Wednesday, June 10, 2015

அம்பாள் 01

தெய்வத்தின் குரல்: 
ஆசாரியாள் காட்டும் அம்பாள்
நம்முடைய ஆசாரியர்களான ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள். ஸெளந்தரிய லஹரியைத் தவிர, 'ஆனந்த லஹரி', 'தேவி புஜங்கம்', 'த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்', 'த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்' - இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும் 'அன்ன பூர்ணாஷ்டகம்', 'அம்பாஷ்டகம்' மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார். இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம். பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்திருக்கின்றன. ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள். தமக்கு அவளுடைய அநுக்கிரஹத்தை கோருகிற யோக்கியதை கொஞ்சம்கூட இல்லை என்கிற நைச்சியமான எண்ணம் தொனிக்க அநேக இடங்களில் பேசுகிறார். 'ஸெளந்தரிய லஹரி'யில் குறிப்பாக இரண்டு இடங்களில் இந்த அதிவிநயமான மனோபாவம் நம் மனஸைத் தொடுகிற மாதிரி வெளியாகியிருக்கிறது. இவற்றில் ஓரிடத்தில் (த்ருசா த்ராகீ யஸ்யா) அம்பாளின் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்: மற்றதில் (த்ருதீனாம் மூர்த்தானோ) அவளுடைய சரணாரவிந்த ஸ்பரிசத்தை வேண்டுகிறார். அம்பாளுடைய கடைக்கண் வீச்சைத் தம்மீது திருப்புமாறு கேட்கிறபோது, 'என்னையும்கூட (மாமபி) கடாக்ஷித்து அருள்வாயம்மா' என்று கேட்டுக்கொண்ட மாதிரியே, மற்றைய இடத்திலும் "என் சிரசிலும்கூட (மமாபி சிரஸி) உன் திருவடிகளை வைத்து அநுக்கிரஹம் பண்ணுதாயே" என்கிறார். இரண்டு இடங்களிலும் இந்த 'அபி' என்ற சொல்லையே பிரயோகம் செய்திருக்கிறார். தமக்கும்கூட அவளது அநுக்கிரஹம் வேணும் என்று சொல்வதிலிருந்தே, நியாயப்படி பார்த்தால் நமக்கு அதைப் பெற தகுதி இல்லை என்று நினைப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. 'எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா' என்று சொல்லாமல் சொல்கிறார்.
ஞானத்திலாகட்டும், பக்தியிலாகட்டும், புத்தியிலாகட்டும், வாக்கு வன்மையிலாகட்டும், காரிய சக்தியிலாகட்டும், கருணையிலாகட்டும், நம் ஆச்சாரியாளைப்போல பூரண யோக்கியதை உள்ளவர்கள் அவருக்கு முந்தியும் இல்லை, பிந்தியும் இல்லை. அப்படியிருந்தாலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக, நாம் அடக்கத்துடன் எப்படி அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று, நமக்குச் சொல்லிக் கொடுக்கிறமாதிரி மாமபி, மமாபி (என்னையும்கூட கடாக்ஷி! எனக்கும்கூட திருவடியைத் தா) என்கிறார்.
யோக்கியதை இல்லாமல் கேட்கலாமா என்றால் நியாயப்படி அது சரியில்லைதான். ஆனால், நிறைய அநியாயங்களைப் பார்க்காமல், நல்லதையே செய்துகொண்டிருக்கிற அன்பு மயமான வஸ்துக்களும் இருக்கின்றனவே என்று எடுத்துக் காட்டுகிறார். "நல்ல பூர்ணிமை நிலை ராஜாவின் நிலை முற்றத்தில் மட்டுமா விழுகிறது? காட்டிலே இருக்கிற கள்ளிப் புதர்மேலேகூடத்தானே அமிருதமாகப் பொழிகிறது! சந்திரிகை எப்படி யோக்கியதை பார்க்காமல், சகல இடங்களிலும் சமமாக விழுந்து குளிர்ச்சியும் பிரகாசமும் தருகிறதோ, அப்படியே உன் கடாக்ஷ வெள்ளமானது தகுதி வாய்ந்த உத்தம அதிகாரிகளின் மேல் மட்டுமில்லாமல் என் மேலும்கூட விழுந்து என்னையும் ஸ்நானம் பண்ணி வைக்கலாகாதா? ஞானத்தின் பிரகாசத்திலும் காருண்யத்தின் குளிர்ச்சியிலும் என்னை முழுக்கக்கூடாதா?" என்கிறார். 'த்ருசா த்ராகீயஸ்யா' என்ற சுலோகத்தில்.
இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது "வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என்சிரசிலும்கூட வைப்பாய் அம்மா" என்கிறார்.
இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், 'நியாயம் - அநியாயம் என்பவை காரிய - அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்" என்கிறார் (தயயா தேஹி சரணௌ)
வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு. உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது. முன்பே நான் ஞானாம்பிகையையைப் பற்றிச் சொல்கிறபோது கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி 'மமாபி' "எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா" என்கிறார்.
ஒவ்வொரு காரியத்துக்கும் நேராக, முக்கியமான ஒரு பலன் இருப்பதோடு, வேறு சில பலன்களும் ஏற்படுகின்றன. இந்தப் பலன்களை உத்தேசிக்காவிட்டாலும்கூட, அவை பாட்டுக்கு உண்டாகி விடுகின்றன. கேநோபநிஷத்தில் அம்பாளைப் பற்றிச் சொல்லியிருப்பதில் இப்படியே ஞானோபதேசம் என்கிற நேர் உத்தேசத்தோடு, வேறு ஒரு பிரயோஜனமும் நமக்குக் கிடைக்கிறது. இது ஆத்ம ஞானத்துக்கோ அம்பாள் தத்துவத்துக்கோ சம்பந்தமில்லாதது என்றாலும்கூட, இதிலும் ஒரு முக்கியத்துவம் நவீன காலத்தவர்களுக்கு இருப்பதால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன்.
இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், 'புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள். ஆனால் இங்கே கேநோபநிஷத்திலோ, 'ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்' என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. 'ஸ்திரீ', 'ஹைமவதி', 'உமா' என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள். 'ஸ்திரீ' என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை 'உமா' என்று சொன்னதோடு நில்லாமல் 'ஹைமவதி' என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி). இன்றைய இந்த மதத்தின் மூர்த்தி வழிபாடு புராண காலத்திற்கு முற்பட்டது. அது உபநிஷத் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கு அழுத்தமான உட்சான்று (internal evidence ) கேநோபநிஷத்தில் கிடைக்கிறது.
உபநிஷத்தில் ஞானம் தந்தவளாகச் சொல்லப்பட்ட அம்பாளின் பாதத்தைத் தம் தலையில் வைக்குமாறு, ஆசாரியாள் பிரார்த்திக்கிறார். இங்கே அம்பாளே குரு ஸ்வரூபிணி என்பது உறுதியாகிறது. குரு பாதுகை எப்போதும் சிரஸில் இருந்து கொண்டிருப்பதாக மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவ்விடத்தில் எப்போதும் குருவின் திருவடி தீஷை கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
ஞான குருவாக கேநோபநிஷத்தில் தோன்றி, வேத முடிவுக்கு அணிகலனாகத் தன் பாதங்களை வைத்திருக்கிறாள் அம்பிகை. அந்தப் பாதங்களுக்கு உள்ள மற்ற மகிமைகளையும் இந்த சுலோகத்தில் ஆசார்யாள் கூறுகிறார். பெரியவர்கள், மகான்கள், ஆசாரியாள்கள் ஆகியோரின் பாதங்களுக்கு ஜலம் வார்த்து உபசாரம் செய்ய வேண்டும். ஷோடசோபசாரம் என்கிற பதினாறு உபசாரங்களில், பாதங்களில் ஜலம் விடுவதைப் 'பாத்யம்' என்பார்கள். அம்பாளுக்குப் 'பாத்யமாகப்' பசுபதியின் ஜடையிலிருந்து கங்கா தீர்த்தம் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கிறதாம். சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியாக இருக்கப்பட்ட அவளுடைய சரண கமலங்களில், பூத லோகங்களுக்கெல்லாம் பிரபுவானதால் பசுபதி என்று பேர் படைத்த ஈசுவரனும் நமஸ்கரிக்கிறான் என்பது தாத்பரியம். ஈசுவரன் அப்படி இவள் பாதத்தில் தலையை வைத்து நமஸ்கரிக்கும்போது அவனுடைய ஜடையிலிருந்து கங்கா ஜலம் பாதத்தில் விழுமல்லவா? இதைத்தான் 'பாத்யம்' தருவதாகச் சொல்கிறார். ஈசுவரனுக்கு அந்த பிரபுத்வ சக்தியும் மூலமான பிரம்ம சக்தியிடமிருந்துதானே உண்டாயிற்று? அதனால் அவருங்கூட அகம்பாவமில்லாமல் இங்கே வந்து நமஸ்கரிக்கிறார்.
'உத்தம ஸ்திரீகள் பாதங்களில் லாக்ஷாரஸம்' என்கிற செவ்வரக்குக் குழம்பைப் பூசியிருப்பார்கள். அம்பாள் பாதத்தை அலங்கரிக்கவோ வேறு சிவப்பு ஜோதி ஒன்று இருக்கிறது என்கிறார். 'ஹரி' எனப்படும் சாக்ஷாத் நாராயணனின் சிரஸில் குடியிருக்கிற சூடாமணியின் பிரகாசமே, அம்பாளின் பாதத்துக்கு லாக்ஷாரஸமாக இருக்கிறது' என்கிறார் ஆசார்யாள். ஜகத் பரிபாலன கர்த்தாவான மகாவிஷ்ணு அவரது பரிபாலன சக்தியும் பராசக்தியிடமிருந்தே வந்தது என்பதால் அடக்கத்தோடு அவளுடைய சரண கமலங்களில் நமஸ்கரிக்கிறார். அப்போது அவருடைய சிரோ பூஷணம் அம்பாளுக்குப் பாத பூஷணமாகிறது. மஹாவிஷ்ணுவின் கிரீடத்திலே டால் அடிக்கிற சிவப்பு மணி அம்பாளின் பாதத்தில் செங்குழம்பு பூசின மாதிரி இருக்கிறது.
தேவர்கள், ஸ்ரீ மகாவிஷ்ணு, பரமேசுவரன் எல்லோரும் அகம்பாவமே இல்லாமல் ஆராதனை செய்த அம்பாள், நம் அகம்பாவத்தைப் போக்கி ஞான அநுக்கிரஹம் செய்ய வேண்டும். அதற்கு வழியாக, அவளுடைய சரணார விந்தங்களை நம் ஆச்சார்யாள் போல நாமும் தியானம் செய்ய வேண்டும்.
அம்பாளுடைய பதிவ்ரத்தியப் பணிவைப் பல இடங்களில் சொன்ன ஆசார்யாள், இங்கே அவளை ஈஸ்வரனே நமஸ்கரித்ததாகச் சொல்கிறாரே என்றால், இது எல்லாமே லீலைதான். இருவரும் ஒன்றேதான். ஒரு பாவத்தில் இவள் நமஸ்கரிக்கிறாள். இன்னொன்றில் அவர் நமஸ்கரிக்கிறார். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அவரே சாந்தமான ஸத்வஸ்துவாகவும், இவளை சக்திமயமான சித்தாகவும் விசேஷிப்பது வழக்கம்.
'ஸெளந்தரிய லஹரி'யின் முதல் சுலோகத்திலேயே அம்பாளுடைய இந்த அபாரமான சக்தியை ஆசார்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) "சக்தியாகிற அம்மா! பரமேசுவரனான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால்தான் காரியம் செய்வதற்குத் திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்குக்கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்குக் கிடையாது" என்கிறார். தன்னைத் தவிர வேறு ஏதுமே இல்லாததால், எதையும் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது பிரம்மம். இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்துவிட்டன. பிரம்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க சூரியன், நக்ஷத்திரங்களிலிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற எலெக்ட்ரான் வரையில் எல்லாம், எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனஸோ கேட்கவே வேண்டாம். எப்போது பார்த்தாலும் அசைவுதான். இத்தனை அறிவுகளும் அசைவுகளும் எப்படியோ பிரம்மத்தில் வந்துவிட்ட மாதிரி இருக்கின்றன! அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும் அதன் சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சார்யாள், "அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்" என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. மாயா - எது இல்லையோ அதுவே - மாயா. நமக்கு மாயையைப் போக்குகிறவளும் அவள்தான்.
நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்; அவளேதான். இருந்தாலும் விசேஷமாகச் சில ரூபங்களில் தியானித்தால் நம் மனசு லயிக்கிறது. எல்லா ரூபத்துக்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிறவளே பிராண சக்தியாக, மூச்சுக்காற்றாக இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி எல்லாம் அவள் வடிவம்தான். 'மனஸ்தவம்' என்கிற சுலோகத்தில் ஆசார்யாள் இதையெல்லாம் சொல்கிறார்.
இதற்கு முன் சுலோகத்தில் (சரீரம் த்வம்) இரவும் பகலும் அம்பாளின் ரூபங்கள்தான் என்பதை ஆசாரியாள் சொல்கிறார். தாயார் குழந்தைக்குப் பால் கொடுக்கிற மாதிரி சூரியன் சந்திரன் என்கிற இரண்டால் லோகத்துக்கு உணவு அளிக்கிறாள் என்கிறார். சூரியனிடமிருந்துதான் தாவரப் பிரபஞ்சம் க்ளோரோஃபில் உண்டாக்குகிறது. தாவரத்தைச் சாப்பிட்டோ, அல்லது தாவரத்தைச் சாப்பிடுகிற பிராணிகளைச் சாப்பிட்டோதான் எல்லோரும் உயிர் வாழ்கிறோம். (அசைவ உணவு உண்கிறவர்களும் தாவரத்தைச் சாப்பிடும் ஆடு, மாடு, பன்றி போன்றவைகளின் ஊனைத்தான் உண்பார்கள். மாம்ஸ பக்ஷிணிகளான நாய், பூனை, புலி, சிங்கம் இவற்றின் ஊனை உண்பதில்லை). சூரியன் தாவரங்களை வளர்க்கிற மாதிரி, சந்திரன்தான் மூலிகைகளை விசேஷமாக வளர்க்கின்றான். அம்பாள் சூரிய வெப்பத்தாலும், சந்திரனின் நிலவாலும் உலகம் முழுவதற்கும் தன் பாலைப் பொழிகிறாள் என்று இதையே ஆசார்யாள் சொல்கிறார். இதெல்லாம் அவளுடைய ரூபங்கள்.
நம் முதுகெலும்புக்குக் கீழிருந்து சிரசு உச்சிக்கு யோக சாஸ்திரப்படி குண்டலினி சக்தியை எழுப்பிக் கொண்டு போகிற போது அம்பாள் தாமரைத் தண்டை உடைத்தால் வருகிற நூழிலை மாதிரி அத்தனை மெல்லியதாக மேலெழும்பிப் போகிறாள் என்று மந்திர சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. "பிஸதந்து தநீயஸீ" என்று இதையே ஸஹஸ்ர நாமமும் சொல்கிறது. இத்தனை சூக்ஷமமாக இருந்தாலும் அதுவே கோடி சூரியப் பிரகாசமாக இருக்கும்; அதே சமயத்தில் உஷ்ணம் துளிக்கூட இல்லாமல் கோடி சந்திரன் மாதிரி குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த ரூபங்களைத் தவிர சகல சப்தமாகவும், வாக்காகவும் இருக்கிறாள். விசேஷமாக மந்திர சப்தங்களாக இருக்கிறாள். இதெல்லாமுமே சூக்ஷ்ம ரூபங்கள்.
நம் போன்ற சாதாரண ஜனங்களுக்காக ஸ்தூலமாகவே லலிதா, துர்க்கா, புவனேசுவரி என்று பல ரூபங்களில் இருக்கிறாள். இந்த ரூபங்கள் நம் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி புண்ணிய க்ஷேத்திரங்களில் பரமாநுக்கிரஹம் பண்ணி வரும் விக்கிரஹங்களாக உள்ளன.
வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமாரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் - இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!
--------------------------------------------------------------------------------------
வாக்குவன்மை வருக்ஷிப்பாள்
ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது 'ஸெளந்தரிய லஹரி'. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்கு போன போது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைபற்றி செய்திருந்த சௌந்தர்யா லஹரி சுவடிக்கட்டை நம் ஆச்சாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள 'ஸெளந்தரிய லஹரி' உருவாயிற்று.
அதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு! இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்திரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாறும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான்! நந்திகேசுவரர் அதை உறுவிக்கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் "இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்" என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்துவமும் அவளது உபாஸனையாளேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.
அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று 'மூக பஞ்ச சதீ'. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி 'ஆர்யா' என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களைப் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு 'சதகம்' என்று பெயர். தமிழில்கூட, 'தொண்டை மண்டல சதகம்', 'அறப்பளீசுவர சதகம்' என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு 'மூக பஞ்ச சதீ' என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருத்தம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.
அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது 'ஆர்யா த்விசதி' என்பது. த்வி - இரண்டு, சதம் - நூறு. 'ஆர்யா த்விசதி' என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. 'லலிதா ஸ்தவ ரத்னம்' என்றும் அதற்கும் இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். 'பட்டாரிகை' எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே 'பட்டாரகர்' என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன்; இன்னொருத்தர் காளிதாஸர்; மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.
அம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதானமான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.
ஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.
அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய திரி மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். 'பவானி உன் தாஸன் நான்' என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகிவிடுகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் - மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவளைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் செய்கிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்றுவிடலாம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது; வித்யை, செல்வம் எல்லாம் பக்தனுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலே க்ஷணத்தில் மகா கவியானார்.
தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்கு வண்மையையும் வருஷித்தாள்.
கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரத்தையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாககப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக்கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு "பேஷ் பேஷ்" என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான்! அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். 'இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்யையைக் காட்டினேன்?' என்று வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் போட்டு மூடி வைத்து விடுகிறாளாம். "விபஞ்ச்யயா காயந்தீ" எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.
அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.


No comments:

Post a Comment