Thursday, May 14, 2015

காமாட்சி / காமாக்ஷி



நவாவரண பூஜை


காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று
விட்டால் பாக்கிய சாலிதான்.

ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில்
படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று
விட்டால் பாக்கிய சாலிதான்===========.ஓம் காமாட்சிதாயே போற்றி போற்றி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமாக்ஷியின் கருமை
எந்த நிறமும் இல்லாத சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சிதறல் (Refraction) மூலம் ஒரு நிறத்தைப் பிரித்தால், உடனே மற்ற ஆறு நிறங்களும் பிரிந்து, 'நானும் போகிறேன், நானும் போகிறேன்' என்று வெளிப்படத் தொடங்குகின்றன. இது ஒரு வேடிக்கை: எல்லா வர்ணங்களும் சேர்ந்தால் வர்ணமே இல்லாமற் போகிறது; அந்த வர்ணமில்லாத ஒளியிலிருந்து ஒன்று குறைந்து பிரிந்தாலும், மற்ற வர்ணங்களும், 'நானும் போகிறேன் நானும் போகிறேன்' என்று பிரிந்து வெளிப்படுகின்றன!
பிரம்மம் என்பது நிறமே இல்லாத சுத்த சூரிய ஒளி மாதிரி. அதில் காரியமே இல்லை. ஆனாலும் சகல காரியங்களுக்கும் ஆதாரமான சகல சக்திகளும் அதில்தான் உள்ளன. எல்லா நிறங்களும் சுத்த ஒளிக்குள் இருக்கிற மாதிரி! காரியம் இல்லாத பிரம்மம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதுதான் அதன் முதல் காரியம். இதுவே சாந்தமான பிரம்மத்தில் ஒரு சலனம்தான் ஒளிச்சிதறல் மாதிரி. இந்த ஒளிச் சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. உதய காலத்தில் சுத்த சூரிய ஒளி முதலில் சிவப்பாகத்தானே வருகிறது? அருணோதயம் என்கிறோமே, 'அருண' என்றாலே சிவப்புதான். இப்படிச் சுத்தப் பிரம்மம் சிவப்பாக்கி காரியத்துக்கு வருகிறபோது பிரம்மம் அம்பாளாகிறது. காரியமற்ற பிரம்மம் காரியமயமான சக்தியாகிறது. காமேசுவரி தோன்றுகிறாள். பிரம்மத்துக்குத் தன்னை அறிகிற ஆசை தோன்றியதல்லவா? இந்த ஆசையின் - காமத்தின் - வடிவமே காமேசுவரி. அவளே உலகத்தின் சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் எல்லாவற்றுக்கும் மூலம். உண்மையில் இந்த மூன்று தொழில்களும் மாயையில் உண்டானவைதான். மாயாசக்தியால் பிரம்மத்தை மறைத்து, அதனிடத்தில் உலகம் என்ற கற்பனையைக் காட்டுகிறாள். இம்மாதிரி மாயாசக்தியினால் பிரம்மத்தை மறைத்துப் பிரபஞ்சத்தை காட்டுவதை நாலாவது தொழிலாக, திரோதானம் அல்லது திரோபவம் என்று சொல்லுவார்கள். படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் இவறுக்கு மேலாக அநுக்கிரகம் (அருள்) என்கிற ஐந்தாவது தொழிலும் இருக்கிறது. பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்துத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறாளே அதுதான் அநுக்கிரகம். இப்படி ஐந்தொழிலைச் செய்வதால் அம்பாள் 'பஞ்ச க்ருத்ய பராயணா' எனப்படுகிறாள்.
சிருஷ்டி செய்கிற பிரம்மா, பரிபாலிக்கிற விஷ்ணு, சம்ஹார ருத்ரன், மாயையின் அதிபதியான ஈஸ்வரன் இவர்களை நாலு கால்களாக் கொண்ட மஞ்சத்தில், சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியான காமேசுவரி வீற்றிருக்கிறாள்; பரப் பிரம்மமான காமேசுவரியின் இடப்புறத்தில் அநுக்கிரஹ மூர்த்தியாக அமர்ந்திருக்கிறாள். காமேசுவரன் பிரம்மம், காமேசுவரி பிரம்மசக்தி; இவர்கள் ஸதிபதிகள்.

காமேசுவர - காமேசுவரி என்கிற சிவப்பு பிரிந்தவுடன் மற்ற வர்ணங்களும் வெளியே ஒடிவர வேண்டுமல்லவா? இந்த நியாயப்படி செம்மஞ்சளான பிரம்மாவும் லக்ஷ்மியும் வெளிப்பட்டார்கள். நீலமான மகாவிஷ்ணுவும் பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும் ஸரஸ்வதியும் தோன்றிவிட்டார்கள். பிரம்ம சக்தியிலிருந்து இரட்டை இரட்டையாகத் தோன்றிய இந்த மூன்று ஜோடியில் ஒவ்வொரு ஜோடியும் சகோதர சகோதரிகள். அதாவது பிரம்மாவும் லக்ஷ்மியும் உடன் பிறப்புகள்; விஷ்ணுவும் பார்வதியும் உடன் பிறப்புகள்; ருத்திரனும் ஸரஸ்வதியும் உடன் பிறப்புகள். பிரம்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் தங்க நிறம்; தாமரை ஆசனம். பிரம்மம் ஜீவராசிகளைப் பெருக்கினார்; லக்ஷ்மி, அவர்களின் அநுபோகத்துக்கான ஐசுவரியத்தைப் பெருக்கினாள். நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும் பார்வதியும் இப்படியே உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும் மாயா விலாஸமும் முக்கியமாக இருக்கிற நிலை அது. சிவன் கோவில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் பதியோடு இல்லாமல் தனித்து இருக்கிற அம்பாள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். நாராயணி, சியாம கிருஷ்ண சகோதரி என்றெல்லாம் இதனால்தான் பார்வதியைச் சொல்வது. சிவனும் ஸரஸ்வதியும் சகோதர சகோதரிகள். சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிர்வெட்டாக, பத்தினி சம்பந்தம் இன்றி, அதாவது பார்வதியின் கலப்பில்லாமல் தனித்து ஸ்வச்சமாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியைப் பார்த்தால், அவர் ஸரஸ்வதியின் உடன் பிறப்பு என்று தெரியும். ஸரஸ்வதி மாதிரியே அவர் புஸ்தகமும் ஜப மாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள். இருவரும் வெளுப்பு.
பிரம்ம சக்தியிலிருந்த மூன்று ஜோடிகள் தோன்றியதற்குக் காரணம் உண்டு. இவர்களுக்குள் ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணை மணந்தாக வேண்டும். இரண்டே ஜோடி இருந்தால் பெண் கொடுத்து பெண் வாங்கினதாகும். அது யுக்தமில்லை. அதனால்தான் மூன்று சகோதர ஜோடிகள் பராசக்தியில் தோன்றின. பிரம்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு பிரம்மாவின் சகோதரியான லக்ஷ்மியை மணந்தார். வெள்ளை என்பது சத்வ குணம்; செம்மஞ்சள் ரஜோ குணம். நீலம் அல்லது கறுப்பு தமோ குணம். பிரம்மவிஷ்ணு, ருத்திரர்களை அப்படி அடியோடு தனித்தனியாக்கி முக்குணங்களாகப் பிரித்ததோடு நின்று விடாமல், சமரசத்தைக் காட்டவே அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியோர் அவர்களது நிறங்களுக்கு மாறுபட்ட நிறமாக இருக்கிறார்கள்.
பராசக்தியேதான் இத்தனையும் ஆகி, முத்தொழிலும் செய்கிறாள். இருந்தாலும் அவளை 'மாயை, மாயை' என்று நாலாம் தொழிலான திரோதானத்தோடுதான் ரொம்பவும் இணைத்துப் பேசுகிறோம்.
மூக கவி சம்ஹார ருத்ரனின் சக்தியான பார்வதியின் கருநீல நிறத்தைச் சிவப்புப் பராசக்தியின் வர்ணமாககச் சொல்கிறார். மாயையாக இருப்பவளும், மாயையைப் போக்கி ஐந்தாம் தொழிலான (மோக்ஷஅநுக்கிரகத்தைச் செய்பவளுமான பராசக்தியே காமாக்ஷி என்று சொல்லி, அந்தச் சிவப்புக் காமாக்ஷியை ஓரொரு இடங்களில் கறுப்பானவளாகவும் (சியாமாவாகவும்) வர்ணிக்கிறார். சியாமள வர்ணம் கொண்ட பார்வதியைச் சக்தியாகப் பெற்றே வெள்ளைச் சிவன் சம்ஹாரத்தில் இறங்குகிறார். அம்பாளையே சம்ஹார மூர்த்தியாகச் சொல்கிற போதும், அவளைக் காளி என்கிறோம். காளி என்றாலே கருத்தவள் என்று அர்த்தம். அநுக்கிரஹ மூர்த்தியான காமாக்ஷியை ஏன் கருப்பானவளாகவும் அதாவது அழிக்கும் தொழில் செய்கிறவளாகவும் மூகர் சொன்னார்?
வேலை எல்லாம் செய்கிறோம். பிறகு அலுத்துப் போய்த் தூங்குகிறோம். தூக்கம் தமஸின் செயல். அங்கே ஒரே இருட்டு - கறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தூக்கத்தில்தான் மநுஷ்யனுக்குக் கொஞ்ச மேனும் சாந்தி இருக்கிறது. நாளெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிற ஜீவராசிகளுக்கு ஆறுதலாகப் பராசக்தி அன்றன்றும் தூக்கத்தை வைத்து கொஞ்சம் அமைதி தருகிறாள். எனவே தமஸிலேயே ரொம்பவும் அநுக்கிரகம் இருப்பதாகத் தெரிகிறது.
சம்ஹாரம் என்பது பெரிய தூக்கம். தூக்கத்தில் எப்படித் துக்கக் கலப்பே இல்லாத அமைதி நிலையில் இருக்கிறோமோ, அப்படியே சம்ஹரிக்கப்பட்ட ஜீவன் மறுபடியும் ஜன்மா எடுக்கிற வரையில் நானாவித கர்ம அநுபவங்களின் சிக்கலிலிருந்து தப்பி அமைதியில் அமிழ்ந்திருக்கிறது. நமக்குக் கர்மக் கட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலைதந்து விச்ராந்தி தரவே சம்ஹாரத் தொழிலைப் புரிகிறார் சிவபெருமான். 'நான் கர்மா செய்கிறேன்' என்ற அகங்காரத்தை இழந்துவிட்ட ஞானிகளே கர்மச் சூழலிலிருந்து நிரந்தரமாகத் தப்ப முடியும். ஆனால் பாபியும்கூடத் தற்காலிகமாகவேனும் இந்தக் கர்மாநுபவத் தொந்தரவிலிருந்து விடுபட்டு விச்ராந்தி பெறுவதற்குப் பராசக்தி மகாகருணையுடன் சம்ஹாரத்தை அமைத்திருக்கிறாள். விஷ்ணுவின் பரம பக்தரான நம்மாழ்வார், 'முனியே நான்முகனே, முக்கண்ணப்பா' என்று மும்மூர்த்திகளையும் அழைக்கும்போது, சம்ஹார மூர்த்தியான ருத்திரனைத்தான் 'அப்பா' போட்டு அருமையுடன் கூப்பிடுகிறார். பரம தயாளுவான ஒரு தகப்பனார், தப்புச் செய்கிற குழந்தையையும், 'அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்' என்று சொல்கிற மாதிரி, பரமேசுவரன் சம்ஹார காலத்தில் நமக்கெல்லாம் ஓய்வு தந்து ஆறுதல் அருளுகிறான். இதையே, "முக்கண்ணப்பா!" என்று வாய்விட்டுக் கூப்பிட்டுக் காட்டுகிறார் ஆழ்வார். இப்படி ஸம்ஹரிக்கிற ருத்திரனின் சக்தியான பார்வதியின் நிறம்தான் கறுப்பு.
லோகத்தை விட்டால்தான் சஞ்ஜலங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் என்கிற நிரந்தர சாந்தியைப் பெற முடியும். சாந்தியோடு இருக்கிறோம் என்று உணர்ந்து அமைதியில் இருப்பதே ஸமாதி நிலை. என்றும் கலையாத சாசுவத நிலை அது. இதுவே பராசக்தியின் 'அநுக்கிரகம்' என்கிற தொழிலால் அருளப்படும் நிலை. இதற்கடுத்த நிலை சாந்தியோடு இருக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலே அப்படியிருக்கிற தூக்க நிலை, சம்ஹார நிலை. எனவே அநுக்கிரஹத்துக்கு அடுத்தபடியாக ஜீவராசிகளுக்கு மிகவும் ஹிதமான நிலை சம்ஹாரம்தான்.
பொது வழக்கிலும் நம்மை ஏன் பிரம்மா சிருஷ்டித்தார் என்ற வருத்தத்தாலோ என்னவோ பிரம்மாவை விசேஷமாக வழிபடுவதே இல்லை. மஹாவிஷ்ணுவுக்கு நிறைய வழிபாடு இருந்தாலும் ஜகத் பரிபாலகரான அவரை மனுஷ்ய லோகத்தோடு ரொம்பவும் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாமிகளை, "ஸ்வாமி", "ஸ்வாமி" என்று பரஸ்பரம் கூப்பிட்டுக்கொண்டாலும், தங்கள் ஸ்வாமியைப் பெரும் ஆள் (பெருமாள்) என்றே சொல்கிறார்கள். வேதத்தைப் பார்த்தாலும் விஷ்ணுபரமான மந்திரங்களுக்குப் "புருஷ ஸூக்தம்" என்றே பெயர் இருக்கிறது. 'புருஷ' என்றால் முப்புரங்களான ஸ்தூல - சூக்ஷ்ம - காரண சரீரங்களுக்கு உள்ளே இருக்கிற ஆத்மா என்பது தத்வார்தமானாலும், பொதுவில் 'புருஷ' என்றால் மநுஷ்யன், ஆசாமி என்றே பொருள் கொள்கிறோம். பராசக்தியிடமிருந்து இந்த லோகமெல்லாம் எப்படி வந்தது என்பதைத்தான் புருஷ ஸூக்தம் சொல்கிறது. லோகத்தோடு, மநுஷ்யனோடு இப்படி விஷ்ணுவுக்கு நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது. சம்ஹார மூர்த்தியான சிவனே லோகத்தை விட்டபின் இருக்கிற வைராக்கியத்திற்கு முக்கியமாகச் சொல்லப்படுகிறார். விஷ்ணு ஆலயத்தைப் பெருமாள் கோவில் என்றும் சிவாலயத்தையே ஈஸ்வரன் கோவில் என்றும் சொல்கிற வழக்கமும் இருக்கிறது. விஷ்ணு தாழ்த்தி - சிவன் உயர்த்தி என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது அடியோடு தப்பு. இரண்டும் முழுக்க முழுக்க ஒரே வஸ்துதான். ஆனால் அவரவர் செய்கிற கிருதயத்தைப் பொறுத்து, லோக ரீதியில் அவர்கள் எப்படி நினைக்கப்படுகிறார்கள் என்று காட்டுவதற்காகச் சொன்னேன்.
சிவப்புக் காமாக்ஷியைக் கறுப்பானவள் என்று மூகர் ஏன் சொன்னார் என்று யோசிக்கும்போது, இத்தனை அபிப்பிராயமும் வந்தது. சாசுவத சாந்தி என்கிற மோக்ஷநிலைக்குத் தற்காலிக சாந்த நிலையான ஸம்ஹாரமே மிகவும் கிட்டத்தில் இருக்கிறது. அதனால்தான், சம்ஹார சக்தியான பார்வதியின் கறுப்பு வர்ணத்தையே மோக்ஷம் அநுக்கிரகிக்கும் காமேசுவரியின் வர்ணமாகவும், மூகர் கூறியிருக்கிறார் என்று சொல்ல வந்தேன். 'பரம ஞானிக்கு அவர் சாசுவத சாந்தம் தருவது பெரிய கருணையில்லை; பாபாத்மாவுக்கு சம்ஹாரத்திலே தற்காலிக அனுமதி தருவதுதான் மகா கருணை' என்று நினைத்து, சம்ஹார சக்தியின் கறுப்பு நிறத்தையே சிவப்புக் காமாக்ஷியின் இன்னொரு நிறமாக ஸ்துதி செய்தார் போலிருக்கிறது.
பராசக்தியின் ஸத்வகுணம் மகாவிஷ்ணுவாக உலகைப் பரிபாலிக்கிறது; அவளுடைய ரஜோ குணம் பிரம்மாவாக உலகைப் படைக்கிறது; அவளுடைய தமோ குணம் ருத்திரனாக லோகத்தை சம்ஹரிக்கிறது. இந்த ஸம்ஹாரத்தில் எந்த யோக்கியதையும் இல்லாத ஜீவர்களும் சாந்தி அநுபவிக்க அருள் செய்கிறாள். இதனால்தான், அவளது வர்ணத்தைச் சொல்லும்போது ஸம்ஹார சக்தியின் கறுப்பை விசேஷித்துக் சொல்கிறார் மூககவி. ஸத்வம், ரஜஸ் என்ற இரண்டைவிடத் தமஸ் தாழ்ந்தது என்று ஒரு கோணத்தில் ( angle ) தோன்றினாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால் தமஸே "அநுக்கிரகம்" என்ற பரம உச்சமான ஐந்தாம் தொழிலுக்குக் கிட்டத்தில் இருப்பதால்தான், நிறமாலையில், கறுப்பும் சிவப்பும் இரு வேறு கோடிகளில் இருந்தாலும், அம்பாள் விஷயத்தில் இந்த இரண்டு வர்ணமுமே ரொம்பக் கிட்டத்தட்ட இருப்பதாக மூகர் பாடியிருக்கிறார்

No comments:

Post a Comment