KSR
அண்டம்= பிரபஞ்சம்
பிண்டம் = நமது உடல்
அண்டம், பிண்டம் என்பதெல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இவை வேத காலம் முதல் வழங்கி வரும் சொற்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றால் என்ன பொருள்? நாம் பிரபஞ்சத்தில் காணும் எல்லாவற்றின் சிறு வடிவமே நமது உடல். இது இந்து மதத்தில் உள்ளது வெளிநாட்டினருக்குத் தெரியாது. அவர்கள் இதை கிரேக்க மொழியில் இதைப் பார்த்தவுடன் இது கிரேக்கர்களின் கண்டுபிடிப்பு என்று ‘என்சைக்ளோ பீடியா’ (கலைக் களஞ்சியம்) எல்லாம் எழுதி வைத்து விட்டனர். அவர்கள் இதை மைக்ரோகாஸ்ம், மேக்ரோ காஸ்ம் என்று அழைப்பர்.
இது எப்படி கிரேக்க மொழிக்கும் போனது? இந்துக்கள் வேத காலத்துக்குப் பின்னால் ஐரோப்பா முழுதும் குட்யேறி வேத நாகரீகத்தைப் பரப்பினர். விஞ்ஞான ரீதியில் அமைந்த சம்ஸ்கிருத மொழியைப் பரப்பினர். இதனால் கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் பிறந்தன. இதற்குப் பின் ஐரோப்பிய மொழிகள் தோன்றின. மொழிகளில் இப்படி அபூர்வ ஒற்றுமை கண்டவுடன், வெள்ளைக்காரகள், அங்கிருந்து நாம் இங்கு வந்ததாகக் கதை கட்டிவிட்டனர். ஏனெனில் இது இந்தியாவை அவர்கள் ஆளவும் மதத்தைப் பரப்பவும் வசதியாக இருந்தது. ஆக அந்தக் காலத்திலேயே இந்தக் கொள்கை அங்கு போனதற்கு எடுத்துக் காட்டாக வேதத்தில் உள்ள சரமா நாய்க் கதை கிரேக்க இதிஹாசத்தில் ஹெர்மஸ் என்ற பெயரில் உள்ளது. பஞ்ச பூதம், சப்த ஸ்வரம், பூமி என்பவள் தாய் — முதலிய கொள்கைகளை அவர்கள் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டனர். அதில் ஒன்றுதான் இந்த அண்டம்—பிண்டம் பற்றிய கொள்கை.
பிதகோரஸ் முதலிய கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை நன்கு அறிவர். அவருக்குப் பின் வந்த சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ, அவரது சீடர் அரிஸ்டாடில், அவரது சீடர் அலெக்ஸாண்டர். இதனால் அலெக்சாண்டருக்கு இந்தியா மீதும் சாது சந்யாசிகள் மீதும் அபார பற்று.
“யத் அண்டே தத் பிரஹ்மாண்டே”
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதை வடமொழியில் யத் அண்டே த பிரம்மாண்டே – என்பர். இதை கிரேக்கர்கள் மைக்ரோ காஸ்ம் (உடல்), மேக்ரோகாஸ்ம் (பூமி அல்லது பிரபஞ்சம்) என்றனர். உபநிஷதங்களும், “ஒன்றே எல்லாவற்றிலும் உள்ளது, எல்லாம் ஒன்றில் உள்ளது” — என்று கூறின. எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. அவைகளைத் தனியாகப் பிரிக்கமுடியாது என்றனர். விஞ்ஞானிகள் அணு மற்றும் அணுசக்தி பற்றிக் கொண்ட கருத்துகள் இதே போல இருக்கும். உபநிஷதங்கள் பிரம்மத்தையும் ஆத்மாவையும் வருணிப்பது விஞ்ஞான- பௌதீக கருத்துக்களை ஒத்திருக்கும்:
“இது பெரியதுக்குள் பெரியது, சிறியதெல்லாவற்றையும் விடச் சிறியது. பருப்பொருளும் அல்ல; நுணுக்கமானதும் அல்ல. தீயும் அல்ல, தண்ணீரும் அல்ல. நிழலும் அல்ல, இருட்டுமல்ல; ஆகாசமுமல்ல, வாயுவுமல்ல; எதிலும் ஒட்டாதது, சுவை இல்லாதது, வாசனை இல்லாதது, கண், காது, மூக்கு, வாய் இல்லாதது.உள்ளுக்குள் இல்லை, வெளியே இல்லை. எடுத்தாலும் குறையாது. அதிலிருந்து அதை எடுத்தால் அது குறையாது, அதுவே மிஞ்சி நிற்கும் (பூர்ணமதப் பூர்ணமிதம் ……………….. பூர்ணம் ஏவா உதிச்யதே)- பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள இவை எல்லாம் இயற்பியலில் “குவாண்டம் தியரி” போல இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுவர்.
இந்துக்கள் எல்லாவற்றையும் விட வேகமானது மனம் என்பர். ஒளியானது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்து ஓராண்டில் கடக்கும் தொலைவை ஒளி ஆண்டு என்பர். இந்த வேகத்தை எதுவும் எட்ட முடியாது. இதற்கு அருகில் கூட வரமுடியாது என்கிறது விஞ்ஞானம். ஆயினும் மனோவேகம் என்பது 500 ஆண்டு ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளதையும் விட ஒரு நொடியில் நினைக்கும் சக்தியாகும். ஆனால் அவ்வேகத்தில் போக முடியுமா? நினைப்பது வேறு, போவது வேறு அல்லவா? ஆயினும் இந்து சாது சந்யாசிகள் அந்த வேகத்தில் செல்ல முடியும் என்கின்றனர். நாரதர் முதலிய த்ரிலோக சஞ்சாரிகள் நினைத்த மாத்திரத்தில் இவ்வாறு பயணம் செய்தனர்.
சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது:
இருதயத்தில் ஒரு சிறு ஆகாசம் உள்ளது. இது விரிவடையும் அளவுக்கு வெளியே ஆகாசம் உள்ளது. அதை எல்லோரும் அறிய வேண்டும். வெளியே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் உள்ளடக்கிய பேராகாசம் இருதயத்தில் உள்ள ஆகாசத்துக்குள் இருக்கிறது.
சுவாமி விவேகாநந்தரும் இதை தனது சொற்பொழிவுகளில் தந்துள்ளார். நம்முடைய மனது போலவே பிரபஞ்ச மனது ஒன்று உள்ளது. எல்லாம் ஒன்றினுள் ஒன்று அடக்கம் என்பார்.
திருமூலர்
தமிழில் உடல் என்பது பிண்டம் என்றும், பிரபஞ்சம் என்பது பிரம்மாண்டம் என்றும் பல பாடல்களில் வருகிறது. ஆயினும் திருமூலர்தான் இக்கருத்தை அதிகமான பாடல்களில் சொல்கிறார். இதோ ஒரு பாடல்:
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
கருட புராணம்
சாதாரண மனிதனுக்குப் புரியவைக்க உடலில் உள்ள ரத்த நாளங்களை ஆறுகளுக்கும், மேடு பள்ளங்களை- மலைகள் பள்ளத் தாக்குகள் ஆகியவற்றுக்கும், முடி முதலியவற்றை தாவரங்களுக்கும் ஒப்பிடுவர்.
கருட புராணத்தில் ஒரு நீண்ட வருணனை உள்ளது:
உள்ளங்கால்=அதலம்
கணைக்கால்=விதலம்
முழந்தாள்=சுதலம்
அதற்குமேல்=நிதலம்
தொடை=தராதலம்
ஆசனவாய்ப் பகுதி=ரசாதலம்
இடை=பாதாளம்
நாபி=பூலோகம்
வயிறு=புவர் லோகம்
இருதயம்=சுவர்கம்
தோள்=மஹாலோகம்
முகம்=ஜனலோகம்
நெற்றி=தபோலோகம்
தலை=சத்தியலோகம்
திரிகோணம்=மேரு
கீழ்க்கோணம்=மந்தரம்
வலப்பக்கம்= கயிலை
இடப்பக்கம்= இமயம்
மேற்பக்கம்=நிஷதம்
தென்பக்கம்=கந்தமாதனம்
இவ்வாறு ஈரேழு 14 புவனங்களையும் மனித உடலுக்குள் அடக்கிய பின்னர் இடக்கை ரேகைகளை வருண பர்வதத்துகும்,எலும்பை நாவலந்தீவுக்கும், மேதசை சாகத் தீவுக்கும், தசயை குசத் தீவுக்கும்,நரம்பை கிரவுஞ்ச தீவுக்கும் ஒப்பிட்டுவிட்டு ஏழு கடல்களை உடலில் ஓடும் திரவங்கள் ஆகியவற்றுக்கு ஒப்பிடுகிறது.
பின்னர் நவக் கிரஹங்களை கீழ்கண்டவாறு ஒப்பிடும்:
சூரியன்= நாத சக்ரம்
சந்திரன்=பிந்து சக்ரம்
அங்காரகன்=நேத்திரம்
புதன்=இருதயம்
குரு= வாக்கில்
வெள்ளி/சுக்ரன்
சனி=நாபி
ராஹு=முகம்
கால்=கேது
இவை எல்லாம் இந்துக்களின் சிந்தனை சென்ற வழித் தடத்தை காட்டும். அறிவியல் பூர்வமாகச் சிந்தித்ததோடு பிரபஞ்சத்தையே தன்னில் – ஒரு மனிதனிடத்தில் – அடக்கிவிட்டனர்.
அஹம் பிரம்மாஸ்மி
நானே பிரம்மம் என்பது வேத வாக்கு. நான் என்பதை சம்ஸ்கிருதத்தில் ‘அஹம்’ என்பர். சம்ஸ்கிருத அரிச் சுவடியில் அ- என்பது முதல் எழுத்து, ஹ—என்பது கடைசி எழுத்து. உலகிலுள்ள எந்தப் பொருளையும் இந்த எழுத்துக்களால் சொல்லிவிடலாம். ஆக அஹம் – நான் – என்பது உலகம் முழுவதையும் உள்ளடக்கியது. அஹம் என்றால் உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாம் குறிக்கிறோம்:-
அஹம்= பிண்டம்
அ – – ஹ = பிரம்மாண்டம்
அஹத்தில் (நான்/என்னில்,பிண்டத்தில், எனது உடலில்) அடங்கிவிட்டது பிரம்மாண்டம்!!!
KSR
No comments:
Post a Comment