Friday, May 15, 2015

பாரதப் பயணம் / மஹா பாரதம்.


வாதமும் விவாதமும் 

''துருபதா,  என்னோடு வா'' என்று அழைத்துச் சென்ற  வியாசர்,''தேவர்களும் ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் ஒரு முறை கூடி ஒரு பெரும் யாகம்  நடந்தது. யாகத்தில்  விவஸ்வான் மகன் யமன்  பல உயிர்களை மாய்த்தான். ஆனால் ஒரு  மனிதனின் உயிரையும் பறிக்கவில்லை. எனவே மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.தேவர்கள் பிரமனிடம் சென்று இதுபற்றி கூறி  மரணமற்ற தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்யாசமின்றி அல்லவோ இதனால் போய் விடும்''என்று தம் கவலையை வெளிப்படுத்த, பிரமன் ''யமனின்  யாகம் முடிந்தவுடன் நிலைமை பழையபடி ஆகும் கவலை வேண்டாம்''  என்றார். 

அப்போது தான் பார்த்தனர்.  அருகே  பாகீரதி நதியில் சில  சிறு  தங்கத் தாமரை மொட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக  வரிசையாக மிதந்து சென்றுகொண்டிருந்ததை.  தேவர் தலைவன் இந்திரன் நதியோரமாக நடந்தே போய்  அது எங்கிருந்து மிதந்து வந்தது என்று ஆராய்ந்தபோது ஒரு  தேவலோக அழகி ஒருவள் அழுதுகொண்டே அந்த நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான்.  அவள் கண்ணீர் சொட்டுக்கள் ஒவ்வொன்றும்  தான்  தங்கத்  தாமரையாக நதியில் மிதந்து வந்தன.  அதிசயித்துப் போன இந்திரன் அவள் அருகில் சென்றான்.  

''யாரம்மா  நீ,  ஏன்  அழுகிறாய்?''

வியாசர்  இந்த கதையை  தொடர்ந்து துருபதனிடம் சொல்கிறார். 

''தேவர்களின் தலைவனே,  உனக்கு  என்னைப் பற்றி தெரியலாம். இருப்பினும் என் பின்னே வா  உனக்கே  தெரியும் என் துயரம் எதற்கு என்று?''  அவள் நடக்க  பின் தொடர்ந்தான் இந்திரன்.

இமய பனிமலையின் சிகரத்தில் ஒரு சிம்மாசனத்தில் சுந்தர ரூபனாக  ஒருவனைக்  கண்டு  இந்திரன் அலட்சியமாக இருந்தான்.அருகில் நின்ற இந்திரனை  அந்த  சுந்தரரூபன்  பார்த்த  பார்வையிலேயே இந்திரன் சிலையானான். அந்த சுந்தரரூபன்  ஈசானன்.  அழுதுகொண்டிருந்த  பெண் இந்திரனைத் தொட்டாள் . கல்லாக  மாறிய  இந்திரன்  ஒரு  பாதாள குகையில் சென்று விழுந்தான்.   உள்ளே  பார்த்த இந்திரன்  நடுங்கினான்.     அவனைப்போலவே   எத்தனையோ பேர் உள்ளே  சிலையாக. 

''இந்திரா  வானுலக தேவர் தலைவன் பதவி வகிக்கும் நீ  மமதை கொண்டலைவது தவறு.  அவர்களைப் போல்  நீயும் வருந்திசில காலம் இருந்து திருந்தி,  மனிதனாகப் பிறந்து தவறு இன்றி வாழ்ந்து தேவலோகம் மீண்டும்  செல்வாய். மற்ற இந்திரர்களும் சிவனை வேண்டி விடுதலை  தேடினர்.   வெகுகாலம் தண்டனை அனுபவித்தோம்.   சிவனது அருளால் பூமியில் அவர்கள்  ஐவர் அங்கு ஒரு தாயின் புத்ரர்களாக அவதரித்து மோக்ஷம் அடையும் வரை காத்திருப்பது முடிவாயிற்று. தீய  மனிதர்களோடு மோதி  உங்கள் சக்தியை பிரயோகித்து  அவர்களை அழித்து  இந்திரலோகம் திரும்புவீர்கள் ''

அவர்களும்  ஈசானனுக்கு  வாக்களித்தார்கள்.  ''நாங்கள் பிறக்கும்போது நாங்களாகவே  இல்லாமல்  எங்கள் சக்தி அம்சம் கொண்ட மனிதர்களாகவே பிறக்கிறோம்.''  

சிவன் அவர்கள் விருப்பத்திற்கு இணங்கினார் . அந்த அழகிய  பெண்ணை  அவர்கள் மனைவியாக  படைத்தார்.  பாதாள குகையில் இருந்த  ஐந்து  இந்திரர்களும் அந்த பெண்ணும் சிவனோடு சேர்ந்து நாராயணனை அணுகி  அவர் ஒப்புதலும் பெற்றனர்.

நாராயணன்  தானே  இருவராக  அவர்களோடு  பிறப்பதாக கூறினார் . அவர்களே கிருஷ்ணனும் பலராமனும்.  அந்த பெண்ணுக்கும்  சிவன்  அவள் தவத்தில்  மகிழ்ந்து  அவள் வேண்டிய  நல்ல சிறந்த குணங்களை உடைய  கணவன் கிடைக்க அருளினார்.  அவள்  ஒரு கணவன் கேட்க  அவளுக்கு  ஐந்து கணவன்களை அளித்தார். 

''நான்  நல்ல  குணங்கள் கொண்ட ஒரு கணவனை அல்லவோ வேண்டினேன்?''

''ஆமாம் பெண்ணே,  என்னென்ன குணங்கள் கொண்ட கணவன்  வேண்டும்  என்று  ஐந்து குணாதிசயங்களை  கோரி அவ்வாறுள்ள  கணவன் வேண்டும் என்று  தனித்தனியாக   ஐந்து முறை கேட்டதால் உனக்கு  ஐந்து கணவர்களை   நீ  கேட்ட குணங்களோடு அடைவாய்'' என்றார்  சிவனார்.

''துருபதா,   உன் பெண் திரௌபதி தான் அந்தப் பெண்.   மகாலக்ஷ்மி  உன் பெண்ணாக  அவதரித்தவள். சிவனிடம் பெற்ற வரத்தின் பயனாக  அவளுக்கு  பாண்டவர்கள் ஐவரும்  கணவன்மார்கள்.  நான் சொன்னது இறைவனால்  விதிக்கப்பட்ட முடிவு. நீ  மாற்றி  ஏதாவது செய்வதானால்  நீயே  உன் விருப்பப்படி  செய்துகொள்ளலாம் ''  என்று வியாசர் கூறியபோது துருபதன் வியாசரை வணங்கி

 ''மகரிஷி,  எனக்கு இதெல்லாம் தெரியாத நேரத்தில் நான்  சொன்னவை. மகேஸ்வரன் வார்த்தையை மீறி எதையும் செய்யும் அருகதை எனக்கில்லை'' என்றான்.

வியாசர்  யுதிஷ்டிரனை நோக்கி ''தெய்வ சங்கல்பத்தின் படி  முதலில் நீ  திரௌபதியை கரம் பிடித்து மனைவியாக்கிக் கொள்வாய். உன்னைத் தொடர்ந்து உன் சகோதரர்களும் அவ்வாறே  அவளை ஏற்றுக்கொள்ளட்டும்`' என்றார். துருபதன் சகல ஏற்பாடுகளையும் செய்தான்.  திருமணம் கோலாகலமாக  நடத்தினான். தௌம்யர் முன்னின்று சடங்குகளை நிறைவேற்றினார். 

துவாரகையிலிருந்து  கிருஷ்ணன்  பாண்டவர்கள்  திருமணத்துக்கு  நிறைய  பரிசுகள், ஆடைகள், பொன் பொருள், யானை, குதிரை இன்னும்  பல பல  எண்ணற்றவைகளை  அனுப்பினான்.  

ஊர் உலகமெல்லாம்  பாண்டவர்கள்  உயிரோடு தான் இருக்கிறார்கள்.  திரௌபதியை ஸ்வயம்வரத்தில்  வீர சாகசம் செய்து வென்றவன் அர்ஜுனனே  என்றும்  துருபதன் பாண்டவர்களோடு  இணைந்து நெருங்கிய உறவினனாகிவிட்டான் என்றும் செய்தி பரவிய போது  அஸ்தினாபுரத்திலும்  அது எல்லோர் காதிலும் விழுந்தது. துரியோதனன் விட்ட மூச்சில் அனல் எரிந்தது.

விதுரன்  திருதராஷ்டிரனுக்கு  பாண்டவர்கள் உயிரோடு இருப்பது, அவர்கள் திருமணன், துருபதன் உறவு  எல்லாம் எடுத்துச் சொன்ன போது பார்வையற்ற அந்த மன்னன் முதலில் மகிழ்ந்தான்.  விதுரன் சென்றபிறகு துரியோதனன்  தந்தையை அணுகி பாண்டவர்கள் பலம் பெறுவது என்றுமே ஆபத்து என்று தனது  எண்ணத்தை  வெளிப்படுத்தினான். 

''என் மகனே  துரியோதனா, உன் எண்ணத்தை  நான்  மதிக்கிறேன்.  விதுரன் எதிரில் என் உண்மையான  உணர்ச்சியை நான் காட்ட விரும்பவில்லை.  நீயும் கர்ணனும் என்ன செய்யப்போகிறீர்கள்?''

''தந்தையே,  எப்படியாவது துருபதனையோ,  த்ரௌபதியையோ  பாண்டவர்களுக்குள் வேற்றுமையோ,  பொறாமையோ  வளர்த்து,  அவர்கள் பலத்தை குறைக்கவேண்டும்.  எப்படியாவது பீமனை  அழிக்கவேண்டும்.  அவன் இறந்தால், பாண்டவர்கள் பாதி பலம் இழந்தவர்கள்.  அர்ஜுனனை  கர்ணன் எளிதில் வெல்வான். நமது ஒற்றர்களைக் கொண்டு  இதை நிறைவேற்ற முயற்சிப்பேன்.  முடிந்தால்  மீண்டும் பாண்டவர்களை  இங்கு அழைத்து  அவர்களை ஒழிக்க ஏதேனும் திட்டம் தீட்ட முயல்வேன். இந்த முறை  வெற்றிகரமாக அதை முடிப்பேன்.'' 

கர்ணன்  குறுக்கிட்டான்.  ''நண்பா,   இதுவரை நீ சொன்னது நடக்காது.  பாண்டவர்கள் ஒற்றுமையை யாருமே  குலைக்க முடியாது. துருபதனையும் அவர்களிடமிருந்து  இனி பிரிக்க இயலாது.  இளம் வயதிலேயே உன் திட்டங்கள் அவர்களை அழிக்க உதவாதபோது இப்போது அவர்கள் வளர்ந்து மேலும்  பலம் பெற்றவர்கள். நேரடியாக அவர்கள் மீது மோதி அவர்களைக் கொன்று தான் நீ  நிம்மதி பெற முடியும். 

வ்ருஷ்ணி  குல, யாதவ குல  வீரர்கள், சேனைகள், கிருஷ்ணன் பலராமன் பாண்டவர்களின்  துணைக்கு தான்  உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள்.  என்னைக்கேட்டால், ஒரு பெரும் சேனையோடு சென்று துருபதன் மேல் படையெடுத்து அவனையும் பாண்டவர்களையும் கொல்வது ஒன்றே தான் வழி. ''

 திருதராஷ்டிரன்  கர்ணன் பேச்சு கேட்டு மகிழ்ந்தான்.  '' துரியோதனா,  நீ  பீஷ்மர், துரோணர், விதுரன் எல்லோரையும் எதற்கும்  கலந்து ஆலோசித்து  முடிவெடு''

சபை கூடியது.  பீஷ்மர்  எடுத்தவுடனே  ''திருதராஷ்டிரா  இதைக் கேள்.  என்னால்  பாண்டவர்களை கொல்ல  முடியாது. குந்தியின் பிள்ளைகளும்  காந்தாரியின் பிள்ளைகளும் எனக்கு  ஒன்றே.  அவர்கள் எல்லோருடைய பாதுகாப்பும்  தான்  என்  லட்சியம். ' என்று உறுதியாக சொன்னார்.  யுத்தம் செய்வதை தவிர்த்து  அவர்களுக்கு  பாதி ராஜ்யம் கொடுத்து சுமுகமாக வாழுங்கள்''  என்றார். நல்ல பேர் எடு, அது ஒன்றே ஒருவனைக் காக்கும் சக்தி. குருவம்சத்தின் பெயரைக் காப்பாற்று.  அது உன்னைக் காக்கும்''. சொத்தில் அவர்களுக்கும் சம பங்கு இருப்பதை மறவாதே. என்றார் பீஷ்மர்.

துரோணர் எழுந்தார்.   ''திருதராஷ்டிரா, எங்களைக் கூப்பிட்டு  ஆலோசனை கேட்பதால் சொல்கிறேன்.  நான்  பீஷ்மர் சொன்னதை கேட்டேன்.  அதுவே  நியாயமானது.  அவர் சொன்னது தான்  என்  எண்ணமும் ஆலோசனையும். எனவே துச்சாதனன் படையோடு சென்று  துருபதனையும்  பாண்டவர்களையும் கௌரவித்து, தக்க பரிசுகளை பாண்டவர்களுக்கு அளித்து,  அவர்களை இங்கு வரவழைக்கவேண்டும்.   அவர்களுக்கு தக்க மரியாதைகளோடு  இந்த ராஜ்யத்தை அவர்கள் ஆள அதிகாரம் வழங்கவேண்டும். இது தான் சரி என்று எனக்கும் படுகிறது''.

இதெல்லாம் கேட்ட கர்ணன் படு கோபமாக எழுந்தான்.  '' உங்கள் செல்வத்திலும் சுகபோகத்திலும் வாழும் இந்த பீஷ்மரும் துரோணரும் உங்களுக்கு எதிராக செயல்படுவதும் அறிவுரை வழங்குவதும் ஏற்கத்தக்கதில்லை. தீய எண்ணத்தை  மனதில் கொண்டு ஞாயம் சொல்வது போல் நடப்பது  துரோகம்.   அம்புவிச்சன் என்று ஒரு ராஜா  இப்படித்தான் மகா கர்ணி என்ற தனது மந்திரியை நம்பினான்.  அந்த மந்திரி நன்றியுடைவன் போல் நடித்து,  மகத நாட்டின் அரசாட்சியையே  தனதாக்கிகொண்டான் என்று ஒரு கதை உண்டு. 

துரோணர் பொறுப்பாரா?  ''கர்ணா,  உன்னுள்ளே  பாண்டவர்களிடம் இருக்கு பொறாமை, வெறுப்பு  தான் உன்னை  எங்கள் பேச்சில் போக்கில் தவறு காணச் செய்கிறது. உன் கெடுமதி உன் பேச்சிலேயே தெரிகிறது.  குருவம்ச நலனுக்கு  நாங்கள் சொன்னதை எதிர்த்து செயல்பட்டால்  இந்த  வம்சம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

விதுரன் எழுந்தான். ''சகோதரா,  பீஷ்ம துரோணர்கள் அனுபவம் வயது இரண்டிலும் மூத்தவர்கள். இந்த வம்ச விளக்குகள் பாண்டவர்கள்  கௌரவர்கள் இருவரையுமே  வித்தியாசமின்றி வளர்த்தவர்கள். அவர்கள் பேச்சை நீ கேட்டால் நன்மை உண்டு.  பாண்டவர்களுக்கு இந்த நாட்டை  ஆள்வதற்கு உன் மக்களை விட  உரிமை அதிகம் என்று உனக்கே தெரியும். எனவே அனுபவஸ்தர்கள் உன் நலம் விரும்பிகள் சொல்வதைக் கேட்டு நடப்பாயாக. பாண்டவர்களை நட்போடு உன்னோடு சேர்த்துக்கொள்வது அதிக பலத்தை உனக்கு அளிக்கும். கிருஷ்ணன் அவர்களுக்கு உதவியாக இருக்கும் பக்ஷத்தில் வெற்றி யாருக்கு என  நீ அறிவாய்.  சகுனி, துரியோதனன், கர்ணன்  ஏதோ அறியாமையினால், இள  வயது  தரும் ஆர்வக்கோளாறில் சொல்வதை  செவி மடுக்காதே''

திருதராஷ்ட்ரன் உண்மை உணர்ந்தான்.  ''விதுரா நீ  சொல்வது தான் சரி.  எல்லோரும் உரைத்தவாறு  என் மக்கள் பாண்டவர்களை நீயே  சென்று இங்கு அழைத்துவா.   விதுரன்  துருபதனின் பாஞ்சால  தேசத்துக்கு  பாண்டவர்களை அழைத்துவர  சென்றான்.

================================
சர்ப்ப யாகம் 

ஸ்ரீ பிரதாப்  சந்திர  ராய்  ( P .C .ராய்)   என்ற  ஒரு  சிறந்த  ஸம்ச்க்ரித  மேதை பல்லாயிரக்கணக்கான  மஹா பாரத சம்ச்க்ரித  ஸ்லோகங்களை ரசித்து ருசித்து  ஆங்கிலத்தில் எழுதியது தான்  என்னை  ஈர்த்து  அதில்  சிலவற்றை  நமது  இந்த  பாரதத் தொடரில் எளிமையாக்கி  குழந்தைகளுக்கு  அளிக்கத்  தூண்டியது.  மிக  அருமையான  பொக்கிஷம் இந்த  p  c . ராயின்  பாரத மொழிபெயர்ப்பு.    இனி கதைக்குள் செல்வோம்.
''அஸ்திகர்  தனது  தாயை அணுகி எதற்கம்மா என்னிடம்  ஏதோ கேட்கவேண்டும் என்று சொன்னீர்கள்  என்றார். ஜரத்காரு என்ற பெயர் கொண்ட அவரது தாய்  ''மகனே, உனது மாமன் சர்ப்பராஜா. அவனது தாய்  கத்ரு சர்ப்பங்கள் அனைவருக்குமே  தாய். காச்யபர்  கொடுத்த வரத்தால்  அனைத்து சர்ப்பங்களின் தாயானவள்.  பாண்டவ  வமிச அரசன் ஜனமேஜயன் ஒரு  யாகம்  ஆரம்பித்திருக்கிறான். அதன் சக்தியால்  அனைத்து சர்ப்பங்களும்  தன்  வசமின்றி கவரப்பட்டு  ஜனமேஜயன்  யாகத்தீயில் வந்து விழுந்து மாள்கின்றன. இதை உன்னால்  எவ்வாறாவது தடுத்து நிறுத்த இயலுமா?''

அஸ்திகர்  வாசுகியை அணுகி, ''மாமா,  உங்கள் கவலையை விடுங்கள்.  இனி  கத்ருவின்  சாபம் உங்களை யும்,   சர்ப்ப வர்கத்தையும்  அழிக்காதவாறு  நான்  பார்த்துக்கொள்கிறேன். இன்றே  நான்  ஜனமேஜயன் அரண்மனை செல்கிறேன். என் வார்த்தை பொய்க்காது. இனி  மரண பயம் வேண்டாம்.'' 

''ஹே  ராஜன், ஜனமேஜயா, உன்  யாகம்  எந்தவிதத்திலும்   சோமன், வருணன், பிரஜாபதி, சகரன், யமன், ஹரிமேதன், ரந்திதேவன் ஆகியோர் நிகழ்த்திய யாகங்களுக்குத்  தாழ்ந்தது அல்ல. தக்க  பலனை  அடைவாய். ''என்றார்  அஸ்திகர். வயதில் சிறியவராக இருந்தபோதிலும் இவர் ஒரு  பாலயோகி  ஞானஸ்தர் ''என்று  புகழ்ந்தான்   ஜனமேஜயன். இந்த  சிறிய வயது முனிவரை நன்றாக உபசரித்து  கவனியுங்கள்.  யாகம் முடிந்து  தக்க  சன்மானம் வழங்கவேண்டும். அவர்  விருப்பம்  திருப்தியாக  நிறைவேற வேண்டும்''  என்றான் ஜனமேஜயன்.''

''தாங்கள் விரும்பிய வரம் பெறலாம்'' என்றான்  அரசன். அதற்குள்  யாக  அதிகாரி  ''இன்னும்   தக்ஷகன் இங்கு வரவில்லை. மந்திரங்களை நிறுத்தாமல்  உச்சாடனம் செய்யுங்கள்'' என்று ரித்விக்குகளுக்கு  உத்தரவிட்டார். .
ஜனமேஜயன்  ''ஆமாம்   என் முதல் எதிரி  தக்ஷகன் இந்த யாகத்திற்கு  மந்திர வசப்பட்டு  கட்டுண்டு  அவன் இந்த வேள்வித்தீயில் விழுந்து  முடிந்தால் தான்  யாகம் வெற்றிபெறும் என்றான்''.

''தக்ஷகன் பயத்தில்  இப்போது   இந்திரனிடம்  சரணடைந்து இருக்கிறான்.  இந்திரனும் அவனுக்கு ''என்னிடம்  நீ இருக்கும் வரை  உன்னை  அக்னி அணுகாது'' என்று அடைக்கலம் கொடுத்திருக்கிறானாம்''.

''பிராமணர்களே   யாக மந்திரத்தை  உக்ரமாக்குங்கள்.   தக்ஷகனுக்கு  இந்திரன்  அடைக்கலம் கொடுத்தால்,  இந்திரனையும்  வசியப்படுத்தி  இந்த  யாகத்தீயில் இருவரையுமே  முடியுங்கள்''  என்று  ஜனமேஜயன்   உற்சாகப் படுத்தினான்.

மந்திரங்கள் இந்திரனையும் கட்டுப்படுத்த  அவன்  தக்ஷகனுடன்  யாக மண்டபத்தின் மேல்  ஆகாயத்தில் தோன்றினான். மந்திரங்கள் அவனைக் கட்டுபடுத்தாமலிருக்க  தக்ஷகனை  உதறிவிட்டு இந்திரன் திரும்பினான். ''  தக்ஷகன்  யாகத்தீயை மெதுவாக  நெருங்கி  கீழே  விழத் தொடங்கினான். 

'' மகாராஜா, யாகம்  பூரணம் ஆகப்போகிறது.  இந்த  பிராம்மணருக்கு  வேண்டிய வரத்தைக் கொடுக்க இதுவே  நேரம்''  என்றனர். 
''எங்கே  அந்த   பால்ய  யோகி,  அழைத்து வாருங்கள். முதல் பிராமணனாக  அவருக்கே  கேட்ட தக்ஷிணை தருகிறேன்''''
அஸ்திகர்  அழைக்கப்பட்டார். 

''மகாராஜா,  மகாராஜா,  இதோ  தக்ஷகன்  அருகே  வருகிறான்.  கதறுகிறான்  அவனால்  மந்திரக் கட்டிலிருந்து  விடுபட முடியவில்லை. முக்ய தருணம் வந்துவிட்டது'' என்றனர்  யாக  ரித்விக்குகள். 

''ஜனமேஜய மகாராஜா,  நீங்கள் எனக்கு என்ன வரம் கேட்டாலும் தருவதாக  சொன்னீர்களே.  இந்த யாகம் இப்போதே  முடியவேண்டும். எந்த  சர்ப்பமும் இனி யாகத்தீயில் மரணமடையக்கூடாது.   என்னைப்  பொறுத்தவரை என்  தாய் வர்க்கம் இதால்  உயிர்பிழைக்கும்.''

''பால முனிவரே  வேறு எதாவது வரம் கேளுங்கள்'' என்றான்  ஜனமேஜயன்.

''நான் கேட்ட, கேட்கும் வரம் இது ஒன்றே தான்''  தருவதாக ஒப்புக்கொண்ட அரசன்  இனி  பின் வாங்கக்கூடாது.''

''அரசே  அவர் கேட்டதை அளிக்கவேண்டியது ஞாயம் என்றனர்  யாகம் செய்துகொண்டிருந்த  ரித்விக்குகளும்''.


''சௌடி ரிஷியே,  எனக்கு  அந்த  யாகத்தீயில் விழுந்து மாண்ட  சர்ப்பங்களின் பெயர்களைச்  சொல்லவேண்டும்'' என்றார்  கேள்வித்திலகம்  சௌனகர்.

''அதெப்படி   லட்சோப லக்ஷம்  சர்ப்பங்களின் பெயர்களைச் சொல்லமுடியும்.  முக்யமாக  வாசுகியின் வம்சத்தை சார்ந்த   நாகங்கள் பெயரை வேண்டுமானால்  சொல்கிறேன்.   கோடிசன் ,மானசன், பூமா,கலா, பாலா, ஹால்மகன், பிச்சலன், கௌனபன், சக்ரன் ,காலவேகன், ப்ரகலனன், ஹிரன்யவஹு, சாரணன், கக்ஷகன், காலதண்டகன்,  இவர்களெல்லாரும்  வாசுகியின் மக்கள். யாகத்தீயில் எண்ணற்றோர்  மாண்டுவிட்டனர்.  இப்போது  தக்ஷகன்  வமிசத்தில் சில பேரைச் சொல்கிறேன்.  புச்சண்டகன், மண்டலகன், பிண்டசேக்த்ரி, ராவேனகன், உச்சோச்சிகன் , சரவன், பங்கஸ், வில்வதேஜஸ்,  விரோஹணன், சில்லி, சலகாரன், முல்கன், சுகுமாரன்,  ப்ராவேபணன்,முத்கரன்,  சிசுரோமன், சுரோமன், மகாஹனு.   ஐராவதன் என்னும்   சர்ப்பத்தின் மக்கள்  யார்  யார்  தெரியுமா  இந்த  தீயில் மாண்டவர்கள்?. அவர்கள் பெயர்களையும் சொல்கிறேன் கேள். பரவதன் , பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன்,  க்ரிசன் ,சரபன், விஹங்கன், மேதன், ப்ரமொதன், சௌஹடபனன்.   இன்னும் சொல்லட்டுமா?''  என்றார்  உக்ரஸ்ரவர் என்கிற  சௌடி ரிஷி.

''போதும் போதும்''  என்றார் சௌனகர்.  நமக்கும்  தானே  இது நல்லது.

''ஏன்  தக்ஷகன்  மயங்கியவன், சக்தியற்றவன்,  ஆகாயத்திலிருந்து  யாகத்தீயில் விழவில்லை. மந்திரங்களின் உச்சாடன சக்தி  குறைவானதாலா?

''இல்லை,  அஸ்திகர்   யாகத்தீயை நோக்கி  கீழே  விழுந்துகொண்டிருந்த  தக்ஷகனை    ''நில், அங்கேயே  நில், என்று  மூன்று தடவை சொன்னதால்  தக்ஷகன் யாகத்தீயில்  விழவில்லை''.  

ஜனமேஜயன் இந்த விவரங்களைக் கேட்டு,  அஸ்திகரின்  தவ வலிமையை அறிந்தான்.  அவர் கேட்ட வரத்தின்படியே  யாகம்  முடிக்கப்பட்டது.  சர்ப்பங்கள்  உயிர் தப்பின.

சர்ப்பங்கள்  அனைத்தும்  அஸ்திகருக்கு நன்றி தெரிவித்தன.  உங்களுக்கு  நாங்கள்  என்ன வரம்  தரட்டும்  என்று கேட்டன.

அஸ்திகர் ''இனி  நீங்கள்  காலையோ மாலையோ  இரவோ  என்  இந்த  செய்கையை  எந்த  பிராமணர்கள்   நினைவு கூறு கிறார்களோ ஒரு சர்ப்பமும் அவர்களை  நெருங்கக்கூடாது.''

சர்ப்பங்கள் சத்தியம் செய்து கொடுத்தன. இன்று முதல்  யார்  ஜரத்காரு,  அஸ்திகர், அர்திமன், சுனிதா என்ற பெயர்களைச் சொல்கிறார்களோ அவர்களை எந்த  சர்ப்பமும் நெருங்காது.  (நாம் அன்றாடம் செய்யும்  சந்த்யா வந்தனத்தில் இந்த  சர்ப்ப ரக்ஷக மந்த்ரமும்  உண்டே. 

 நர்மதையை வேண்டி  வடக்கே  பார்த்துக்கொண்டு  சொல்கிறோமே  அந்த  மந்திரத்தில் ஜரத்காரு ரிஷி, அவர்  மனைவி ஜரத்காரு ஆகியோருக்கு  பிறந்த  அஸ்தீக  மகரிஷி  ஜனமேஜயன் யாகத்தில் அழிய இருந்த சர்ப்பங்களை காத்து உயிர் பிச்சை அளித்து  அவை என்றும் நம்மை கடிக்க மாட்டோம் என்றும்  சத்யம் செய்து கொடுத்த இந்த மந்திரத்தை  உச்சரித்து  சர்ப்பங்களிடமிருந்து எந்த  ஆபத்தும் வராமல் காக்கப்படுவோம்  என்று  வரும் மந்திரம் இது

.''நர்மதாயை நம:  ப்ராத: நர்மதையை நமோ நிஷி . அப சர்ப்ப சர்ப்ப  பத்ரம் தே  தூரம் கச்ச மகா  யசாஹ  ஜனமேஜயச்ய  யாகந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரண் ."" 

 இனி வருவதெல்லாம்    ஆதி  பர்வம் என்ற  பெரிய  பாகத்தில்  ஆதி வம்சவதரண  பர்வம்   என்ற  பகுதியிலிருந்து.

ஜனமேஜயன்  அரண்மனைக்கு  வேத வியாசர் வருகிறார். அவரிடம்  தனது  வம்சாவளி பற்றியும்  பாண்டவர் கௌரவர்கள் பற்றிய  சகல  விவரங்களும்  உரைக்க வேண்டும் என்று  வேண்டுகிறான். அவர்  தனது சிஷ்யர்  வைசம்பாயனரிடம் அவ்வாறே  அதையெல்லாம்  அந்த  மன்னனுக்கு  எடுத்துச் சொல்ல  உத்தரவிடுகிறார்.
 அவரும் அவ்வாறே  பாரதத்தை ஜனமேஜயனுக்கு  எடுத்துச் சொல்கிறார்:

''உபரிசரன்  என்று  வசு  குலத்தில் ஒரு  ராஜா. ரொம்ப  ஆசார  சீலன். பக்திமான். வேட்டையாட  பிடிக்கும். சேடி என்கிற  நாட்டை வென்றான். சில காலத்தில்  எல்லாம் துறந்து  காட்டில்  தவம் செய்ய சென்றான். இந்திரன் அவனது  சீலத்தை மெச்சி அவனுக்கு  ஒரு  மூங்கில் கொம்பைத் தந்தான்.  ராஜா  அதை  பூமியில் நட்டு  இந்திரனை வழிபட்டான். அவன் வமிசத்தில் வந்தவர்கள் இந்திர வழிபாட்டில் இவ்வாறு  மூங்கில் கழியை நடுவது  வழக்கமானது. ராஜாவுக்கு  5 பிள்ளைகள். வ்ரிஹத்ரதன்,மஹரதன் ,ப்ரத்யக்ரஹன், குசம்வன், மாவெலன் , யது.  ஆகியோர் அவர்கள். உபரிச்சரன் இதற்கிடையில் ஒரு  தேவ கன்னிகை மீன் வடிவில்  பிறந்து  சாப விமோசனத்துக்காக  யமுனையில்  காத்திருந்து இரு  மனித குமாரர்களை பெற்று  தேவலோகம்  செல்ல  காரணமாகிறான்.   அந்த  மீன் வடிவான  அப்சரஸ் இரட்டைக் குழந்தைகளைப் பெறுகிறாள். சாபம் தொலைந்தது.  அவள் பெண்  மீன் நாற்றம் கொண்டவளாகவே  இருந்ததால் சத்யவதி என்ற பெயர் கொண்டபோதிலும்  ''மத்ஸ்யகந்தி'' (மீனின் வாடை கொண்டவள்) என்றே  அழைக்கப்பட்டாள் . இதால்அவள்  மீனவர்களிடம் கொடுக்கப்பட்டு  வளர்ந்தாள் . அவள்  வளர்ப்புத்  தந்தைக்குதவியாக  படகோட்டுவாள். ஒருநாள்  ரிஷி பராசரர், வியாசரின் தந்தை, அவள் படகில் யமுனையைக் கடக்கும்போது  அவள்  அழகில் தன்னை  இழக்கிறார்.  தனது  தவ வலிமையால் அவளது  முடை நாற்றம்   ஒரு யோசனை  தூரத்திலிருந்தே   பரிமள கந்த  வாசனை வீசும் மணமாக மாறி  அவள்  ''யோஜனகந்தா'',   ''கந்தவதி''  (வாச மிக்கவள்) என்று பெயர்கள்  பெறுகிறாள். பராசரர் மூலம் மகப்பேறு அடைகிறாள். 

தேவ  ரிஷியான  அந்த  குழந்தை ''நீ  விரும்பும் நேரத்தில் உன் முன் தோன்றுவேன்'' என்று வாக்களித்துவிட்டு  தேவலோகம் செல்கிறது.   நதியில் ஒரு  தீவுப் பிரதேசத்தில் பிறந்ததால் அக்குழந்தை   ''த்வைபாயனர்''  (தீவில் பிறந்தவர்) என்ற  நாமம் பெற்றது. வேதங்களைப்  பகுத்து  அவற்றின் சாரத்தை  விவரித்து உரைத்ததால்  வேத  வியாசர்  என்ற  அடைமொழியும்  பெற்றது. 

வியாசர்  தனது ஞானத்தை  சுமந்தர் , ஜைமினி, தனது மகன் சுகர்,  பைலர்,  வைசம்பாயனர் போன்றோர்களை  சிஷ்யர்களாக ஏற்று  உபதேசித்தார்.


பாரதப் பயணம்  9 

                                                        பாண்டவர்களும்  கௌரவர்களும் 

ஜனமேஜயன்  வைசம்பாயன ரிஷியிடம்  பாரதம் கேட்கிறான். கேட்கக்  கேட்க  ஆர்வமும் அதிசயமும்  அதிகரிக்கிறது.
நமக்கும் அப்படித்தானே?
வைசம்பாயனரும் தொடர்கிறார்.
சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். சித்ராங்கதன்.  விசித்திர வீர்யன்.
ஒரு சமயம்  கந்தர்வர்களுக்கும் சித்ராங்கதனுக்கும் 3 வருடம் தொடர்ந்து  சரஸ்வதி நதிக்கரையில் குருக்ஷேத்ரத்தில் நடந்த ஒரு யுத்தத்தில் சித்ராங்கதன் கொல்லப்படுகிறான். விசித்திர வீர்யன் ராஜாவாகிறான். 
காசிராஜன் பெண்கள் அம்பை அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கு  ஸ்வயம்வரம் நடக்கிறது. 
பீஷ்மன் அங்கு சென்று  அந்த  மூவரையும் தனது சகோதரன் விசித்ரவீர்யனுக்கு மணமுடிக்க விரும்பியபோது  மற்ற மன்னர்கள் பீஷமனோடு மோதி எவராலும் பீஷ்மனை வெல்ல முடியவில்லை. மூன்று அரசகுமாரிகளையும் மீட்க இயலவில்லை. 
விசித்திர வீர்யனுக்கு  இவர்களோடு கல்யாண ஏற்பாடுகள் நடக்கும்போது முதல் அரசகுமாரி அம்பை, பீஷ்மனிடம்  தான்  நாடிய  சௌப தேச  அரசனை ஸ்வயம்வரத்தில் மணப்பதை தடுத்ததால்  நீயே  என்னை மணக்கவேண்டும் என்கிறாள். ''நான்  பிரம்மச்சாரி விரதம் பூண்டவன்''  என்று  அம்பையை   பீஷ்மன்  சௌப அரசனிடமே  அனுப்புகிறான்.  இதற்கப்பிறகு நடந்தது பெரிய விஷயம். பின்னால் வரும்.

மற்ற இருவரும்  விசித்திர வீர்யன் மனைவியானார்கள். புத்திர பாக்யமின்றி  விசித்திர வீர்யன்  சிலகாலத்தில் மறைகிறான். சத்யவதி பீஷ்மரையே அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டியபோது  தனது  பிரம்மச்சரிய விரதத்தை ஞாபகப் படுத்துகிறான்  பீஷ்மன்.
சத்யவதி பழசை நினைக்கிறாள்.  அவளை  பராசரர் சந்தித்தது  அவர் மூலம்  பிறந்த  வியாசர்  நினைவுக்கு வருகிறது. வியாசரை வேண்டுகிறாள்.  ''மகனே  நீ  தான்  எனக்கு உதவ வேண்டும். இந்த வம்சம் வளர  நீ  வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள  தாய் சொல்லைத் தட்டமுடியாமல்  தனது  சக்தி  அனுக்ரஹத்தால்  அம்பிகைக்கு  ஒரு பிள்ளை பிறக்கிறது.   ஆனால் பார்வையின்றி . அவனே  திருதராஷ்ட்ரன்.

பார்வையற்றவன் எப்படி  நாடாள முடியும்? (இந்த காலத்தில்  முடிகிறது!)    எனவே  வியாசரையே மீண்டும் வேண்ட வெளிறிய நிறத்தோடு அம்பாலிகைக்கு  பாண்டு பிறக்கிறான்.  சத்யவதியின்  சொல்லைத் தட்டமுடியாமல்  அடுத்ததாக  விதுரன் ராணியின் தாதிக்கு மகனாக பிறக்கிறான்.  ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்கிறதா?  தர்ம தேவதை ஆணி மாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் தாழ்ந்த குலத்து  தாதியின் மகனாக பிறந்து  விதுரன்  என்கிற  நீதி தர்மவானாகிறான். 

ஆணி மாண்டவ்யர் சாபம்  ஓ ரிரு வரியில் சொல்கிறேன்.  மாண்டவ்ய ரிஷியின் ஆஸ்ரம வாசலில் அவர் மௌன த்யானத்தில் ஈடுபட்டிருக்கும்போது சில திருடர்கள்  கொள்ளையடித்த பொருள்களோடு அங்கு வர, அவர்களைத் தொடர்ந்து ராஜாவின் காவலாளிகள் வேகமாக வருவதைக் கண்டு ஆஸ்ரமத்தில்  திருடிய பொருள்களைப் போட்டுவிட்டு  ஒளிந்துகொள்ள  வீரர்கள்  மாண்டவ்யரிடம் ''ஹே  ரிஷி, இங்கே சில திருடர்கள்  வந்தார்களா?'' எனக் கேட்க, மௌனத்யானத்தால்  ரிஷி பதில் சொல்லாதிருக்க, வீரர்கள்  ரிஷியின் ஆஸ்ரமத்தில் நுழைந்து  திருட்டுப்போருள்கள் அங்கே  இருப்பதைக் கண்டு கைப்பற்றி திருடர்களையும் பிடித்து  ரிஷியோடு சேர்த்து அரசனிடம்  கொண்டுசெல்ல, அவன் அனைவரையும் கழுவேற்ற, ரிஷி சாகவில்லை. கழுமரத்திலேயே  த்யானம் செய்து மற்ற ரிஷிகள் அவரை அணுகி  வேண்ட,  அரசன் தவறுக்கு வருந்தி கழுமரத்தை வெட்ட, அவர் உடலில் இருந்த கழு ஆணி வெளியே எடுக்க முடியாததால் அதோடு அவர்  செல்கிறார். ஆணி மாண்டவ்யர் என்ற பேர் நிலைக்கிறது.  

நேரே  தர்மதேவதையிடம் சென்று ''நான் செய்த தவறென்ன. எதற்காக இந்த மரண தண்டனை'' எனக் கேட்க  ''நீ சிறுவயதில் ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் சிறகில் கூரான தர்ப்பைப் புல்லைச்  செறுகினாய். அதன் விளைவு'' 
'
'அப்போது எனக்கு என்ன வயது?.
''பன்னிரண்டு'"
"'தர்மா,  ஒரு குழந்தை  14 வயதுக்குள் செய்யும்  'தவறுகள்  பாபமாகாது. எனவே  என் அறியாமையில் செய்த பிழைக்கு ஒரு பிராமணனுக்கு இந்த தண்டனை கொடுத்த நீ  இழி குலத்தில் பிறந்து எல்லோராலும்  அவமதிக்கப்படுவாய்''

ஆணிமாண்டவ்யர் சாபத்தால்  தர்மன்  விதுரனாக பிறந்தான்.  (நேரம் கிடைத்தவர்கள்  அவசியம் படிக்கவேண்டியது விதுர நீதி  என்கிற  அருமையான நூல்.  இதைப் பற்றியும்  எழுத  எனக்கு ஆவல். முடிந்தால்  செய்கிறேன்.)

மூன்று குழந்தைகளும் பீஷ்மர் மேற்பார்வையில்  வளர்ந்தனர். அரசர்களுக்கு  தேவையான  ஆயுத பயிற்சி பீஷ்மரிடம் பெற்றனர். உடல் வலிமை, தர்மம், நீதி சாஸ்திரம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி திருமணத்துக்கும்  தயாரானார்கள். பீஷ்மர்  திருதராஷ்டிரனுக்கு  காந்தார  தேசத்து  இளவரசி காந்தாரியை திருமணம் செய்து வைக்கிறார். காந்தாரி சிவ பக்தை . தனக்கு  நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் பெற்றவள்.  அவள் சகோதரன் சகுனி முன்னின்று  சகோதரிக்கு மணமுடித்து வைக்கிறான். கணவன் பார்வை இன்றி உள்ளதால்  எனக்கும் பார்வை வேண்டாம் என்று அன்று முதல் காந்தாரியும் தனது கண்களை மறைத்துக் கொள்கிறாள். 

யாதவகுலத்தில் சூரசேனன் என்று  அரசன்.அவன் மகன் வாசுதேவன், மகள் ப்ரிதை. அவனது உறவினன் குந்திபோஜனுக்கு குழந்தைகள்  இல்லை என்பதால்  நட்பினால்  ப்ரிதை  குந்திபோஜனிடம் வளர்கிறாள்.குந்தி என்று பேர் பெறுகிறாள். அங்கு தான்  அவள்  கன்னியாக இருக்கும்போது ஒருநாள்  துர்வாசர்  விருந்துக்கு  குந்தி போஜன் அரணமனைக்கு வர, அவள் உபசாரத்தில் மகிழ்ந்து வரம் அருள்கிறார்.  ''இந்த மந்திரத்தை உச்சரித்து எந்த  தெய்வத்தை வேண்டினாலும் அவர் அருளால்  உனக்கு  புத்திர பாக்கியம் கிடைக்கும் ''

சிறு பெண்,  ''என்ன நடக்கிறது பார்க்கலாம்'' என்று  அர்க்கனை  வேண்டி மந்திர உச்ச்சாடனம் செய்ய, கருவுருகிறாள், ஒரு குழந்தை  பிறக்கும்போது  சூரிய ஒளியுடன், கர்ண குண்டல, கவசங்களோடு பிறக்க நடுங்குகிறாள்.  குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து  அது ஆற்றில் மிதந்ததை ஏற்கனவே  அறிவீர்கள்.  ராதை என்பவள் கணவன் அதை எடுத்து வளர்த்ததால்  கர்ணனுக்கு வசு சேனன் என்ற பெயரோடு, ராதேயன் என்று ஒரு பெயர் நிலைத்தது. (ராதையின் கணவன்  ராதேயன் என்று  தவறாக எழுதினேன். அவன் பெயர்  அதிரதன்) 

எனவே,  குந்தியை  பீஷ்மர் பாண்டுவின் மனைவியாக மணமுடித்து வைக்கிறார். பீஷ்மர்  மாத்ர தேசத்துக்குச் சென்றபோது  அந்த அரசன் பெண் மாத்ரியையும்  பாண்டுவிற்கு  மணமுடிக்கிறார். 

விதுரனுக்கும் மணமுடித்து வைக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரன்  காந்தாரியின் மூலம்  100 பிள்ளைகளின்  தகப்பனாகிறான்,   ஏற்கனவே  சொன்னபடி  குந்தி  தர்மன் பீமன், அர்ஜுனன் ஆகியோரை மகன்களாக அடைகிறாள்.  மாத்ரிக்கு  நகுல சகாதேவர்கள் பிள்ளைகளாகிறார்கள்.

 பாரதத்தில்   காந்தாரி  இரண்டு வருஷம் சூல் கொண்டும்  மகப்பேறு  நேராதாதால்  வயிற்றினுள் இருக்கும்  கருவை பலத்தோடு தாக்க,  அது சிதைந்து  ஒரு உருண்டையாக  வெளிவருகிறது.  அந்த நேரம்  வியாசர்  அங்கு  வர, அவர் ''காந்தாரி  என்ன  செய்துவிட்டாய்  நீ. உடனே  100 சிறு  மண் கலயங்களில் ஹோம  நெய் கொண்டு வா என்று சொல்லி  அந்த உருண்டையை  100 துண்டுகளாக கட்டை விரல் நீளத்தில்  கலயங்களில்  சமமாக வைக்கப்பட்டு  இரண்டு வருடம் கழித்து வெளிவரட்டும்  என்கிறார்.  அவ்வாறே  அந்த  100 கலயங்களிளிருந்தும் துரியோதனன் முதலானோர்  பிறக்கிறார்கள் என்று வருகிறது. 

இதற்குள் குந்திக்கு தர்மன் பிறந்துவிட்டதால்  அவன் முதலில் பிறந்தவன்  ஆகிறான்.  துரியோதனனும் பீமனும் ஒரே நாளில் பிறக்கிறார்கள். துரியோதனன் பிறந்ததும்  குழந்தை  கழுதையின் குரலாக  ஒலித்ததாம். எங்கும் ஓநாய்கள், நரிகள், கழுதைகள், காக்கைகள், கழுகுகளும்  சேர்ந்து ஒலித்தனவாம் .  காற்று  புயலென வீசியது. தீ  பல இடங்களில் பரவியது. தீய  சகுனங்கள். விளைவு??

திருதராஷ்ட்ரன்  பீஷமரையும்  விதுரனையும்  அழைத்தான்..
------------------------------------------------
பாரதப் பயணம் 9                                             ஆரம்ப  அன்பும்  அரசனின்  நட்பும் 

'
​​
'வைசம்பாயன மகரிஷி,  பிறகு  என்ன ஆயிற்று?. 
விதுரர், பீஷ்மர், மற்ற குரு  வம்ச பெரியோர்கள் என்ன சொன்னார்கள்?''  என்றான் ஜனமேஜயன்.   தர்ம ஞாய நீதி மான் விதுரன்  ''அண்ணா,  இந்த வம்சத்துக்கு அடுத்த இளவரசன் யுதிஷ்டிரன் என்பது  அவன் முதலில் பிறந்தவன் என்பதால்  தெளிவாயிற்று.  ஆனால்  முக்யமாக கவனிக்கவேண்டியது உனது முதல் மகன் துரியோதனன் பிறந்ததும்  நேர்ந்த  அப சகுனங்கள்.  அவனால்  இந்த வம்சம் அழியும் உற்பாதம் பயங்கரமானது.  அவனை உடனே  கைவிட வேண்டும். மற்ற 99 மக்கள்  இருப்பதால்  கேடு விளைவிக்கக்கூடிய  இந்த  முதல் மகனை குல நன்மை, நாட்டு நன்மை,  மக்கள் நன்மை கருதி விலக்குவது அவசியம்'' என்றார்கள்   விதுரரும் மற்ற  சாஸ்திர ஞானிகளும் 

திருதராஷ்டிரனுக்கு  துர்யோதனன் மேல் இருந்த பாசத்தில்  யார்  எது சொன்னாலும் .அவன் கேட்கவில்லை.

ஜனமேஜயன்    ''மகரிஷி  வைசம்பாயனரே,  அந்த   நூறு  சகோதரர்கள் பேரை சொல்லுங்கள்  என்று  கேட்க   அவர்  நூறு பேர்களையும்  101வதாக பிறந்த ஒரு பெண்  பேரையும்  சொல்கிறார்.  (அந்த  பெயர்கள்   நமக்கு எதற்கு? உதாரணமாக  தமிழ் நாட்டில்  எத்தனை முனுசாமிகள்  என்று  தெரிந்து கொள்வதால் நேரம்  தான்  வீணாகும்  என்பதால் எழுதவில்லை.)

ஒரு விஷயம் மீண்டும் நினைவு கூர்வோம்.  ரிஷியின் சாபத்தால்  புத்திர பாக்கியம் இழந்த  பாண்டு தனது மனைவி குந்திக்கு துர்வாசர்  அளித்த வரத்தால்  யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன் சகாதேவன்  ஆகியோர்  பிறந்து பாண்டவ வம்சம் நீடித்தது.  யுதிஷ்டிரர்  துரியோதனைவிட முன்பாக பிறந்ததால்  பட்டத்து இளவரசன். 

 துரியோதனனனுக்கு  பாண்டவர்களை  ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் வந்ததிலிருந்தே பிடிக்கவில்லை.  அதிலும்  பீமன் அவனோடு ஒரே நாளில் பிறந்தாலும் அதிக  பலமிக்கவன்.  அவன் ஒருவனே  துரியோதனாதியர்  100 பேரையும்  ஒரே நேரத்தில் வெல்லக்கூடியவன் என்பதால் அவன் மீது  த்வேஷம் வளர்ந்தது.  எப்படியாவது பீமனைத் தொலைத்து  விட்டால் யுதிஷ்டிரன் அர்ஜுனன் ஆகியோரை சிறை வைத்து  தான்  நாட்டை ஆளலாம்  என்கிற எண்ணம்  அவனைப்போலவே  நாளுக்கு நாள் வளர்ந்தது.

இதற்கு முக்ய காரணம்   பீமன்  சக்தி வாய்ந்த  பலமிக்க  வாயுபகவானின் அனுக்ரஹத்தில் அவர்  சக்தியைக் கொண்டு பிறந்தவன்.  வஜ்ர தேகம் படைத்தவன்.

பாண்டுவின் மரணத்தோடு மாத்ரியும் உடன்கட்டை  ஏறியதால்  பெற்றோரற்ற பாண்டவ சிறுவர்கள் குந்தியோடு ஹஸ்தினாபுரம் அரண்மனையில் பீஷ்மர், விதுரர் திருதராஷ்டிரன் மேற்பார்வையில் 100 கௌரவ சிறுவர்களும் 5 பாண்டவ சிறுவர்களுமாக வளர்ந்தனர். பீமனின்  அமானுஷ்ய பலம்,  அதி தீர  வீர பராக்கிரம செயல்கள் துரியோதனின் பொறாமையையும்  விரோதத்தையும்  நாளுக்கு நாள்  வளர்த்து அவன்  தூக்கம் இழந்தான். பீமனை முதலில் தொலைத்துவிட திட்டங்களும் அவனோடு வளர்ந்தன.

உதக விராணா  என்ற ஒரு மாளிகை  கங்கைக் கரையில் தாயாரனது. துரியோதனன்  தனது சகோதரர்களுடனும் பாண்டவர்களுடனும் பொழுது போக்குவதற்கு ஏற்பாடு செய்தான்.  அனைவரும்  சென்றனர்.  ஏராள சிறந்த விருந்துகள் தாயாராகியது. கூடவே  கொடிய  நாக விஷமும் நிறைய கலக்கப்பட்டு பீமனுக்காக  தனி மரண உணவும் காத்திருந்தது. துரியோதனனே பீமனுக்கு அந்த விஷம் கலந்த உணவை உபசரித்து அளித்தான். இளைஞர்கள் அனைவரும்  கங்கையில் நீராடி விளையாடி  நன்றாக உண்டு  களித்தனர்.பீமனும் களித்தான். விரைவில் களைத்து மயங்கி விழுந்தான். காத்திருந்து இதை எதிர்பார்த்த துரியோதனன்  நீண்ட கொடிகளால் அவனைப் பிணைத்து கங்கையின் வெகு ஆழமான பகுதிக்குக்  கொண்டு சென்று  பீமன் நதியில்  வீசப்பட்டான்.

அந்த ஆழமான நதிக்கடியில் நாகலோகம் இருந்தது. பீமன் மயங்கி விஷம் அவன் உடலில் வேலை செய்ததால் கைகால் பிணைக்கப்பட்டு அங்கே போய் விழுந்ததால் ஆயிரக்கணக்கான விஷ நாகங்கள் அவனைத் தீண்டின.கடித்தன. தங்களது கொடிய விஷத்தை அவன் உடலில் பாய்ச்சின. விஷத்தை விஷத்தாலே  தான் எடுக்க வேண்டும் என்பார்களே. நாகங்களின் விஷம் அவன் உடலில் கலந்து   ஏற்கனவே அவன் உடலில் இருந்த விஷத்தை முறித்தன. விரைவில் பீமன் விழித்தெழுந்தான். தன்னை  பிணைத்திருந்த கொடிகளை  அறுத்து எறிந்தான். அணுகிய நாகங்களை த்வம்சம் செய்தான். எஞ்சியவை ஓடின. நாகலோக அரசன் வாசுகியிடம் செய்தி போனது. ஆச்சர்யமாக இருக்கிறது. 

ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு சக்தியா? வாசுகியின் அருகில் 
​அரியகன்
 இருந்தான். அவன் குந்தியின் தந்தைக்கு பாட்டன். பீமனை அழைத்து வரச் செய்து விசாரித்து விஷயங்கள் அறிந்து தனது வம்சத்தில் வந்தவன் என்று அறிந்து மகிழ்ந்
​து  பீமனை வரவேற்று உபசரித்து நாகலோகத்தில் கோலாகல விருந்து.

அரியகன் நாகலோகத்தரசர்களுக்கென்று பிரத்யேகமாக  இருந்த  ரசாம்ருதம் நிறைய பீமனுக்கு அளித்தான். அதை உண்டவர்களுக்கு  அதிக பலமும் சக்தியும், பராக்ரமமும்  கூடும். எவரும் அவர்களை வெல்லமுடியாது.

எட்டுநாள் பீமன் நாகலோக அரசனின் விருந்தாளியாக  உண்டு  உறங்கி பிறகு  கங்கைக்கரைக்கு திரும்பினான். இதற்கிடையே துரியோனாதியரும் பாண்டவர்களுடன் சேர்ந்து ஒப்புக்கு பீமனைத் தேடி எங்கும் அவன் காணவில்லையே என்றனர். அனைவரும்  ஹஸ்தினாபுரம்   திரும்பினார்கள்.பாண்டவர்கள் கவலையுற்றார்கள்.  பீமனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? எங்கே காணாமல் போனான்?  துரியோதனனுக்கு தெரியும் பீமன் இறந்தான் என்று. மிகவும் சந்தோஷத்தை உள்ளடக்கி  அவனும் மற்றவர்களைப் போலவே  பீமனைத் தேடினான்? ஒருவேளை  முன்பாகவே ஹஸ்தினாபுரம் திரும்பியிருப்பானோ?. 

அம்மா  பீமன்  இங்கே வந்தானா? என்று  யுதிஷ்டிரன் குந்தியைக் கேட்ட போது''இல்லையே'' எங்கே அவன்? என்று அவள்  திருப்பிக்கேட்டாள் . விதுரர் அங்கே வந்தவர் ''குந்தி கவலைப்படாதே, பீமனுக்கு ஒன்றும் ஆபத்து வராது.  உன்  பிள்ளைகள்  ஐவரும்  நீண்ட ஆயுளை உடையவர்கள் என்று அநேக ரிஷிகள் கூறியிருக்கிறார்கள். வெகு சீக்கிரம் நல்ல சேதி வரும்''என்றார். 

இது துரியோதனனின் வேலை என்று பாண்டவர்களும் விதுரரும் சந்தேகப்பட்டதால்  ஜாக்ரதையாக இருக்க பாண்டவர்களுக்கு அறிவுரை தந்தார் விதுரர்.  

இதற்கிடையில் பீமனைத் தேடிச்சென்ற பாண்டவர்கள் பீமனைக் கண்டார்கள். அவன் நடந்ததையெல்லாம் சொல்லியதும் இதை இனி வெளியே தெரிவிக்கவேண்டாம் என்று  யுதிஷ்டிரன் பீமனிடம் சொல்லி, இனி நம் ஐவரின் பாதுகாப்பு  நம்மிடம் தான் இருக்கிறது.  இனி நாம் ஒருவரைவிட்டொருவர்  பிரியாது  கவனமாக இருக்கவேண்டும்  என்று  தீர்மானித்தார்கள்.  மீண்டும்  துரியோதனன் பீமன் உணவில் விஷம் வைத்தும் அவன் அதை ஜீரணித்துவிட்டதால் பெருத்த ஏமாற்றத்தில் இருந்தான்  துரியோதனன். 

திருதராஷ்டிரன்  இளவரசர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க  கிருபாச்சாரியர் என்கிற  தனுர் வேத நிபுணரை நியமித்தான். யார்  இந்த  கிருபர்?   

கோதமர் என்கிற ரிஷிக்கு சரத்வான் என்று  ஒரு மகன். பிறக்கும்போதே  கைகளில் அம்புகளுடன் பிறந்த  தனுர் வேத சாஸ்திரத்தில் சிறந்தவன். அவனுடைய இரட்டை குழந்தைகளில் ஒருவர். சிறு குழந்தையாக இருந்தபோது கோதம ரிஷியால் கானகத்தில் விடப்பட்டு சந்தனு மகாராஜாவின் சேவகன் ஒருவனால் கண்டெடுக்கப்பட்டு சந்தனுவின் அரண்மனையில் வளர்ந்தவர். அவரது இரட்டைச்  சகோதரி தான் கிருபி. கிருபரின் மற்றொரு பெயர் கௌதமர். தனுர் வேதத்தில் நிகரற்றவர். இவரைத் தான் ஹஸ்தினாபுரத்திற்கு திருதராஷ்டிரன் வரவழைத்தான். 

பீஷ்மர்  தானும்  மற்றும்  கிருபர்  கற்றுக்கொடுப்பதும்   போதாது என்று  துரோணாச்சார்யரரையும் நியமித்தான். பாண்டவர்களும் கௌரவர்களும் அவரிடமும் தனுர் வித்தை பயின்றனர். 

''வைசம்பாயனரே, யார்  இந்த  துரோணர்?''  என்று கேட்டான்  ஜனமேஜயன். அவனோடு சேர்ந்து நாமும் தெரிந்து கொள்வோம். 

கங்கை நதிக்கரை  ஆஸ்ரமம் ஒன்று. அதில் ஒரு ரிஷி இருந்தார். அவர் பெயர்  பாரத்வாஜர்.  அவருக்குப் பிறந்தவர்  துரோணர்.  துரோணன்  தனுர் வித்தையில் ஈடு இணையற்றவன்.   பாரத்வாஜருக்கு ஒரு நண்பர். ப்ரிஷாதன் என்று  அவன் பாஞ்சால தேசத்து அரசன்.   அவன் மகன் துருபதன். அவன் பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு அவரிடம் கல்வி கற்க வருவான்.  

துருபதன்  சிறுவயதில் அங்கிருந்த சம  வயதினனான  துரோணனின்  நெருங்கிய நண்பனானான்.  காலம் சென்றது.   தந்தை ப்ரிஷாதன் மறைவுக்குப்  பிறகு  துருபதன் பாஞ்சால தேச அரசனானான். பாரத்வாஜரும்  விண்ணுலக மெய்தினார்.   தனியே  ஆஸ்ரமத்தில் வாழ்ந்த  துரோணன்,   கௌதமரின்  மகளான  கிருபியை   மணந்தான். அவர்களுக்கு  அஸ்வத்தாமன் என்று ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த உடனேயே அஸ்வத்தாமன்  உச்சைஸ்ரவஸ்  என்கிற  தேவலோக குதிரையைப்  போன்று  கனைத்தான்.   

அந்த காலத்தில் வாழ்ந்த  ரிஷி ஜமதக்னியின் குமாரர்,  வில் வித்தையில் பெரும் புகழ் பெற்ற பரசுராமர் தனது அஸ்த்ரங்களையும் தனுர் சாஸ்திர வித்தைகளையும் தான் மகேந்திர மலை செல்வதற்கு முன் பிராமணர்களுக்கு தானம் செய்யப்போகிறார் என்று அறிந்த துரோணர் பரசுராமரிடம் சென்று வணங்கி ஆசி பெறுகிறார். 

'துரோணா, உனக்கு என்ன வேண்டும் சொல்?.  என்னிடமிருந்த செல்வங்களை எல்லாம்  பிராமணர்களிடம் கொடுத்துவிட்டேனே!  என்  உடலும்  சில ஆயுதங்களும் மட்டுமே  உள்ளன.எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கொள்''என்றார்  பரசுராமர்.

''குருநாதா,  உங்கள்  ஆயுதங்களையும், அவற்றைப் பிரயோகிக்கும் முறைகளையும் எனக்கு அருள்வீர்'' என்றார் துரோணர். அஸ்த்ரங்களையும், அவற்றை செலுத்தும் மந்திரங்கள், மீண்டும் அவற்றைப் பெறும் மந்திரங்கள், பிரயோக முறை எல்லாவற்றையும்  பரசுராமரிடமிருந்து கற்று  துரோணர்  துருபதனை நோக்கிச் செல்கிறார்.

துருபதனை கண்டதும்  ''என் இனிய நண்பா''  என்று  துரோணர்   அரசவையில் அழைத்தது துருபதனுக்கு ஏனோ இனிக்கவில்லையே. அவன் இப்போது பாஞ்சால  மன்னன். அரச வைபோகத்தில் இருப்பவன்.  பழைய ஏழை நண்பன் துரோணனை இன்னமும் நண்பனகவா கருதுவான்?. ஏழைப் பிராமணரே, தாங்கள் என்னை  தங்களுடிய பிரிய நண்பனாக அழைப்பது தவறு. அரசனுக்குரிய மரியாதை குறையக்கூடாது. ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்கு தெரிந்தவன் என்கிற உறவு எப்போதும் நிலையல்ல.அவரவர் அந்தஸ்தில் தான்  நட்பு தொடரும். உமக்கும் எனக்கும அல்ல.''

துருபதனின் ஆணவப் பேச்சால்  புண் பட்ட துரோணர் நேரே  ஹஸ்தினாபுரம் செல்கிறார். 


 பாரதப்  பயணம் 11

                                                               ஒப்பற்ற  தனுர் வித்தை 

''ஜனமேஜயா,  இதைக் கேள்:  ஹஸ்தினாபுரம் வந்த துரோணர்  நேராக  தனது மைத்துனர்  கிருபரின் வீட்டுக்கு வந்தார்.  துரோணர் மகன் அஸ்வத்தாமன்  கௌரவர்கள்  பாண்டவர்களுக்கு  அவ்வப்போது கிருபரின்  தனுர் வித்தை பிரயோகங்களை  கற்றுக் கொடுத்தான். துரோணர்  அச்வத்தாமனின்  பராக்ரமம் ஹஸ்தினாபுரத்தில் அநேகருக்குத் தெரியாது. 

சிலகாலம்  அங்கு  துரோணர் தங்கியிருந்தபோது ஒரு நாள்  கௌரவர்கள் பாண்டவர்கள்  சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு பந்து  ஒரு ஆழமான கிணற்றில் விழுந்துவிட்டது.  அந்த கிணறு  துரோணர்  இருந்த இடத்துக்கு அருகாமையில் இருந்ததால் அந்த சிறுவர்கள்  எப்படி  கிணற்றுக்குள் விழுந்த பந்தை எடுப்பது என்று  தடுமாறிக் கொண்டிருந்ததை கவனித்தார். 

கருப்பு நிறத்தில்  வற்றலாக ஒரு  பிராமணர்  அக்னிஹோத்ரம் செய்து கரி படர்ந்த முகத்தோடு அங்கு நிற்பதைப் பார்த்து சிறுவர்கள் அவரை  அணுக,  ''பரத குலத்தில் பிறந்த வீரர்களா இப்படி ஒன்றும் தெரியாமல் வளர்கிறீர்கள். உங்களது ஆயுதப் பயிற்சி  இன்னும் முழுமைப்பட  வெகு காலம்  ஆகும்போல இருக்கிறதே.  சரி. உங்கள் பந்தை எடுத்துக்  கொடுத்தால் எனக்கு இன்று போஜனம் கிடைக்குமா?''
''ஆஹா  தாரளமாக.'' சிறுவர்கள் வியப்போடு  துரோணரைப் பார்த்தனர்.  சில தர்ப்பைகளை எடுத்தார் துரோணர். அவற்றை அந்த கிணற்றில் போட்டார்.  தனது கை விரலிலிருந்து ஒரு மோதிரத்தையும் கழற்றி கிணற்றில் போட்டார்.

''பிராமணரே,  எப்படி  பந்தை வெளியே எடுப்பீர்கள்?  எங்களுக்கு உங்கள் வித்தைகளைக்   கற்றுத் தாருங்கள்'' என்றான்  யுதிஷ்டிரன்.

''யுதிஷ்டிரா, இந்த தர்ப்பைகள்  ஆயுதங்களை விட  சக்தி வாய்ந்தவை. மந்திரங்களை உச்சரித்து இந்த தர்ப்பைகளை போட்டதால் ஒரு தர்ப்பை அந்த பந்தைத்   துளைக்கும், மற்ற தர்ப்பைகள் ஒன்றின் மேல்  ஒன்று தைத்து ஒரு சங்கிலியாகி  மேலே பந்துடன் வெளிவரும் பாருங்கள்'' என்று சொல்லி முடிப்பதற்குள்  பந்து ஒரு சங்கிலியில் மாட்டிக் கொண்டு வெளியே வந்து யுதிஷ்டிரனை அடைந்தது.

''பிராமணரே,  அந்த மோதிரம்?.... என்றான்  யுதிஷ்டிரன்  ஆச்சர்யம் மேலிட்டு.
''இதோ அந்த மோதிரம்  என்று சொல்லி  வில்லில் ஒரு அம்பை தொடுத்து கிணற்றில் எய்தார். அம்பு மோதிரத்தை தாங்கிக் கொண்டு  மேலே வந்தது. 

'''ப்ராமணரே,   நாங்கள்  இது போன்ற சாகசங்களை  கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. எங்களுக்கும்  கற்றுக் கொடுக்கவேண்டும்.''  என்றனர்  கௌரவர்கள் பாண்டவர்கள்  அனைவரும்.

''உங்கள் அரண்மனையில் பீஷ்மர் என்று  ஒருவர் இருக்கிறாரே, அவரிடம்  இதைப்  போய்  சொல்லுங்கள் . அவருக்குப்  புரியும்''   

சிறுவர்கள் சொன்ன விஷயம்  பீஷ்மர் காதுக்கு எட்டியதும்   அந்த பிராமணர்  துரோணர் தான்  என்று  புரிந்து கொண்டார். குழந்தைகளுக்கு  சரியான  தனுர் வேத  குரு கிடைத்துவிட்டார் என  சந்தோஷித்தார். நேரே சென்று அவரை உபசரித்து வரவேற்றார்.  அரண்மனைக்கு  அழைத்து வந்தார். துரோண ரோடு பேசியபோது தான் அவர் மனக்குறை வெளிப்பட்டது.  பாஞ்சால அரசன் துருபதன் அவமதித்தது முள் போல்  துரோணர் மனதில்  பதிந்தது தெரிந்தது. 

''ஒரு நாள்  என் மகன் அச்வத்தாமன்  சிறு குழந்தையாக இருந்தபோது பால் வேண்டும் என்று அழுதான். அவனுக்கு  பால்  தர  ஒரு பசு கிடைக்குமா என்று அலைந்தேன்.   கிடைக்கவில்லை. இதற்குள் அவன் நண்பர்கள் ஏதோ மாவில் கொஞ்சம் நீர் கலந்து ''இந்தா பால்'' என்று கொடுத்து அவனும் குடித்து மகிழ்ந்தான். பார்த்துக் கொண்டிருந்த சிலர் '' இந்த துரோணனுக்கு பிள்ளைக்கு  பால்  வாங்கிக்கொடுக்கக்  கூட  வழியில்லை.    பாவம் அந்த பிள்ளை  மாவைக் கரைத்து கொடுத்ததை  பால்  என்று குடித்து  ஏமாந்து போய்  சிரிக்கிறது''   என்று சொல்லும்போது என் இதயம் வெடித்தது.  நம் நண்பன் பால்ய சிநேகிதன், நல்ல நிலையில் ஒரு நாட்டின் அரசனாகி இருக்கிறானே,   அவனிடம் ஒரு பசு பெற்றுவரலாம் என்று புறப்பட்டேன். ''என் நண்பா'' என்று நான் சொன்னதே  பெருங் குற்றமாகிவிட்டது. 
உனக்கு  நான்  ராஜாவானால்  பாதி ராஜ்ஜியம் தருகிறேன் என்று பால்யத்தில் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே  ஒரு வாக்கு என்று எடுத்துக்கொள்வதே தவறு. சமய சந்தர்ப்பங்களுக்கு தக்கவாறு  சில சமயம் பேசுவதெல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தாது'' என்று என்னை  இகழ்ந்தான் துருபதன்'' 

''துரோணாசார்யரே, கவலையை விடும். இனி எங்கள் அரண்மனையில் நீங்கள் ஒரு சிறந்த  ஆசான். உங்களுக்கு தக்க மரியாதை சௌகர்யங்கள் அனைத்துமே நான்  ஏற்பாடு செய்து தருவேன். கௌரவர்கள் பாண்டவர்களுக்கு அஸ்திர வித்தை அனைத்தும்  நீங்கள்  கற்றுத்தரவேண்டும் என்று வேண்டுகிறேன்''  என்றார் பீஷ்மர்.

துரோணர்  சிறுவர்களுக்கு  வில் வித்தை  குருவானார்.  ஒரு நாள்  ''என் மாணவர்களே, நீங்கள் என்னிடம் சகல வித்தைகளையும் கற்றுக்கொண்டபின் என் எண்ணம் ஒன்றை நிறைவேற்றுவீர்களா.  இதுவே  நீங்கள் எனக்கு தரும்  குரு சம்பாவனை ஆகும்''  என்று  கேட்டபோது கௌரவர்கள் பதில் சொல்லவே இல்லை. பாண்டவர்களில்  ஒருவனான  அர்ஜுனன் மட்டும்  ''குருவே, அதை என் கடமையாக  நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்ற போது அவனைக் கட்டி  ஆலிங்கனம் செய்து அன்பு மழை பொழிந்தார் துரோணர்.

துரோணரின் வித்தைகளை சிறந்தமுறையில் கற்றுக்கொண்டு  அர்ஜுனன்  ஆசிரியரின் தனி மதிப்பைப்  பெற்றான்.

இருட்டில்  உணவை எங்கிருக்கிறது என்று தெரிந்து கை வாய்க்கு கொண்டுசெல்வது போல், வில்லில் அம்பு பூட்டி இலக்கு எங்கிருக்கிறது என்று ஊகித்து அம்பை தவறாமல் குறி பார்த்து செலுத்தும் சக்தியை பழக்கப் படுத்திக் கொண்டான். குருவின் ஆசியும் வாழ்த்தையும் பெற்றான். ஓடும்  குதிரைமேல், யானைமேல், தேரின் மேல், நடந்து கொண்டு  என்றெல்லாம் அஸ்தரம் செலுத்தும் வித்தையிலும் சிறந்து விளங்கினான். கதை, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களை செலுத்துவதிலும் நிகரற்றவனானான்.  

நிஷாதர்களின்  அரசன்  ஹிரண்ய தனுவின் மகன் ஏகலவ்யன்.  காட்டில் இருந்த அவனுக்கு  துரோணரிடம் பயிற்சி பெற ஆவல். ஆனால் அரச குலத்தவரன்றி மற்றவர்க்கு அவர்   ஆசானாக இருப்பதில்லை என அறிந்து அவரது பதுமை ஒன்றை எதிரே சமைத்து அதை வணங்கி  வில் வித்தை தானாகவே  கற்றுக்கொண்டான். சிறந்தவன் ஆனான். 

ஒரு சமயம் ஹஸ்தினாபுர இளவரசர்கள் அனைவரும் ஒரு காட்டுக்கு வேட்டையாட சென்றனர். கூடவே அவர்கள் ஒரு நாயையும் கூட்டி சென்றனர். அவர்கள் வேட்டையாடும்போது நாய் எங்கோ காட்டுக்குள் உள்ளே சென்று ஏகலவ்யன் இருந்த இடத்துக்கு சென்றது. அவனது கரிய நெடிய சடை முடியைக் கண்டு அவனைப்பார்த்து குலைத்தது. ஏகலைவன் தனது வித்தையைக் காட்ட  ஒரு அம்பை அதன் மீது எய்து அதன் நாக்கில் 7 அம்புகள் தைத்திருக்குமாறு செய்யவே, அது நேராக பாண்டவர்கள் இருந்த இடம் வந்து சேர்ந்தது. ஒரு நாய்  வாய் திறந்து குலைத்து வாய் மூடுவதற்குள் அதன் நாவில் 7 அம்புகளை பதிக்கும்  கைதேர்ந்தவன்  யார்?  நமக்கே இந்த வித்தை தெரியாதே?  என்று  வியந்து பாண்டவர்கள் காட்டில் உள்ளே சென்று தேடி, ஏகலவ்யனை சந்திக்கிறார்கள். 
''யார் நீ?''
''இளவரசர்களே  நான்  இந்த காட்டின் அரசன் ஹிரன்யதனுவின் புதல்வன் ஏகலவ்யன். நானும் உங்கள் துரோணரின் சிஷ்யன் என்பதை மறவாதீர்கள்''

அப்பறம் என்ன நடந்தது என்று  ஜனமேஜயன் கேட்க  வைசம்பாயனர்  தொடர்கிறார்
பாரதப் பயணம் 12 

                               பயிற்சியும் போட்டியும்          

பாண்டவர்கள் நேராக  துரோணரிடம் சென்று காட்டில் தாங்கள் பார்த்த அபூர்வ தனுர் வித்தையை பற்றி சொன்னாலும் அர்ஜுனன் தனியாக துரோணரிடம் சென்றான். அவன்  மிகவும் விசனமாக இருந்தான்.

''என்னடா அர்ஜுனா உனக்கு முக வாட்டம்? என்று அவனை அணைத்தவாறு கேட்ட ஆசிரியர் துரோணரிடம் 

''நீங்கள்தானே  நான் தான் உங்களுடைய பிரதம சிஷ்யன், என்னைவிட சிறந்த வில்லாளி கிடையாது என்றெல்லாம் உற்சாகமூட்டுவீர்களே, பின் எதற்காக ஒரு சிஷ்யனை காட்டுக்குள் ரகசியமாக வைத்து அவனுக்கு எனக்கு கற்றுக் கொடுக்காத தெல்லாம் கற்பித்தீர்கள்? என்னைக்காட்டிலும் அந்த ஏகலவ்யன் உங்களுக்கு அவ்வளவு உயர்ந்தவனா?''

விஷயம் எல்லாம் கேட்டு  துரோணர் ஸ்தம்பித்தார்.''வா  அர்ஜுனா  என்னோடு. எங்கே அந்த ஏகலவ்யன் அவனை எனக்குக் காட்டு''    

காட்டில் தூரத்திலேயே துரோணரைப் பார்த்துவிட்ட  ஏகலவ்யன் ஓடி வந்து அவர் காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். ''நான்  உங்கள்  சிஷ்யன்  என்னை ஆசிர்வதிக்க வேண்டும்'' என்று பெருமிதமாகக் கேட்டுக்கொண்டான்''

'ஏகலவ்யா,  நீ என் சிஷ்யனானால், என்னிடம் வித்தை கற்றுக்கொண்டவன் என்பது உண்மையானால், எனக்கு குரு தக்ஷிணை தரவேண்டுமே''

''குருநாதா, எனக்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நான் என்ன தரவேண்டும் என்று  கட்டளையிடுகிறீர்களோ அவ்வாறே செய்கிறேன்''

''வேறொன்றும் தரவேண்டாம், உனது வலது கையில் கட்டைவிரல் மட்டும் எனக்குத் தா ''

துளியும் சிந்திக்காமல், கவலைப்படாமல் ஏகலவ்யன் இடது கையில் வாள்  ஏந்தி வலது கட்டைவிரலை வெட்டி ஆசான் முன் சமர்ப்பித்தான். இனி அவனால் சிறந்த அஸ்த்ர வித்தைகளை  வலது கட்டை விரல் இன்றி பிரயோகிக்க முடியாது. (இணையதளத்தில் தமாஷாக ஒரு கதை உலா வந்தது.தெரியுமோ? 
இவ்வாறு யோசனையே பண்ணாமல் ஏகலவ்யன் ஏன்  வலது கட்டை விரலை வெட்டிக் கொடுத்தானாம்? 
அவன் தான் இடது கை ஆசாமி ஆயிற்றே. அவனது இடது கட்டை விரல் அல்லவோ முக்கியம்.?) 

துரோணரிடம் கதாயுதம் பயிற்சி பெற்றதில் இருவர் பிரதம சிஷ்யர்கள்.  பீமனும் துரியோதனும். அவர்கள் இருவருமே எலியும் பூனையும் ஆயிற்றே. அர்ஜுனன் சகல கலையிலும் வல்லவன் என பெயர் எடுத்தான். அதிரதன் ஆனான்.- அதாவது அறுபதாயிரம் பேரை  எதிர்த்து  தேரோட்டிக்கொண்டே வெல்பவன் ---திருதராஷ்ட்ரனின் 100 பிள்ளைகளும் அர்ஜுனன் சாமர்த்தியத்திலும் பீமன் பலத்திலும் இன்னும் அதிக பொறாமை கொண்டனர்.

ஒரு சமயம்  ஒரு மரத்தின்  உச்சாணி கிளையில் ஒரு சிறிய  பறவை பொம்மை வைத்து எல்லோரையும் நிற்க வைத்து ''அதோ அந்த பறவையின் தலையை மட்டும் வெட்டி எறியும்படியாக  அம்பை விட வேண்டும். ஒவ்வொருவராக முயற்சி செய்யுங்கள்''என்றார் துரோணர்.

யுதிஷ்டிரன் அருகில் வந்தார். ''யுதிஷ்டிரா அந்த பறவை தெரிகிறதா,சொல் ?''

''மரம், கிளை, பறவை, நீங்கள், என் மற்ற சகோதரர்கள் எல்லாமே கவனத்தில் இருக்கிறது ''

''ஒ அப்படியா.  சரி நீ  நகர்ந்து கொள்''ற கௌரவர்களையும்,  பாண்டவர்களையும் இதே போல் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் அவருக்கு திருப்தி அளிக்காததால் அவர்கள் அனைவருமே  முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் துரோணர்.

அர்ஜுனனிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது.

''அர்ஜுனா,  நான் சொல்லும்போது உடனே  அம்பை செலுத்தவேண்டும். அதற்கு முன் என்ன தெரிகிறது என்று சொல்' மரம் தெரிகிறதா?
இல்லை,
கிளை"
இல்லை, பறவை?
இல்லை, 
நான்?
இல்லை,
உன் சகோதரர்கள்?
இல்லை, 
பின் என்ன தான் தெரிகிறது உனக்கு?
பறவையின் தலை மட்டுமே.
அம்பை செலுத்து.
அடுத்த கணம் பறவையின் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. அர்ஜுனனை மார்புற தழுவினார்  துரோணர்.
ஒருசமயம் கங்கையில் ஸ்நானம் செய்யும்போது துரோணர் காலை ஒரு முதலை கவ்வி இழுத்தது. 

''சிஷ்யர்களே என்னை ஒரு முதலை கவ்வி இழுக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் '' என்று குரல் கொடுத்தார். அர்ஜுனை கரையில் நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தவன் ஐந்து கூறிய அம்புகளை செலுத்தி முதலையைக் கொன்றான்.

துரோணர் அர்ஜுனனின் குருபக்தியை மெச்சி அவனை அனைத்துக் கொள்கிறார்.''அர்ஜுனா  நான் இன்று ஒரு முடிவு செய்து விட்டேன். என்னிடம் இருக்கும் ஒரு அதி சக்தி வாய்ந்த  அஸ்திரம் பிரம்மாஸ்திரம்.  அதை எப்படி பிரயோகப் படுத்துவது, எப்படி  அதை உன்னிடமே  மீட்பது என்பவற்றை உனக்கு  உபதேசிக்கப்போகிறேன். ஒன்று மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். எக்காரணம் கொண்டும் அதை மனிதர்கள் மேல் பிரயோகிக்கக் கூடாது. அதை இவ்வாறு தாழ்ந்த சக்தி கொண்டவர் மீது பிரயோகித்த்தால் இந்த பிரபஞ்சத்தையே அது தீக்கிரையாக்கிவிடும். ஜாக்ரதை. இந்த அஸ்திரம் ஈடிணையற்றது. இது போன்ற அஸ்த்ரத்தை உன் மீது ஒரு எதிரி செலுத்தினால், அதை தடுக்க வேண்டுமானால் நீ இந்த அஸ்திரத்தை பிரயோகிக்கலாம்.''

ஒன்று நிச்சயம்  அர்ஜுனா. வில் வித்தையில் உன்னை வெல்ல இனி எவரும் இல்லை. உன் சாகசங்கள் உலகம் உள்ள வரை மெச்சப்படும் என்பது நிச்சயம்.''

ஒரு நாள்  துரோணர் ஹஸ்தினாபுரம் அரண்மனையில் திருதராஷ்டிரன், விதுரர், பீஷ்மர், முன்னிலையில் அரசர்களே, உங்கள் இளவரசர்களுக்கு  எனக்குத் தெரிந்த வித்தைகளை  கற்றுக்கொடுத்து விட்டேன், இனி அவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டியது மட்டுமே பாக்கி உள்ளது.என் வேலை முடிந்து விட்டது. 

மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவரும் துரோணருக்கு நன்றி கூற  திருதராஷ்டிரன் ''விதுரா, எனக்கு இந்த தேர்ச்சியைக் காண கண்களில்லை. நீ வேண்டிய  ஏற்பாடுகள் செய்து நமது செல்வங்கள் தங்களை ஆற்றலை வெளிப்படுத்த ஒரு நாள் குறித்து விடு. தகுந்த இடத்தை ஏற்பாடு செய்.''

அவ்வாறே ஒரு இடம் தேர்ந்தேடுக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் ஒரு பெரிய மேடை அமைத்து அதில் அரசர்கள் வீற்றிருக்க  ஒரு  வீரப் போட்டி துரோணர் பீஷ்மர், விதுரர் கிருபர், திருதராஷ்டிரன் காந்தாரி, குந்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.ஹஸ்தினாபுரமே  ஒன்று சேர்ந்து அங்கு திரண்டது.மல்யுத்தம், கதாயுதம், வில் வித்தை, வாள் வீச்சு, ஈட்டு எறியும் போட்டி எல்லாம் சிறப்பாக  நடைபெற்றது. பீமனும் துரியோதனும் கதாயுதத்தில் மோதும்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் இரண்டு கட்சிகளாக பிரிந்து இவன் தான் ஜெயிப்பான், அவன் தான் ஜெயிப்பான் என்று  வீராவேசமாக ஆர்வத்தோடு ஆதரித்தனர். துரோணர்  அஸ்வத்தாமனிடம் ''இருவரையும் சமாதானப் படுத்தி வை. ஏதேனும் விபரீதம் நடக்காமல் தடு'' என்றார்.

''எனது சீடன் அர்ஜுனன் இப்போது தனது வில் வித்தையைக் காட்டுவான்'' என்று  துரோணர் அறிவித்தவுடன் அனைவரும் கடல் அலையென கரகோஷம் செய்தனர்.  அர்ஜுனன் அனைவரையும் வணங்கி, குருவின் தாள் தொட்டு  பணிந்து அக்னி அஸ்திரத்தை விடுத்து தீயை வரவழைத்தான். எங்கும் தீ. அடுத்து வருணாஸ்திரம் எய்து நீரால் அதை அணைத்தான். வாயுவாஸ்திரம் செலுத்தி எங்கும் பெரும்  காற்றை அனுப்பினான், அடுத்து மேகாஸ்திரம் எய்து எங்கும் கரு நிற மேகக் கூட்டங்களை கொணர்ந்தான். பர்வதீய அஸ்தரம்  மலைகளைக் கொண்டு வர, அந்தர்தான அஸ்திரம் அனுப்பி எதையுமே காணமல் போக்கினான்.எத்தனையோ தந்திர வித்தைகள் காட்டினான். 

நிகழ்ச்சி முடியும் தருணம்.கர்ணன் அங்கே தோன்றினான், அவனது கையில் ஒரு பெரிய வில், நிறைய அஸ்த்ரங்கள். தனது வில் வித்தையைக் காட்ட வந்தான்.

யார் இவன்? என்றான் அர்ஜுனன்.

''அர்ஜுனன் நிகழ்த்திய  சாகசச் செயல்கள் அனைத்தையும், ஏன் அதைவிட  அதிகமாகவே என்னால் செய்து காட்ட முடியும்'' என்றான் கர்ணன். துரியோதனன் மிகவும் மகிழ்ந்தான்.அவனைக் கட்டி மகிழ்ந்தான். '
'உனக்கு என்ன தேவை சொல் கர்ணா?'' என்றான் துரியோதனன்.

''உன் நட்பொன்றே போதும் நண்பா. முடிந்தால்  எனக்கு ஒரே விருப்பம்  அர்ஜுனனோடு தனியே மோத வேண்டும். யார் சிறந்த வில்லாளி என்று தெரிந்து கொள்ளவேண்டும்''

அர்ஜுனன் தனது வில்லையும் அஸ்த்ரங்களையும்  எடுத்துக் கொண்டு கர்ணனோடு போட்டியிடத் தயாரானான்.
திருதராஷ்டிரன் மக்கள் அனைவரும் கர்ணனை உற்சாகப்படுத்த,  பீஷ்மர், கிருபர், ஆகியோர் அர்ஜுனனை நோக்கினர். குந்தி மயக்கமடைய  விதுரர் அவளை மயக்கத்திலிருந்து தெளிவிப்பதில் ஈடுபட்டார். 
கிருபர் முன் வந்து கர்ணனை அணுகினார்.''இந்த பாண்டவன் குந்தி ராணியின் இளைய மகன். கௌரவ வம்சம். உன்னோடு அர்ஜுனன் மோதுவான். நீ யார், எந்த தேசத்தவன், எந்த ராஜ வம்சம் பற்றி எல்லாம் சொல்கிறாயா? அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.அரச குமாரர்கள் அவர்களுக்குள்  போட்டியிடுவது தான் முறை. மற்றவர்கள் போட்டியிட அனுமதி இல்லை''என்றார் கிருபர். 
வைசம்பாயன ரிஷியே, கர்ணன் அர்ஜுனனோடு மோதினானா?  என்று  வினவினான் ஜனமேஜயன். நாமும் போட்டி பற்றி இனி அறிவோம்.


16     வசிஷ்டர் கதை 
அர்ஜுனன் தன்னை  கங்கைக் கரையைக் கடக்க முடியாதபடி தடுத்த  கந்தர்வனை  எளிதில் வென்று அவன் மூலம் வசிஷ்டரைப் பற்றி  அறிவதை  வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு  எடுத்துரைப்பதில் இப்போது  தொடங்குவோம்.
''ஜனமேஜயா,    வசிஷ்டர்  ரிஷிகளில்  முதன்மையானவர். பிராமணர், பிரம்மரிஷி என்று போற்றப்பட்டவர்.  அவருக்கும்  விச்வாமித்ரருக்கும்  எப்படி  எதனால்  ஒரு  எதிர்ப்பு நேர்ந்தது என்பதை சற்று விவரமாக  அறிவோம்.
கன்யாகுப்ஜத்தில் ஒரு கெளசிக  ராஜா. அவனுடைய மகன் விஸ்வாமித்திரன். வேட்டையாடுவதில் விருப்பமான  விஸ்வாமித்திரன்  ஒருநாள்  ஒரு காட்டில்  களைத்துப் போனவன்  தாகத்திற்கு  தண்ணீர் தேடி அலைந்தான்.  அந்த காட்டில் வசிஷ்டர் ஆஸ்ரமம் இருந்தது.  வசிஷ்டர்  விஸ்வமித்ரனை வரவேற்று,  உபசரித்து, நீர்,கனிவகைகள்  நிறைய அளிக்கிறார்.   
 வசிஷ்டரிடம் ஒரு தெய்வீகமான  அதிசயப்  பசு. அது யார்  எதைக் கேட்டாலும் தரும். நந்தினி என்று அதற்குப் பெயர்.  
விஸ்வாமித்திரன், அவனுடைய  சேனை அனைத்திற்கும் பசி  தீர்க்க,  வசிஷ்டர்  '''நந்தினி அம்மா,  நீ  இவர்கள்  அனைவருக்கும் அவர்களுக்கு விருப்பமான  உணவு, பானம்  அளிப்பாயாக''  என்று  சொன்ன மறு கணமே  ஏராளமாக  உணவு இனிய  பான வகைகள்  தயாராயின.  அனைவரும் வயிறார  உண்டு  பசி தீர்ந்தனர். 
விஸ்வாமித்திரன் திகைத்து போனான்.'' இப்படி ஒரு பசுவா?''  
''பிராமண  ரிஷியே ,  நீர்  இந்த காட்டில்  தனியாக  உள்ளீர்.  உம்மிடம் உள்ள  இந்த பசு  எனக்கு வேண்டுமே.  நான் இப்போதே  10000 தங்க கட்டிகள் தருகிறேன், என் ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு இந்த நந்தினியை தரவேண்டும் '' என்று கேட்டான் விஸ்வாமித்திரன். 
''விஸ்வாமித்ரா,  இந்தப்  பசு, தேவர்களுக்கு, பித்ருகளுக்கு, அதிதிகளுக்கு உபசாரம் செய்ய, மற்றும் எனது ஹோம யாகங்களுக்கு உதவ மட்டுமே என்னிடம் இருக்கிறது. இதை எதற்காகவும் தர இயலாது.'' 
''வசிஷ்டரே, இந்த விஸ்வாமித்திரன் இந்த காட்டையும்  சொந்தமாக  கொண்ட  அரசன்.  சக்தி வாய்ந்தவன், அவன் விரும்பியது எதுவும் நிறைவேறும். நந்தினியை தரவில்லையானால், நானே  எடுத்துக் கொள்வேன், எதுவும் என்னை தடை செய்ய முடியாது.  புரிந்துகொண்டு நீங்களாகவே நந்தினியை எனக்கு அளிப்பது உசிதம்''
''கௌசிகா, நான்  என்ன சொல்வது.   நீ  சக்தி வாய்ந்த அரசன்.    நான்  சொன்னதைக் கேளாமல் பிடிவாதமாக நீ நந்தினியைக் கைப்பற்றுவேன் என்கிறாயே, சரி, உன் விருப்பப்படியே  நீ  நந்தினியை  எடுத்துச் செல்''
''வீரர்களே  இந்தப் பசுவையும்  அதன் கன்றையும்  பிடித்து  எடுத்துக்கொண்டு வாருங்கள்  நாம்  செல்லலாம்.'' 
தன்னை நெருங்கி சேனையைச் சேர்ந்தவர்கள்  வருவதை நந்தினி பார்த்தது.  நந்தினிக்கு வசிஷ்டரை விட்டு அகல விருப்பமில்லை. அவரை நோக்கி அலறியது. 
''என்னை வலுக்கட்டாயமாக இழுக்கிறார்களே,பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே''
 ''அம்மா  நந்தினி, உன் எண்ணம் தெரிகிறது. அரசன் க்ஷத்ரிய பலத்தை காட்டுகிறான். நான்  பிரம்மத்தையும் அன்பையும் உபாசிக்கிறவன். நான் உன்னைப் போகச் சொல்லவில்லையே. நீ  என்னுடனே இரு.  நீ  விரும்பினால் விஸ்வாமித்ரனிடம் செல்''
நந்தினி காதை உயர்த்தியது. கண்கள் சிவந்தது. அருகே தனது கன்றை நெருங்கியவர்களைபார்த்து  உடல் சிலிர்த்தது. வால் முறுக்கேறியது. உஷ்ணமாக கோப மூச்சு வெளியேறியது. கண் இமைக்கும் நேரத்தில்  விஸ்வாமித்திரன் சேனையை எதிர்த்தது. வால் நுனியிலிருந்து தஹிக்கும் நெருப்பு துண்டங்கள் பெருகி வெடித்தன. விஸ்வாமித்திரன் சேனை சிதறி அழிந்தது.  நந்தினியின்  உடல் ரோமங்களிலிருந்து  கந்தர்வர்கள்,வானவர்கள், தேவர்கள், பலர் ஆயுதங்களோடு தோன்றினார்கள். விச்வாமித்ரனையும் அவன் சேனையையும்  தாக்கினார்கள்.  உயிர் தப்பி விஸ்வாமித்திரன் வீரர்கள் ஓடினார்கள். நந்தினி ஒருவரையும் கொல்லவில்லை. அவர்களை 27 மைல் தூரம் விரட்டியது.
விஸ்வாமித்திரன் தெளிந்தான். தனது க்ஷத்ரிய பலம்,   வசிஷ்டரின் தவம், பிரம்ம சக்திக்கு முன் ஒன்றுமே இல்லை. இனி நானும் தவ வலிமை பெறுவேன்''  என தீர்மானித்தான். ராஜ்ஜியம் துறந்தான். கடும் தவம் புரிந்தான். இந்தரனுக்கு சமானமானான்.
கந்தர்வன்  மேலும்  அர்ஜுனனுக்கு ஒரு கதை சொன்னான்.   
கல்மஷ்பதன் என்று ஒரு இக்ஷ்வாகு வம்ச ராஜா. எல்லா ராஜாக்களையும் போல் அவனும் ஒரு நாள் காட்டில் வேட்டையாடி களைத்து குடிக்க தண்ணீர் பசிக்கு ஆகாரம் தேடும்போது விச்வாமித்ரரைக் கண்டு அவர் சிஷ்யனானான். ஒருநாள்  வழியில் வசிஷ்டரின் நூறு புத்ரர்களில் முதல்வனான  ஷக்த்ரி என்கிற  முனிவன்  எதிரே பாதையில் வருவதைப் பார்த்து ''வழியை விட்டு தூரம் போ'' என்கிறான். முனிகுமாரன் அவனுக்கு நீதி புகட்டுகிறான். அரசர்கள் பிராமணர்களையும் ரிஷிகளையும் சந்திக்கும்போது அவர்களுக்கு உபசாரம் செய்யவேண்டும். எனவே நீங்கள் தான் முதலில் வழி விடவேண்டும்'' என்கிறான். 
அரசன் வெகுண்டு சாட்டையால் முனிகுமாரனை அடிக்க, அவன் நீ  ராக்ஷசத்தனமாக நடந்துகொள்வதால் ஒரு ராக்ஷசனாகப் பிரப்பாயாக  என்று  சபிக்க,  கல்மஷ்பதன் சுருண்டு விழுந்து இறக்கிறான்.  அந்த பக்கமாக  விஸ்வாமித்திரர்  வந்து விஷயம் அறிகிறார். கல்மஷ்பதன் உடலில் ஒரு ராக்ஷசனை   விஸ்வாமித்ரர்  குடியேற்றுகிறார் .   
அந்த  ராக்ஷசனை  ஒரு  பிராமணன் ஒரு நாள்  காட்டில் சந்திக்கிறான். பசியால்  வாடும்  அவனுக்கு  ராக்ஷசன்  மனித மாமிசத்தை அளிக்கிறான்.  பிராமணன்  பசியோடு வாடியவன் ''கல்மஷ்பதா,  என்னை   ஏமாற்றி நர மாமிசத்தை உணவாக அளித்த   நீ  இனி  மனித மாமிசத்தையே உணவாக தேடி வாடி அலைவாய்''  என்று சபிக்கிறான். 
இவ்வாறு சபிக்கப்பட்ட விச்வாமித்ரனின் சிஷ்யன் கல்மஷ்பதன்  தான் வசிஷ்டர் மகன் விச்வாமித்ரரோடு  வழி யாருக்கு யார் முதலில் விடவேண்டும் என்று வாதித்துக் கொண்டிருக்கும்போது வசிஷ்டரின் குமாரன் ஷாக்திரியைக்கொன்று  விழுங்கிவிட்டான். விச்வாமித்ரரின் தூண்டுதலால்  வசிஷ்டரின் மற்ற 99 குமாரர்களையும்  கொன்று  புசித்து விட்டான். 
பிரம்ம ரிஷி வசிஷ்டர்,   விச்வாமித்ரரின்  இந்த செயலால் தனது 100 புத்ரர்கள் மாண்டதை அறிந்து துளியும் கோபம் கொள்ளவில்லை. தனது தவ வலிமையால்  கௌசிகனையோ அவன் வம்சத்தையோ  பூண்டோடு அழிக்கவில்லை.  யமனிடத்தில் வேண்டி  இறந்த தனது 100 புத்ரர்களை உயிர்ப்பிக்க யாசிக்கவும் இல்லை. மிகுந்த வருத்ததோடும் வேதனையோடும் வசிஷ்டர்  தனது உயிரைத்தியாகம் செய்ய தீர்மானித்து,  மலைமீதிருந்து வீழ்ந்தபோதும்,  கடலில் குதித்தபோதும், தீயில் இறங்கியபோதும்  அவரது தவ வலிமை அவரை பாதுகாத்து  மீட்டதால்  அவர் தனது ஆஸ்ரமத்துக்கு மீண்டார். தவத்திலேயே காலம் கழித்தார்.  
ஆஸ்ரமத்துக்கு  அவர்  திரும்பியபோது அவர் பின்னே  யாரோ வேதங்களை உச்சரிப்பது காதில் விழவே திரும்பிப்  பார்த்தவர்  தனது மகன் ஷக்த்ரியின் மனைவி அத்ரிஸ்யந்தி  தன் பின்னே தொடர்ந்து வருவதைக் கண்டார்.
'' யாரம்மா இங்கே இப்போது  வேதம் ஓதியது?''
''தந்தையே, தங்கள் புத்திரன்  ஷக்திரியின் குமாரன் என் வயிற்றில் வளர்பவன் தான் வேதங்களை ஓதியவன்'' என்கிறாள். வசிஷ்டர் மகிழ்கிறார்.  வசிஷ்டர் வம்சம் இனி தொடருமே .  
ஒருநாள் காட்டில்  தனது மகன்களைக் கொன்ற  கல்மஷ்பதனை  வசிஷ்டர்  காண்கிறார்.  அவர் மகன் அல்லவா அவனை சபித்தது என்று  வெகுண்டு அவரையும் கொன்று தின்பதற்கு முயல்கிறான் கல்மஷ்பதன்.   வசிஷ்டர்  அவன் மேல் பரிதாபம் கொண்டு கமண்டலத்தில் நீர் எடுத்து மந்திரம் ஜபித்து  தெளித்து அவனை பழைய ராஜாவாக மாற்றுகிறார்.  அவன்  செய்த  தவறுகளுக்கு அவரிடம் மன்னிப்பு பெறுகிறான். அயோத்தி திரும்புகிறான்.  அவனது இக்ஷ்வாகு குலமும்  வாரிசுகளை  பெறுகிறது.
ஆஸ்ரமத்தில் குறித்த காலத்தில்  ஷக்த்ரியின் மகன் பிறந்து  வசிஷ்டரால்  பராசரன்  (உயிரூட்டுபவன்)  என்று பெயர் பெறுகிறான். பராசசர  முனி பின்னர்  யாகம் வளர்த்து  தனது தந்தையை  ஒரு ராக்ஷசன் கொன்றதால்  எல்லா  ராக்ஷசர்களையும்   யாகத்தீயில் விழுந்து மாள ஒரு யாகம், ஹோமாக்னி, வளர்க்கிறார்.  நிறைய  ராக்ஷசர்கள்  மந்திர சக்தியால்  கவரப்பட்டு  அவரது  ஹோமத்தீயில்  வந்து விழுந்து மாள்கிறார்கள். 
இதை அறிந்த வசிஷ்டரும் புலஸ்திய ரிஷியும்  ''பராசரா, போதும்  நிறுத்து,  உன்னால் மாண்டு போகும் ராக்ஷசர்கள் எந்தவிதத்திலும் உன் தந்தையின் மரணத்துக்கு  காரணம் இல்லை.  எனவே இவர்களை கொல்லும்  இந்த யாகம்  போதும் ''  என்று  அறிவுரை கூற பராசரரின்  யாகம் முடிகிறது. 
இன்னும்  நிறைய  உப கதைகளை  கந்தர்வன் அர்ஜுனனிடம் கூறியதும்  ''ஒ  கந்தர்வா, நீ எப்படி இவ்வளவு சரித்ரங்களை அறிந்திறிக்கிறாய் என்று ஆச்சர்யப்படுகிறேன்.  எனக்கு  ஒரு நல்ல  ரிஷியை  ஆசானாக  காட்டு''  என்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான்.
''அர்ஜுனா,   நீங்கள் செல்லும் இந்த காட்டில்  ஒரு ரிஷி இருக்கிறார்.  தௌம்யர்  என்று பெயர். அவரை  குருவாக  ஏற்றுக்கொள்ளுங்கள்.''
அர்ஜுனனும்  மற்ற பாண்டவர்களும்  கந்தர்வனிடம் விடை பெற்று  பாகீரதி நதியைக் கடந்து   தௌம்யரின்  உத்கோசக ஆஸ்ரமத்தை அடைகிறார்கள்.   அவர் அவர்களை மனமுவந்து உபசரித்து  அவரோடு ஆஸ்ரமத்தில் தங்கச் செய்கிறார்.  சிஷ்யர்களாக ஏற்கிறார். அவரின்  பிராமண சீடர்களாக  பாண்டவர்கள்  பாஞ்சால தேசம்  நோக்கி  செல்லும்போது வழியில் நிறைய பிராமணர்கள்  செல்வதை பார்த்து  யுதிஷ்டிரன் கேட்கிறான் 
''எங்கே  இவ்வளவு கூட்டமாக  பிராமணர்கள்  செல்கிறீர்கள். எங்கே  என்ன  விசேஷம்?
''சற்று தூரத்தில் பாஞ்சால தேசம் இருக்கிறதே,  அங்கு மன்னன் மகளுக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அநேக ராஜாக்கள் வருகிறார்கள். பிராமணர்களுக்கு நிறைய தான தர்மங்கள்  நடைபெறும்.பொன்னும் பொருளும்  கிடைக்குமே.   எனவே  நாங்கள் அங்கே செல்கிறோம்''.  
''பாஞ்சால தேசமே ஒரே  கோலாகலமாக  இருக்கிறதே''
''இருக்காதா  பின்னே?'   எல்லா  ராஜாக்களும்  வருகிறார்கள்.  அவர்களுக்கு வீர  விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறப்போகிறதே.  அவற்றில் வென்றவனை  துருபதன் மகள் பாஞ்சாலி   கணவனாக   ஸ்வயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.   உங்களைப்பார்த்தாலே  ராஜா மாதிரி இருக்கிறீர்கள்.  ஒருவளை நீங்களும் போட்டிகளில்  பங்கேற்று  வென்று உங்களில் ஒருவன்  அவளது  கணவனாகலாம். போல்  இருக்கிறதே  என்றார்கள் பிராமணர்கள்.'
''பிராமணர்களே  நீங்கள்  சொல்வதே  நாங்களும் போட்டிகளைக்  கண்டு மகிழ்ந்து வெற்றிபெறுவது போல்  சந்தோஷம் அளிக்கிறது.  நாங்களும் உங்களோடு வந்து அந்த கோலாகல வைபவம் காண்கிறோம்.''
பாண்டவர்கள்  துருபதன் அரண்மனையை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment