.
உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான்! அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது! உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாறுக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"நமந்த்ரம் நோயந்த்ரம்ததபிச நஜானேஸ்துதி மஹோ நசாஹ்வானம் த்யானம் ததபிச நஜானே ஸ்துதிகதா" 

அம்மா எனக்கு மந்திரம் தந்திரம் துதுப்பது மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்வது இப்படிப்பட்ட வழிபாடுகள் எதுவும் தெரியாது.
  
“மத்ஸம பாதகி நாஸ்தி பாபகித்வத்ஸமா நஹி ஏவம் ஞாத்வா மஹாதேவி யதாயோக்யம் ததாகுரு”

என்னைப் போல் குற்றம் செய்தவர் 


யாருமில்லை. பாவத்தைப் போக்கடிப்பதில் 

உனக்கு நிகர் யாருமில்லை. மகாதேவியே என் 

தேவைகளை நீயே அறிந்து அதற்குத் தக்கபடி 

எனக்கு அருள்புரிவாயாக

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமாக்ஷியின் கண்கள்
நம் அவயவங்களில் கண் மிகவும் முக்கியம். 'என் கண்ணே' என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி 'காதே, மூக்கே' என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும்? காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது அவளது கண் விசேஷத்தையே சொல்கிறது.
காமாக்ஷியின் கைகளில் மன்மதனின் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆச்சாரியாள் 'ஸெளந்தரிய லஹரி'யில் கவித்வ நயத்தோடு சொல்கிறார். ('ப்ருவெளபுக்நே கிஞ்சித்' என்கிற ஸ்லோகம்)
என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும். லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன. ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல! சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்? முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும்? இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.
இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு. அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஒடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான். அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சமும் முழுதிடமும் அன்புகொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்துகொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்தது; அம்பாளுடைய கவலையும் தீர்ந்தது.
வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசாரியாள் துதிக்கிறார்.
ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் - அது எப்போதும் ரீங்காரம் செய்வது. இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில் - அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.
வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்? ஸாக்ஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கே அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள். ஆகவே கவித்வ அழகுக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வெறித்தோடச் செய்கிறான். இதிலிருந்தே அவளுடைய கிருபை இருந்தால் தான் இந்த இந்திரியங்களை வசமாக்கி, ஒடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.
தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறாள். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நாம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையைச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக்கொண்டு அம்பு என்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.
அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் 'ஸெளந்தரிய லஹரி'யில் இருக்கிறது. 'த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா'என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசாரியாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக்கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக்கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, 'தமக்கும்கூட கிட்டவேண்டும்' என்கிறார் - பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசாரியாள்.
காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் - 'த்ருசா த்ரா கீயஸ்வா' என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன்பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள். அம்பாளுக்கும் நாம் எல்லோரும் பச்சை குழந்தைகள்தான். பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவள் பார்வைக்குத்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்திற்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டுபோய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது. அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற "நீலோத்பல புஷ்பம்" மாதிரி இருக்கின்றனவாம். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. நீண்ட நேத்திரங்கள், நீலமான நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள் - இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். 'இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப்பிரவாகத்தில் என்னையும்கூட முழுகும்படியாக செய்தருளேன்' என்கிறார். 'மாம் அபி' - 'என்னைக்கூட' என்கிறார். "எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா" என்கிறார். 'தீனம்', 'மாமபி' என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவராவதாரமான ஆச்சாரியாள். 'எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன்' என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது - எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, 'உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்' என்கிறார். 'அனேனாயம் தன்யோ பவதி'. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தானம் கிடைக்கிறது, அதற்குமேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.
'தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்' என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளிபிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது - சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்துவிடாது. நானோ அதன் ஸ்பரிஸத்தால் நிறைந்தவனாகிவிடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.
என்னையும் என்று 'உம்' போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆச்சாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசாரியாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்து அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கிவிடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்.

No comments:

Post a Comment