Thursday, June 9, 2016

குரு


யார் குரு ? ஏன் குரு பாரம்பர்யம் தேவை ?

இந்த இரண்டுக் கேள்விகளுக்கும் சரியான விடை தெரிந்தாலே ஓழிய, நாம் குருமார்க்கத்தை உணர்ந்துக்கொள்ள முடியாது.

நமக்கு தெரியாத ஒரு விசயத்தை யார் காட்டிக்கொடுக்கின்றாரோ தெளிவுப்படுத்துகின்றாரோ அவரை நாம் குரு என்றோ வழிக்காட்டி என்றோ அழைகின்றோம். இது ஒரு பாரம்பர்ய வழக்கமாகும்.பாமரர்களின் பார்வையிலும் , சித்தர்களின் , ஞானியர்களின் பார்வையிலும் இது வெகு வித்தியாசமாக வியாக்கியானபடுத்தப்படுகின்றது. முதலில் இதனை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதலிலே, “குரு” என்கின்ற வார்த்தைக்கு நமது சமயம் மற்றும் வேதம் இப்படி விளக்கம் கொடுக்கின்றது.

“குரு” என்றால் கனமுடையது,பெரியது,அளப்பரியது என்று பொருள்படுகின்றது….

மனித உடலிலே கனமானது எது ?

உடலா?மனமா?சுவாசமா?ஆத்மாவாகிய ஜீவனா?

உடலிலிருந்து , உயிர் பிரிந்தப் பிறகு , தேகம் கீழே விழுந்துக்கிடக்கிறது, காரணம் உடலை தாங்கி நின்ற, உயிராகிய ஜீவன் கழன்று விட்டது..கனமான ஒன்று கடந்து விட்டக்காரணத்தால் தோகம் வீழ்ந்து விட்டது. ஆக நமக்குள் கனமானது ஜீவனாகிய ஆத்மா ! இந்த ஆத்ம சொரூபத்தை கண்டவர் , ஆத்மசொரூபமாகி நிற்பவர் ,ஜீவ-பிரம்ம ஆத்மரகசியத்தை காட்டிகொடுக்க கூடியவர் குரு என்பவராகும்..இதனை சற்று விசேஷமாக “சத்” என்ற அடைமொழியை கொடுத்து “சத்குரு” என்பார்கள் , இன்னும் கூட இவரை ஞானகுரு என்றும் அழைப்பார்கள்.

சத் என்றால் உண்மை என்றுப்பொருள்படும் , எந்த உண்மை ? முற்றிலும் உண்மையாக நமக்குள் சர்வசாட்ஷியாகி நிற்கும் ஜீவனாகிய ஆத்மாவே அனைத்திலும் உண்மை பொருளாக விளங்குவது. இதனை உணர்ந்துக்கொண்டவன் எவனோ அவனே ஞானகுரு அல்லது சத்குரு.

மேலும் “கு” என்றால் இருட்டு “ரு” என்றால் ஒளி. எந்த இருள் எந்த ஒளி ?பிறவிகள் தோறும் நாம் மீண்டும் மீண்டும் வந்து மாட்டிக்கொள்ளும் தாயின் கருவறை முதல் இருட்டு பின் நமக்குள் நாமே சிக்கித் தவிக்கும் அறியாமையாகிய இருட்டு இரண்டாவது இருட்டு இறுதியாக உடலாகிய இருட்டுக் குகைக்குள்ளே பல ஜன்மமாக மாட்டித் தவிக்கும் உயிராகிய ஜீவன்…இவைகள் மூன்றையும் பேரிருளாக பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த இருளிலிருந்து எவன் வெளியே வருவதற்கு வழிவகுக்கின்றானோ அவன் உண்மையான சத்குரு அல்லது ஞானகுரு.

ஆலயத்திலிருப்பவரை நாம் எப்படி அழைகின்றோம், குருக்கள் என்று ஏன்? காரணம் அவர் அந்த ஸ்தூல இறைவனுடன் இருப்பவர் அவருக்கு கைங்கர்யம் செய்பவர் அதனால் நாம் அவரை குருக்கள் என்று அழைக்கின்றோம்…ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம் எத்தனை குருக்கள்மார்கள் அத்தகைய இறைத் தன்மையில் இருகின்றார்களா ?

அதே நிலைத்தான் இன்று சமூகத்திலும் பரவி கிடக்கின்றது, பலர் காவி, ருத்திராட்ஷம், தாடி, பிரசங்கம் என்று ஜமாய்கின்றார்கள் ஆனால் இவர்களின் இறைத்தன்மை ஆராயதக்கதே…..இவர்கள ஞானம் தெளிந்த குருமார்களா அல்லது படித்து வைத்ததை வாந்தி எடுப்பவர்களா?

நமது நிம்மதி இன்மைக்கு காரணம் ஆசை அல்லது பற்று {ATTACHEDMENT} பொருள் மீது உள்ளப் பற்று , பந்தங்களின் மேல் உள்ளப் பற்று , புகழ் பற்று , உடல் பற்று இன்னும் ஏராளம் ஏராளம்….இந்த பற்றுகளெல்லாம் இருக்கும் வரை நாம் ஞானத்தை உணரமுடியாது,அது நெருங்கவும் நெருங்காது…இந்த பற்றெல்லாம் நீங்க வேண்டுமென்றால் ஆசைகளையும் பற்றுக்களையும் கடந்த ஒருவனிடத்தில் சரணடைந்தால் மட்டுமே நமது பற்றுக்கள் அழியும்..

இதனை திருக்குறளிலே….

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு".

வள்ளுவப்பெருமான் உறுதியாக கூறுகின்றார்.

குருவென்பவன் ஆசைகளை கடந்தவனாக இருப்பான்….

“விழிப்படைந்த குரு எதனையும் யாரிடமும் யாசிக்க மாட்டான்….யாசிப்பவன் விழிப்படைந்த குருவாக இருக்கமாட்டான்….”

 ஆக குரு என்பவன் கருவருக்கும் வித்தையை உணர்ந்தவன்.

அடுத்து குரு பாரம்பர்யம் ஏன் அவசியம் ?

பொதுவாக நாம் எல்லோருமே நம்முடைய வாழ்வில் பாரம்பர்யம் அல்லது பரம்பரை என்கின்ற ஒரு மரபுவழி சங்கிலி தொடர்பினை பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றோம்.இதில் அவரவர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, நாகரீகம் , சிந்தனா முறைகள் மற்றும் மொழி எல்லாம் அடங்கிக்கிடக்கின்றது.

அதுபோல குருபாரம்பர்யம், வேத விதிப்படி குரு தட்சிணாமூர்த்தி எனப்படும் தென்முக கடவுளாகிய ஆதிகுருவினிடத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.சித்த மார்க்கத்தின் படி கைலாய வர்க்கமாகவும் பால வர்க்கமாகவும் காணப்படுகின்றது. கைலாய வர்க்கம் சிவபெருமானையும் நந்திதேவரையும் மூல குருவாக வைத்து திருமூலர் மரபாக போற்றப்படுகின்றது மற்றது முருகக் கடவுளை மூலகுருவாக ஏற்று அகத்தியபெருமான் மரபாக போற்றுவதாகும்..

இதனை தவிர்த்து ஸ்ரீவித்யா தந்திரம் மற்றும் பிரம்ம வித்யா தந்திர பாரம்பர்யம் , ஆதிசங்கர பெருமானை மூல குருவாக வைத்து தொடங்கும் மார்க்கமும் உண்டு.

வடக்கே நவநாத சித்தர்கள் நாதயோகிகள் பாரம்பர்யம் என்ற ஒன்றும் உண்டு. இதனை அடிப்படையாக வைத்துதான் நம் குரு பாரம்பர்யத்தை நிர்ணயிக்கின்றோம்.

ஆனால் இதில் ஒரு விதிவிலக்கு உண்டு, சில ஞானிகள் , சித்தர்கள் தாமே சுயம்பாக, பிறவியிலேயே குருவில்லாமல் ஞானம் வாய்க்கப்பெற்றவர்களாக இருப்பார்கள் மற்றும் சிலருக்கு இறைவனே குருவாக அமையும் பிராப்தமும் உண்டு.

இதில் ஒரு சூட்டுமம் உண்டு , ஒரு சரியான குருவினிடத்தில் தீட்ஷைப் பெறும் பொழுது அந்த குருநாதரின் நான்கு தலைமுறை குருவாக இருக்கும் சத்குரு,பரமகுரு ,பரமேஷ்டி குரு மற்றும் பராபரகுரு இவர்கள் அங்கு தீட்ஷை கொடுக்கும் தருணத்தில் எழுந்தருளி இருந்து, நம்மை வாழ்த்தி நமக்கு ஆத்ம விடுதலையை எளிதாக சித்திக்க அருள்செய்கின்றார்கள்.மேலும் உயிர் பிரியும் தருணத்தில் ஆத்ம தீட்ஷை கொடுத்த குருநாதரின் சூட்சும உடம்பு நம்மை அழைத்துச்செல்ல வரும்,நமது குரு பரம்பரை உண்மையானதாக இருந்தால்.

இன்று பல குருமார்களுக்கு குரு பரம்பரையே தெரியாது !

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்..பலர் இன்று நிறைய குருமார்களிடம் சென்று தீட்ஷை மற்றும் உபதேசம் பெற்று உய்வதற்கு பதிலாக சாபங்களை பெற்றுக்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார்கள்.இது இன்று ஒரு விளையாட்டாக மாறிவருகின்றது. குரு சாபம் பல தலைமுறையாக தொடரும்.

உங்களின் சாதகத்தில் குருவே சுக்கிரனோ ,லக்கனத்திற்கு ஒன்பதாமிடமோ, இராசியிலோ அல்லது அம்சத்திலோ கெட்டுக்கிடந்தால் இது பெரியோர்களின் சாபத்தை பெற்ற சாதகமாகும்.

உண்மையான குரு உடனடியாக எதுவும் செய்யமாட்டார் நம் விருப்பப்படியும் கொடுக்க மாட்டார் இறை ஆனைப்படியே செய்வார்.அதுவும் திருமந்திர சாஸ்திரத்தில், விஷேஷமான இரு ஒளி நாட்களை கூறுகின்றார் ,ஒன்று தைபூசம் மற்றொன்று வைகாசி விசாகம், இந்த இரு நாட்களும் தீட்ஷைக்கு ஏற்ற சிறப்பான நாட்களாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

கண்ட கண்ட நாட்களில் தீட்ஷை கொடுப்பது, குண்டலினி ஆற்றலை எழுப்புவது , நெற்றிக்கண்ணை திறப்பது போன்ற வேலைகள் இன்று மலிந்துவிட்டன .இதன் காரணமாகவே உண்மையான அந்த ஆத்ம சாட்ஷாகாரத்தை உணரமுடியாமல் பலர் இன்று, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக்கொண்டிருக்கின்றாரகள்.

ஒரு சரியான குருவினிடத்தில் தீட்ஷைப்பெருவது ஒரு மனிதனுக்கு மறுப்பிறவியாகும்,இவனை துவிஜன் என்று அழைப்பார்கள், “துவி” என்றால் இரண்டு ‘ஜன்” என்றால் ஜன்மம் இரணடு ஜன்மம் உடையவன்.அவனின் கர்மங்களை எல்லாம் தான் வாங்கிக்கொண்டு அவனை சுத்தம் செய்பவனாக குரு இருப்பார், அப்படி இருக்கும் பட்ஷத்தில் சீடனுக்கு எப்படி கர்மவினைகள தொடரும் ?சரியான குரு நெருப்புக்கு ஈடானவர், அவர் பார்வை பட்டால் எல்லாம் அழிந்துப்போகும்,அப்படி இருக்கும்பொழுது பலர் பல குருமார்களிடம் எதை எதையோ தீட்ஷையாக வாங்கியும் அல்லல் படுகின்றார்களே ஏன்?

பலர் இன்று தன்னை , தான் இவரின் சீடர் அல்லது இவர் எனக்கு குரு என்று பகிரங்கமாக பிரக்கடனம் செய்கிறார்கள்..குரு சிஷ்ய பரம்பரையில் தன் குருவின் பெயரை பகிரங்கமாக வெளியில் சொல்லுவது தோஷம் என்ற விதியே உண்டு!

நாம் ஒரு சித்தரையோ ஞானியையோ குருவாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் தப்பில்லை ஆனால் அவர் நம்மை தேடி வருகின்றாரா என்பதுதான் கேள்வி…

பெண் ஒருத்தி உண்மையாகவும் மானசீகமாகவும் ஒரு ஆடவனைநினைத்து ஏங்குகின்றாள் என்றால் அது உண்மையான தாபமாகும்….ஆனால் பலரை நினைகின்றாள் என்றால்…….!!!!

மானசீகமாக ஒரு ஞானியையோ சித்தரையோ விசுவாசத்துடன் குருவாக ஏற்று பின் அவரிடம் தன்னை முழுமையாக சரணடையச்செய்யாமல் அலைந்துகொண்டிருந்தால், பலரை நினைக்கும் பரத்தையருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்….

20 ஆண்டுகளுக்கு முன் என் குருநாதர் அடியேனுக்கு கொடுத்த செருப்படியாகும் இது…
குரு என்ற வார்த்தையும் குருவழிப்பாடும் இன்று கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக மாறிவிட்டது....

ஆக உண்மை குருவை அடைந்து பிறவி பிணியை கடப்போம்.

+++++++++++++++++++++++++++++++++++++
"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள்.
இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.
மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர்.
ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.
இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.
மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது.
சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.
அந்தவகையில் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.
பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.
திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே
கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு
பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார்.
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார்.

No comments:

Post a Comment