தெய்வத்தின் குரல்
மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
காஞ்சியில் காமாக்ஷி பொன்மழை பொழிந்தது பற்றி மூகர் 'பஞ்ச சதீ'யில் பாடியிருக்கிறார். (கண்டீக்ருத் ய - ஸ்துதிசதகம்). "துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்" என்கிறார். துண்டீரம் என்பதே தமிழில் தொண்டை மண்டலம் என்பது. பல்லவர்களின் தலைநகரான காஞ்சியைச் சுற்றிய சீமைக்குத் தொண்டை மண்டலம் என்று பெயர். இப்போதும் இந்தச் சீமையில் பொன் விளைந்த களத்தூர் என்றே ஒர் ஊர் இருப்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.
அத்வைத ஸ்தாபகாசாரியரான ஸ்ரீ சங்கரருக்காகக் காலடியில் பொன்மழை பெய்த மஹாலக்ஷ்மி, காஞ்சிபுரத்தில் விசிஷ்டாத்வைத ஆசாரியரான ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்காகவும் பொன்மழை பெய்திருக்கிறாள். வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதாக, அவரை, 'நிகமாந்த மஹா தேசிகன்' என்றே சொல்வார்கள். 'நிகமாந்த' என்றாலும் 'வேதாந்த' என்றாலும் ஒன்றுதான். 'ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்' என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு. குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சம். வடகலை சம்பிரதாயத்திற்கு மூலபுருஷர் அவர். தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிக்ஷை எடுத்துத்தான் ஜீவித்து வந்தார். பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். 'ஸர்வதந்திர ஸ்வதந்திரர்' என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த தேசிகன் அப்படி எதையும் சாதித்துவிட முடியாது என்று நிரூபித்துவிட வேண்டும். 'ஸர்வதந்திர ஸ்வதந்திரப் பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி மானபங்கப்படுத்த வேண்டும்' என்று அவருடைய விரோதிகள் நினைத்து, ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.
பரம ஏழையான ஒரு அசட்டுப் பிராம்மணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இரண்டும் இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகரின் விரோதிகள் இந்தத் தடிமண்டு பிரம்மச்சாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். இந்தப் பையன் போய் அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக்கூடாது. 'ஸர்வதந்திர ஸ்வதத்திர' என்றால், அவராகவே எப்படியோ இவருக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும். அவரால் இப்படிச் செய்யமுடியாது. உடனே, "எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?" என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அந்தப் பிரகாரமே ஏழைப் பையனை அவர்கள் ஏவினார்கள். ஸ்ரீதேசிகனிடம் பிரம்மச்சாரி போய்த் தன் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான்.
(இதிலிருந்து நான் சொல்ல வந்த விஷயத்துக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், என் மனஸில் ரொம்பவும் முக்கியமாக உள்ள இன்னொரு விஷயத்துக்கும் ஆதரவு கிடைக்கிறது. அதாவது அவர் காலத்தில் - அதாவது எழுநூறு வருஷங்களுக்கு முந்தி - பிள்ளை வீட்டுக்காரன்தான் பெண் வீட்டுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். வரதக்ஷிணை வாங்குகிற பழக்கம் இல்லை என்று நிரூபணமாகிறது.)
வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். "ஸ்ரீஸ்துதி" என்கிற உத்தமமான ஸ்தோத்திரத்தால் மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்தார். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்குக் கொடுத்தார். விரோதிகளால் பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. சங்கரர், தேசிகர் இவர்களின் கருணையிலிருந்து வாக்கு மழையாகப் பொழிந்தது; பொன்னும் மழையாகப் பொழிந்தது. அத்வைத ஆசார்யாள், பக்த அநுக்கிரகமாக லக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்தார் என்றால், விசிஷ்டாத்வைத ஆசார்யரோ, விரோதிகளின் ஆளாக வந்தவனுக்கும் அநுக்கிரகத்தோடு அதே லக்ஷ்மியை வேண்டினார்.
மஹாலக்ஷ்மியின் பரமாநுக்கிரகத்தைப் பெற்ற இன்னொரு மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் அவருக்கு உண்டு. ஆனால், அவருடைய முழுப் பெருமை இது மட்டுமல்ல. நாலு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் பண்ணின மஹாபுருஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், (ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்) அர்த்த சாஸ்திரம், இலக்கியத்துறை என்றிப்படி எல்லாவற்றுக்கும் கிரந்தங்கள் உபகரித்தவர் அவர். அவருடைய பெயரே காரணப் பெயராக இருக்கிறது. வித்யா - அரண்யர். அரண்யம் என்றால் காடு. ஒரு பெரிய காட்டில் பல தினுசான மரம், செடி, கொடிகளும் மண்டியிருக்கிற மாதிரி வித்யையின் பல துறைகளும் அவரிடம் செழித்திருந்தன.
இவரைப்பற்றி நான் சொல்லப்போகிற கதையை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்வார்களோ, மாட்டார்களோ? ‘ஹிஸ்டரி'க்காரர் 'மிஸ்டெரி'(அற்புத நிகழ்ச்சி) வந்தால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இன்றைக்கும் ஸயன்ஸுக்குப் பிடிபடாத அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
கதை இதுதான்: பூர்வாசிரமத்தில் வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலக்ஷ்மியைக் குறித்துக் கடும் தபஸ் இருந்தார். இவருடைய சிரத்தையை மெச்சி மஹாலக்ஷ்மி பிரசன்னமானாள். ஆனால், ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள். "இந்த ஜன்மாவில் உனக்குத் திரவியம் பெறுகிற யோக்கியதை இல்லை. அது விதியின் நிர்ணயம். அடுத்த ஜன்மாவில் அநுக்கிரகிக்கிறேன் என்றுகூறி அந்தர்த்தானமாகி விட்டாள்.
பிற்காலத்தில் 'இரண்டாவது சங்கரர்' என்கிற அளவுக்குப் ப்ரக்யாதி பெறப் போகிறவர் இவர். அதற்கேற்றாற்போல், இப்போதே ஆதி சங்கரர் செய்த ஒரு 'சாமர்த்திய'த்தை இவரும் செய்து காட்டிவிட்டார். அது என்ன சாமர்த்தியம்?
தாம் சந்நியாசம் வாங்கிக் கொள்வதற்கு அம்மாவின் அநுமதியைப் பெறுவதற்காக ஆதிசங்கரர் செய்த சாமர்த்தியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அம்மாவோடு குளிக்கப்போன பிரம்மச்சாரி சங்கரர் ஆற்றில் முதலையின் பிடிப்புக்கு வேண்டுமென்றே ஆளானார். தாயார்க்காரி பதறினாள். "அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள நீ அநுமதி தந்தால் முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்றுவிட்டால் அது மறு ஜன்மா போலாகும். இந்த ஜன்மாவில் முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்த ஜன்மாவில் அது என்னைப் பாதிக்காது" என்றார் சங்கரர். அந்தத் தர்மசங்கடமான நிலையில், பெற்ற தாயார் ஒருத்தி அநுமதி தராமலிருக்க முடியுமா? இவ்விதமாக ஆசாரியாள் சாமர்த்தியம் பண்ணி - தாயாரின் அங்கீகாரம் பெற்று - சந்நியாசியாவதாக அப்போதே சங்கற்பம் செய்து கொண்டார். உடனே முதலையும் அவரை விட்டுவிட்டது.
"இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை" என்று மஹாலக்ஷ்மி வித்யாரண்யரிடம் சொன்னவுடன், இவரும் அதே 'தந்திர'த்தை (Tactics) மேற்கொண்டார். அதாவது, உடனே சந்நியாச ஆசிரமம் வாங்கிக்கொண்டு விட்டார். "அம்மா! மறு ஜன்மா வந்துவிட்டது. இப்போது ஜஸ்வரியத்தைக் கொடு" என்று லக்ஷ்மியிடம் சொன்னார்.
அவளும் தன் வாக்குப் பிரகாரம் ஸ்வர்ணத்தை வர்ஷித்துவிட்டாள்.
சுற்றிலும் எங்கு பார்த்தாலும் தங்கமும் நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. 'அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்தல்லவோ போய்விட்டேன். வீட்டின் ஏழ்மை போவதற்காக தனம் யாசித்தேன். இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? சந்நியாசி பணத்தைத் தீண்டவே கூடாதே. சுயம்கிருத அனர்த்தமாக நானாகவே அசட்டுத்தனமாக உபத்திரவத்தை வேண்டி வாங்கிக் கொண்டிருக்கிறேனே! விதிப்பிரகாரம் ஏழையாகவே வாழ்ந்து ஆயுஸை விட்டிருந்தாலும், அடுத்த ஜன்மாவிலாவது இத்தனை ஐச்வரியமும் பெற்று ராஜபோகமாக இருந்திருக்கலாமே" என்று அழ ஆரம்பித்து விட்டார்.
வித்யாரண்யர் மட்டுமில்லை; நம்மில் ரொம்பப் பேர் இப்படித்தான் வேண்டாததற்கெல்லாம் ஸ்வாமியை வேண்டிக்கொண்டு, அவர் நம்மிஷ்டப்படி கிருபை செய்தபின் "அடாடா, நம்மிஷ்டம் என்று ஏன் ஒன்று இருக்கவேண்டும்? அவர் இஷ்டம் என்று விட்டிருக்கக்கூடாதா? இப்போது அறியாமையால் அனர்த்த பரம்பரையை அல்லவா வலிய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம்?" என்று விசனிக்க வேண்டியதாகிறது. நமக்கு எது வேண்டும் என்று அவருக்கே தெரியும் என்று விடுவதுதான் புத்திசாலித்தனம்.
வித்யாரண்யர் மகா புத்திமானாதலால் விசனம் உடனே தெளிந்தது. ஒரு காரணார்த்தமாகத்தான் அம்பாள் இப்படி விளையாடியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டார்.
அது மாலிக்காபூரின் தட்சிண தேசப் படை எடுப்பை ஒட்டிய காலம். துருக்கனான மாலிக்காபூர் ராமேசுவரம் வரையில் போய் ஹதாஹதம் செய்திருந்தான். முக்கியமாக நம் பிரசித்தி பெற்ற ஆலயங்களையெல்லாம் முக்கியமாக பண்ணினான். நம் தர்மங்களை அழித்தான். அந்த சமயத்தில் அதை எதிர்த்து நிற்க, நல்ல திரவிய வசதியுள்ள ஹிந்து சாம்ராஜ்யம் எதுவும் இல்லை.
இப்போது வித்யாரண்யர் இந்த மஹா பெரிய பரம புண்ணியமான காரியத்தை நினைத்தார். 'இத்தனை நிதி கொட்டிக் கிடக்கிறது. அம்பாள் அநுக்கிரகத்தால் ஒரு ராஜ்ய பரிபாலனத்துக்கு உதவி பண்ணும் அளவுக்கு நமக்குப் புத்தி தீக்ஷண்யமும் இருக்கிறது. இந்தச் செல்வ பலம், நம் அறிவு பலம் இரண்டையும் கொண்டு ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தை மேலோங்கி வருமாறு ஸ்தாபனம் பண்ணுவோம்' என்று தீர்மானித்தார்.
அவருடைய சொந்த நஷ்டம் ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே பெரிய லாபமாகப் பரிணமித்தது.
வித்யாரண்யர் சகல சாஸ்திரமும் அறிந்தவர். அவற்றில் சகுன சாஸ்திரம் ஒன்று. அதனால் பெரிய ஸநாதன தர்ம சாம்ராஜ்ஜியம் அமைக்க அப்போதே உரிய சமயம் வந்துவிட்டது என்று தெரிந்து கொண்டார். இன்ன இடத்தில் இன்னாரைக் கொண்டு அதை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவருக்குப் புரிந்தது. அதன்படி அங்கே ஆடு மேய்க்கிற இரு குறும்பர்களைப் பார்த்து இவர்களே புதிய ராஜ்ஜியத்தில் அரசாள வேண்டியவர்கள் என்று தீர்மாணித்துக் கொண்டார். அண்ணன் தம்பிகளான அந்த இரண்டு பேருக்கு ஹரிஹரன், புக்கன் என்று பெயர். அந்த துங்கபத்திரைப் பிரதேசத்திலேயே ஒரிடத்தில் ராஜதானியை ஸ்தாபித்து, அந்த இரண்டு பேரையும் அங்கே ராஜாக்களாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அந்த இடம்தான் ஹம்பி. "ஹம்பி ரூயின்ஸ்" என்று அதன் இடிபாடுகளை இப்போதும் வெளி தேசங்களிலிருந்து வருகிறவர்கள் கூடப் பார்த்து வியக்கிறார்கள். பம்பா ஸரஸ் என்று ராமாயணத்தில் வரும். அது கிஷ்கிந்தையைச் சேர்ந்த இடம். மற்ற மொழிகளில் 'ப'வாக இருப்பது கன்னடத்தில் 'ஹ' ஆகும். தமிழில் 'பால்' என்பது கன்னடத்தில் 'ஹாலு'. நம்முடைய 'பவளம்' அவர்களுக்கு 'ஹவளம்'. இப்படியே 'பம்பா' தான் 'ஹம்பா' - இன்றைய ஹம்பி.
மஹாலக்ஷ்மியின் அநுக்கிரகத்தால் கிடைத்த ஐசுவரியத்தைக்கொண்டு ராஜ்ய பரிபாலனம் பண்ணவும், பெரிய சைனியம் திரட்டித் துருக்கரை எதிர்த்துப் போரிடவும் வசதி கிடைத்தது. ராஜ்ய ஸ்தாபனத்தின் போதே வித்யாரண்யர் அது பெரிய வெற்றி அடைந்து ஜயக்கொடி நாட்டும் என்று அதன் ஜாதகத்தைக் கணித்து விட்டார். அதற்கேற்றாற்போல் அது விஜய நகர சாம்ராஜ்யம் என்றே பெயர் பெற்று ஒங்கி வளர்ந்தது. ஆனால், அது அதற்கு ஆதிகாலப் பெயரில்லை. வித்யாரண்யரை குருவாகக் கொண்ட ஹரிஹர, புக்கர்கள் அந்த ராஜ்ஜியம் அவருக்கே சொந்தமென்று கருதி, அதற்கு 'வித்யாநகர சாம்ராஜ்யம்' என்று அவர் பெயரையே வைத்தார்கள். பிற்பாடு அது விஜய நகரமாயிற்று.
தற்போது விசாகபட்டினத்துக்குப் பக்கத்தில் ஒரு விஜய நகரம் இருக்கிறது. பலர் இதை விஜயநகர சாம்ராஜ்யத்தோடு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது வேறு; அது வேறு. நான் சொல்லும் சாம்ராஜ்யம் பெல்லாரி ஜில்லாவை மையமாகக் கொண்டு அமைந்தது.
வித்யாரண்யரின் ஆலோசனைப்படியே நடந்து, ஹரிஹர, புக்கர்கள் ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள்.
இந்த இருவரின் ஒன்றுவிட்ட சகோதரனான கம்பன்னனை வித்யாரண்யர் சேநாதிபதியாக நியமித்தார். அவனைத் தென்னாட்டுக்கு அனுப்பி வைத்துத் துருக்கப் படைகளை வெற்றி கொள்ளச் செய்தார். அப்படியே இவன் சிதறுண்டு போன ராஜ்யங்களை எல்லாம் ஒன்று சேர்த்தான். 'கம்பன்ன உடையார்' என்று அவனைச் சொல்வார்கள். இந்த உடையார் பட்டம் மைசூர் ராஜாக்களுக்கும் உண்டாயிற்று.
வித்யாரண்யரின் ஆசீர்வாத பலத்தால், கம்பன்ன உடையார் ராமேசுவரம் வரைக்கும் திக்விஜயம் செய்திருக்கிறார். வழியில் தில்லி சுல்தானின் பிரதிநிதிகளோடு ஐந்தாறு யுத்தங்கள் செய்து ஜயசாலியாக ஆனார். மதுரையில்தான் பெரிய யுத்தம் நடந்தது. மதுரை நகர தேவதையே கம்பன்னனுக்குப் பிரத்யட்சமாகி, ஒரு வாளை அநுக்கிரகித்தது. அவருக்கு அத்தனை உபாஸனா பலம். அதன் விசேஷத்தால்தான் மாலிக்காபூர் முதலானோர் செய்திருந்த நாசத்தையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கி, நம்முடைய கோவில்களை மறுபடி புதுப்பித்தார். ஹிந்து சமூகத்துக்குப் புதிய உற்சாகத்தைத் தந்து, வைதிக சம்பிரதாயத்துக்குப் புனர் ஜீவனம் செய்தார்.
திருச்சியில் சமயபுரத்துக்குப் பக்கத்தில் ஒரு கண்ணனூர் இருக்கிறது. அங்கே 'பொச்சலேசுவரர்' என்று ஜனங்கள் சொல்லுகிற கோவிலுக்குப் போயிருந்தேன். உண்மையில் 'ஹொய்சலேசுவரர்' என்பதே அது. கன்னடத்தைச் சேர்ந்த ஹொய்சல வம்சத்தவரால் ஆராதிக்கப்படுபவர். கன்னட 'ஹ' தமிழில் 'ப' என்று முதலில் சொன்னேனே, அதன்படி ஹொய்சலேசுவரர்தான் பொச்சலேசுவரராகிவிட்டார். 'பொச்சலேசுவரர்' என்று ஜனங்கள் சொல்வது தப்பு என்று நினைத்து, 'போஜேச்வரர்' என்று வேறு சரி பண்ணியிருக்கிறார்கள். வேடிக்கைதான்! அந்தக் கோவில் கோபுர மதிலில் "இந்தக் கோவிலைத் துலுக்கர்கள் நாசம் பண்ணுகிற காலத்தில் கம்பன்ன உடையார் ரட்சித்தார்" என்று பொறித்திருப்பதைப் பார்த்தேன். அந்த மதிலைப் பார்த்தாலே துருக்கர் செய்த கொடுமை தெரிகிறது. மதிலின் இரு பக்கங்களில் கல்லடுக்கி நடுவே ஜல்லி கொட்டுவது வழக்கம். இங்கே ஒரு பக்கக் கல் வரிசையும் ஜல்லியும் போய், சதையும் தசையும் போனபின் எலும்பு மட்டும் நிற்கிற மாதிரி இன்னொரு பக்கக் கல்சுவர் மட்டும் நிற்கிறது. அதுவும் இடிபடாமலிருப்பதற்குக் காரணம் கம்பன்ன உடையார்தான். அருகிலேயே உள்ள கம்பரசன்பேட்டைகூடக் கம்பன்ன உடையார் பேரில்தான் ஏற்பட்டிருக்கவேண்டும். பக்கத்திலேயே வாளாடி நல்லூர். அது கம்பன்னன் வேதப் பிராம்மணர்களுக்கு இறையிலியாகத் தந்த ஊராதலால், இன்றும், 'கம்பராய சதுர்வேதி மங்கலம்' என்றே பத்திரங்கள் எழுதும்போது குறிக்கிறார்கள்.
கம்பன்ன உடையாரின் பத்தினி ஒருத்தி கங்காதேவி என்று. அவளும் அவர் படையெடுத்த இடங்களுக்கெல்லாம் பின்னோடு போயிருக்கிறாள். போனது மட்டுமில்லை. ஸம்ஸ்கிருதத்தில் மகாபண்டிதையான அவள் திரும்பி ஊர் வந்து சேருகிற வரையில், ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் வெகு ஸ்வாரஸ்யமாக, காவிய நயத்தோடுகூட எழுதியிருக்கிறாள். காளிதாஸன்கூடத் தோற்றுப் போய்விடுவான் என்கிற மாதிரி நுணுக்கமான திருஷ்டி (close observation) யோடு, கவி சமத்காரத்தோடு, 'கங்காதேவி மதுரா விஜயம்' என்று எழுதியிருக்கிறாள். எபிக்ராஃபிகல் டிபார்ட்மென்டில் அதை அச்சுப் போட்டிருக்கிறார்கள். அறுநூறு வருஷங்களுக்கு முன், ஒரு ஸ்தீரி இப்படிப்பட்ட பிரயாண இலக்கியம் எழுதினது நமக்கெல்லாம் பெருமை.
மஹாலக்ஷ்மியின் அநுக்கிரகத்தால் விஜய நகர சாம்ராஜ்யம் பிறந்தது. பராசக்தியின் அநுக்கிரகத்தால் கம்பன்ன உடையார் யுத்தங்களில் வெற்றி பெற்று, அதை விஸ்தரித்து நிலைப்படுத்தினார். ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தால் இந்த திக்விஜய நூல் வந்தது.
நடுவில் ஒரு நாற்பது ஐம்பது வருஷ காலம் பிற மதத்தினால் வீணாகப்போன தேசத்தில், மறுபடியும் வேதம், கோவில், தருமம் எல்லாம் நிலைக்கும்படி செய்து, ஜனங்களுக்குப் பரமோபகாரம் செய்தார் கம்பன்ன உடையார். இந்த விஜய நகர வம்சத்தில்தான் பிற்பாடு உலகமே கொண்டாடுகிற கிருஷ்ணதேவராயர் வந்தார். இவர்கள் அத்தனை பேரும் செய்த காரியத்துக்கெல்லாம் வித்து வித்யாரண்யர் போட்டதுதான். ராஜ்யத்தை ஸ்தாபித்தது, விஸ்தரித்தது, அதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பல பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி நடத்தியது எல்லாவற்றிற்கும் வித்யாரண்யரே மூல புருஷர்.
வேத தர்மங்களை மறுபடியும் உச்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கு வழியாகவே துருக்கரை அகற்றி, ஹிந்து ராஜ்யம் அமைக்க அவர் வழிகோலினார். ராஜ்யம் ஸ்திரப்பட்டபின், இந்து தர்ம ரக்ஷணத்தைத் தாமே மேற்கொண்டார். ஆதி சங்கர பகவத் பாதர்களின் அத்வைத சம்பிரதாயத்தை மறுபடியும் ஜொலிக்கச் செய்துவிட்டால் வேத தர்மங்கள் எல்லாம் புனர்ஜீவனம் பெற்றுவிடும் என்று தீர்மானித்தார். அதனால் கர்நாடக, ஆந்திர தேசங்களிலிருந்த பழைய சங்கரமடங்களைப் புதுக்களையோடு பிரகாசிக்கிற மாதிரி உத்தாரணம் செய்தார். சில புதிய மடங்களையும் ஸ்தாபித்தார். கன்னட தேசத்தில் அப்போது அத்வைதத்தை ஆட்சேபிக்கும் ஸ்ரீ மத்வரின் த்வைத சித்தாந்தமும் நிறையப் பரவியிருந்தது. அதைச் சமாளிப்பதற்காகவும் இந்த அத்வைத மடங்களை ஸ்தாபித்தார்.
ஜனங்களின் நல்வாழ்விற்கு சஸ்திரம், சாஸ்திரம் என்கிற இரண்டும், தேவையாயிருக்கின்றன. சஸ்திரம் என்றால் ஆயுதம். விரோத ராஜ்யங்களால் தீமை ஏற்பட்டால் காப்பாற்றிக் கொள்ள சஸ்திரம் வேண்டியிருக்கிறது. நம்மை நாமே கெடுத்துக் கொள்ளாமல் ஆத்மாவை ரக்ஷித்துக் கொள்வதற்கு சாஸ்திரம் வேண்டியிருக்கிறது. வித்யாரண்யா ராஜ்ய ஸ்தாபனத்தில் மறைமுகமாக சஸ்திரப் பிரயோகம் செய்தும், ஸ்ரீசங்கர மடங்களின் புனருத்தாரணத்தால் தாமே நேராக சாஸ்திரப் பிரயோகம் செய்தும், ஹிந்து சமூகம் முழுவதையும் துருக்கர்களிடமிருந்து காப்பாற்றி விட்டார். அவர் கர்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று மார்க்கங்களுக்கு உபகாரம் செய்த மஹான். அவருடைய 'பஞ்சதசீ ப்ரகரணம்', 'ஜீவன் முக்தி விவேகம்' முதலான கிரந்தங்கள் பரம ஞானத்தைக் கொடுக்கக்கூடியவை. மடத்தை ஸ்தாபித்தல், ஆலய புனருத்தாரணம் செய்தல், ஆகியவற்றால் பக்தியை வளர்த்தார். வேத பாஷ்யத்தால் கர்மத்தை நிலைநாட்டினார். அவர் செய்த இத்தனை பரமோபகாரத்துக்கும் முதலில் ஊக்கச் சக்தி தந்தது, லக்ஷ்மி கடாக்ஷத்தால் அவர் பெற்ற நவநிதிதான்.
பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அநுக்கிரகம் செய்வாள். ஏழைப் பிராம்மணப் பெண்ணின் பொருட்டு அவளைச் செல்வத்துக்கு அதிதேவதையாக வைத்துக் கனக மழை பொழியும்படி வேண்டிக்கொண்ட சங்கரர், இதே ஸ்திதியில் தம் பொருட்டு அவளைப் பிரார்த்திக்கிறபோது, அவளைப் பணத்தின் அதிதேவதையாக மட்டும் நினைக்கவில்லை. மனமாசுகளையெல்லாம் நீக்குகிற ஞானாம்பிகையாக வைத்துப் பிரார்த்திக்கிறார். ('ஸம்பத்கராணி' என்கிற ஸ்லோகம்)
வைஷ்ணவர்கள் விஷ்ணுவைத் தகப்பனார் என்று சொல்லாமல் 'பெருமாள்' என்றே சொன்னாலும், மஹாலக்ஷ்மியைத் 'தாயார்', 'தாயார்' என்றே சொல்வார்கள். அவள்தான் ஸ்ரீ மாதாவான பராசக்தி. ஆசார்யாளும் இங்கு மாதா என்று அழைத்து, (மாமேவ மாதர் அனிசம்) "உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் துரிதங்கள் - பாபங்கள் எல்லாவற்றையும் கில்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்" என்கிறார்.
எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் நடத்துவதற்கு மஹாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆசாரியாள், வித்யாரண்யாள், ஸ்ரீ தேசிகன் மாதிரி சொந்த நலனுக்காக இன்றி, பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.
No comments:
Post a Comment