Monday, June 29, 2015

மகான்கள்

மகான்களை அறிவோம் 01 : கண்ணப்ப சுவாமிகள்
*********************************************************************
சித்தர்கள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; வருவதுமில்லை; போவதுமில்லை என்று திருமூலர் கூறியதுபோல் கண்ணப்பசாவாமிகள் எங்கே பிறந்தார்? அவர் யார்? எப்படிச் சென்னைக்கு வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. பல அவதார புருஷர்கள் ஜீவ சமாதி கொண்ட புண்ணிய பூமியான திருவொற்றியூர்க் கடற்கரையில் உடலில் எந்தவித ஆடையுமின்றிச் சடை முடியும், நீண்ட தாடியுமாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர். அவர் ஒரு சித்தர் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.
அவரைச் சித்தம் கலங்கியவர் என மக்கள் துரத்தியதால் அலைந்து திரிந்து இறுதியில் புழலில் உள்ள காவங்கரைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார். அவரது முடியை மழிப்பதற்கு வந்தவர் அருவருப்பு அடைந்தார். ஆனால் சாமிகளின் தலையில் இருந்து நறுமணம் வீசியது. அதைக் கண்டு வியப்படைந்த மக்கள் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொண்டனர்.
அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரைச் சட்டிச் சாமி என்று மக்கள் அழைத்தனர். அவருக்கு உடை வழங்கிய சித்ராம்பாளும் அவருடைய கணவரும் ‘கண்ணா’ என்று அன்புடன் அழைத்ததால் கண்ணப்பசாமி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே
என்ற திருமூலரின் கூற்றுப்படி பக்தர்களுக்குச் செய்யும் உதவி இறைவனைச் சென்றடைய உதவும் என்று கண்ணப்பசாமி நம்பினார். தன் கையிலிருக்கும் சட்டியை அட்சய பாத்திரமாக மாற்றினார். உணவை எடுக்க எடுக்க அது பெருகிய அதிசயத்தை, இன்றும் பலர் வழி வழியாகப் பேசி வருகின்றனர்.
கண்ணப்பசாமிகள் தமது பக்தர்களின் குறைகளை, அவர் சொல்லாமலேயே தீர்த்து வைத்துள்ளார். அவரது தீவிர பக்தரான பொற்கொல்லர் ஒருவர் தமது வாடிக்கையாளர் நகை செய்வதற்குக் கொடுத்த பணத்தைக் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்திவிட்டதாகக் குற்ற உணர்வுடன் வந்து அவரிடம் முறையிட்டார். சாமிகள் தனது பக்தனின் கையில் மூன்று கூழாங்கற்களைக் கொடுத்தார். அவை தங்கக் கட்டிகளாக மாறி ஜொலித்தன.
நவகண்ட சித்தர்
***********************
வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணையா பாகவதர் என்பவர் நள்ளிரவு 12 மணிக்குச் சாமிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சாமிகளின் அவயங்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடந்ததைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டார். இப்படி அவயங்களைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டு யோகம் செய்வதை ‘சொரூப சித்து’ என்றும் ‘நவ கண்ட சித்து’ என்றும் போகர் குறிப்பிடுகிறார்.
இப்படிப் பல அற்புதங்களைப் புரிந்த கண்ணப்பசாமிகள் தாம் சமாதி அடையப்போகும் தருணத்தை முன்பே அறிந்தார். தமக்கான சமாதிக் குழியைத் தோண்டப் பணித்தார். தாம் சமாதி அடைந்து 41 நாள்களுக்குப் பிறகுதான் தன்னைப் புதைக்க வேண்டும் என அவரது பக்தர்களிடம் கூறினார். 1961-ம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் இறங்கிச் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார்.
சமாதிக் குழியைப் பலகையால் மூடி 41 நாளும் விளக்கேற்றி வழிபட்டனர் பக்தர்கள். பின்னர் பலகையை அகற்றிவிட்டுச் சமாதியை மூடினர். சாமிகள் சொன்னதுபோல சமாதியின் மீது விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். பின்னால் காஞ்சிப் பெரியவரின் ஆலோசனையின் பேரில் கண்ணப்பசாமிகளின் கற்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது சிலை சமாதியின் முன்புறம் வைக்கப்பட்டு சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புழல் செல்லும் சாலையிலிருந்து காவாங்கரையினுள் நுழைந்து சிறிது தூரம் சென்று வலது புறம் சென்றால் கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதியை அடையலாம். அங்கே சிவமாக வீற்றிருக்கும் சித்தரை உணர்ந்து கொண்டால் அவர் நம்முடன் பேசுவார்; துன்பங்களுக்குத் தீர்வு கூறுவார்.


---------------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 02 : கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
***************************************************************************************
அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .
திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.
அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .
துண்டைக் கயிறாக்கியவர்
*************************************
தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.
அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.
இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .
சொன்ன நாளில் சமாதி
********************************
ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .
சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .
அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.
“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”
“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”
என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்.

-------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 03 : அன்னை நீலம்மையார் !
*************************************************************************
சக்தியின் திருவுருவே பேரின்பம்
*********************************************
“அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே”. - நீலம்மையார்
மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் அன்னை பராசக்தியின் திருவுருவே பேரின்பம் என்பர். ஞானத்தின் திருவுருவும் அவளே, ஞானத்தை அளிப்பவளும் அவளே என்பர் . ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஜந்தொழில்களும் அவளது விருப்பப்படியே நடக்கின்றன .
முழுமுதற் கடவுளாகிய சிவனும் அவளன்றி எதுவும் நடக்காது என அறிந்திருக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார். ஆகவே, சக்தியும் சிவனும் ஒன்றே என்று அறிந்தவர்களே ஞானிகளாக இருக்கின்றனர் . அந்தச் சக்தியின் வழிவந்த பெண்களும் சிவத்தை அறிந்து சித்தராக முடியும் என்று நிரூபித்தவர் அன்னை நீலம்மையார் .
குமாரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்துள்ள போத்தியூரில் வள்ளிநாயகம் பிள்ளை, மாலையம்மாள் தம்பதியருக்குப் பிரமாதி ஆண்டு சித்திரை மாதம், 19-ம் நாள் புதன்கிழமை, ஆயில்ய நட்சத்திரத்தில் (30.04.1879),இரண்டாவது மகளாக அன்னை நீலம்மையார் அவதரித்தார் . சிறுவயது முதல் ஆன்மிக நாட்டம் கொண்ட அவர் ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வந்தார்.
அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, அவரது பெற்றோர் அவரை ராமசாமி பிள்ளை என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர் . அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன.
சாந்த சொரூபி
*********************
இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த போதும் அன்னையார் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார் . அன்பு, கருணை, சாந்தம், பொறுமை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கிய அவர் மிகக் குறைவாகவே பேசுவாராம், பேசும் போது தனது புடவையின் நுனியை வாயில் வைத்து மறைத்துக் கொண்டு மிகவும் தாழ்ந்த குரலில் பேசுவாராம் .
மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தபின், மகனுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்த போது, மகன் தனக்குத் திருமணம் வேண்டாம், துறவறம் மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினாராம் . அவர் தன் அன்னையையு அழைத்துக்கொண்டு கேரளாவிலுள்ள வடகரை என்னும் ஊரில் சித்த சமாஜத்தை நிறுவியிருந்த ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் அவர்களின் ஆசிரமத்திற்குச் சென்று தமது விருப்பத்தைக் கூறினார்.
மகனுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று கூறிய ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவர்கள் அன்னையைப் பார்த்து, உன்னைத்தான் இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று கூறினார். அதைக் கேட்ட அன்னையார் தாம் இவ்வுலகில் பிறந்ததன் நோக்கத்தை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் . அந்த நிமிடமே தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெள்ளை ஆடை அணிந்து துறவறம் பூண்டார் . ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவருக்குத் தீட்சையளித்து உபதேசமும் செய்து வைத்தார் .
தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள்
***************************************************
மகனைத் துறவியாக்கச் சென்ற அன்னையார் தாமே துறவியாகித் திரும்பியதைக் கண்ட அவரது கணவர், இது இறைவனின் திருவருள் என்று ஏற்றுக்கொண்டு அன்னையாரை வாழ்த்தினார் . அன்னையார் தமது இல்லத்தில் ஒரு தனியறையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் ஏதோ ஒன்று அவரது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அவர் பூசித்த ராஜராஜேஸ்வரி அம்மன் அதற்கும் வழிகாட்டினார்.
அம்மனின் உத்தரவின் பேரில் அன்னையார் 1957-ல் வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் சக்கரவர்த்தியால் கட்டப்பெற்ற அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலைத் தாரிசத்தார். பல மகான்களால் பாடப்பெற்ற அந்தத் திருத்தலத்திற்கு அருகிலேயே தங்கியிருக்க விரும்பினார் . கிழக்கு மாடவீதியில் அன்பர் ஒருவர் இடம் கொடுத்தார் . அன்னையின் பக்தர்கள் அங்கு குடிசை ஒன்றை அமைத்துக் கொடுத்தனர் . அன்னையார் சில காலம் அங்கு தங்கியிருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்துவைத்தார்.
காற்று மட்டுமே ஆகாரம்
***********************************
பின்னர், அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த வடக்கு மாசி வீதியில், ஈசானிய மூலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டார் . அங்கே ஒரு அறையையும், தியானம் செய்ய ஒரு குழியையும் ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் குழி நான்கு அடி நீளமும், நான்கு அடி அகலமும், ஐந்து அடி ஆழமும், உள்ளே இறங்கிச் செல்ல மண்ணால் ஆன படிகளும் கொண்டது . அன்னையார் அதில் இறங்கித் தியானம் செய்வதற்கு முன் தமது ஆடைகளைக் களைந்து மேட்டின் மீது வைத்துவிட்டு, ஆடையின்றி உள்ளே அமர்ந்து தியானம் செய்வார் . குழியின் மேட்டில் ஆடைகள் இருந்தால், அன்னையார் தியானம் செய்கின்றார் என்று எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். அன்னையார் குழிக்குள் இறங்கித் தியானம் செய்யத் துவங்கிவிட்டால் மாதக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அப்போது அவருக்குக் காற்று மட்டுமே ஆகாரம்.
பல்வேறு சித்துக்களையும் பெற்றிருந்த அன்னையார் சில சமயங்களில் தமது அவயவங்களைத் தனித்தனியே பிரித்துவிட்டு நவகண்ட யோகத்தில் ஆழ்ந்துவிடுவாராம் .
அன்னையார் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உபதேசம் செய்வதுண்டு . “உன் மனம் உனக்கு அடங்கினால், உலகம் உனக்கு அடங்கும்” என்பது அவர் அடிக்கடி கூறும் உபதேசங்களில் ஒன்றாகும் .
இந்தப் பூவுலகில் தம்முடைய பிறவிக் காலம் முடிவுற்றதை உணர்ந்த அன்னையார், தாம் இறைவனுடன் ஐக்கியமாகும் நாளை முன்னதாகவே அறிவித்துவிட்டார் . அந்த நாளில் தம்மைத் தியானக் குழிக்குள் இறக்கி மூடிவிடும்படி பக்தர்களிடம் தெரிவித்தார் .
அதன்படி, சாதாரண வருடம் கார்த்திகை மாதம் 23-ம் தேதி(13.12.1970) பௌர்ணமிக்கு அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.45 மணிக்கு, கிருஷ்ணபட்சம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்து பரிபூரணம் அடைந்தார் .
சென்னை, வடதிருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த, வடக்கு மாசி வீதியில் அன்னையாரின் ஜீவசமாதி ஆசிரமம் அமைந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 04 : மாசிலாமணி சுவாமிகள் !
**************************************************************************
மனதை வெட்ட வெளியாக்கு
****************************************
“ வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே .”
வானும், நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும் தம்முன் ஒடுங்கியிருக்கின்றன என்று உணர்பவரே சிவசித்தர் என்று திருமூலர் கூறுகிறார்.
சித்தர் என்றாலும் சிவம் என்றாலும் ஒன்றுதான் . ‘பரவெளி’ என்று சொல்லக்கூடிய அண்டவெளியே சிவம் ஆகும் . அதனால்தான் மனதை வெட்ட வெளியாக்கு என்று அனைத்துச் சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.
சித்தர்களில் சிலர் பிறக்கும்போதே ஞானப் பிறப்பாகப் பிறக்கின்றனர் . சிலர் பிறக்கும்போதே, பிற்காலத்தில் சித்தராக வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும், அதனை அறிந்து கொள்ளாமல் சாதாரண மனிதர்களைப் போல் வாழ்ந்து, பின்னர் எவருடைய தூண்டுதலின் பேரிலாவது ஞானம் பெறுவர்.
அப்படி ஞானம் பெறுபவர்கள் தமது ஆன்மிகப் பயணத்தைப் பஞ்சாட்சரத்துடன்தான் தொடக்குவார்கள்.
“ சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை.”
என்பதுதான் அவர்களின் எண்ணங்கள் முழுவதிலும் இருக்கும் . ஆனால் ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் எண்ணம் முழுவதும் ஆஞ்சநேயரின் மீது இருந்தது என்பதும் ஆஞ்சநேயரின் அருளால் ஞானம் பெற்றார் என்பதும், ஒரு காலகட்டத்தில் இவரே ஒரு வானரமாக மாறிவிட்டார் என்பதும் வியப்பிற்குரிய செய்திகளாகும் .
ராணுவத்தில் இருந்து ஓய்வு
***************************************
சென்னை, திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் பாலபருவத்துச் செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
ராணுவத்தில் பணிபுரியும்போதே, இவர் ஆஞ்சநேயரை வழிபட்டுவந்தார். ஒருமுறை இவர், ராணுவ வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மிக விரைவாகவும், அபாயமான முறையிலும் வண்டியை ஓட்டிச் செல்வதைக் கண்டு, ஓட்டுநரை எச்சரித்தார் . ஓட்டுநர் அதனைச் சட்டை செய்யாமல், மேலும் விரைவாக வண்டியை ஓட்டினார் .
சுவாமிகள் வண்டியை நிறுத்துமாறு கூறி, வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டார் . அந்த ஓட்டுநர், சுவாமிகளை விட்டுவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றார் . என்ன செய்தும் வண்டியைக் கிளப்ப முடியவில்லை . சுவாமிகள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் வண்டி கிளம்பியது . அப்போதுதான் சுவாமிகளிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர் .
சுவாமிகள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின் சோழம்பேடு கிராமத்தில் உள்ள பொங்குலக் கரையில் (குளத்தின் கரையில்) ஆஞ்சநேயரின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் . ஆஞ்சநேயர் எவ்வாறு தம் தலைவரான ஸ்ரீ ராமரின் நாமத்தை எப்போதும் ‘ராம் ராம்’ என்று உச்சரித்துக்கொண்டிருந்தாரோ, அது போன்றே சுவாமிகளும் ‘ராம் ராம்’ என்று மூச்சுக்கொரு முறை கூறிவந்தார் .
1982-ம் ஆண்டில் தாம் வழிபட்டு வந்த ஆஞ்சநேயருக்கு ஒரு சிறு மண்டபத்தை எழுப்பி, கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் செய்தார் . சுவாமிகள் அடிக்கடி தாம் நிறுவிய ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ராம் ராம்’ என்று கூறிக் கண்ணீர் விடுவாராம் . அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உபதேசமும் செய்வார். “காடு நாடாகிறது நாடு காடாகிறது - மனிதர்களின் மன நிலை விலங்குகளைப் போல் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவாராம் .
ஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிக்கடி பஜனைகள் நடக்கும்போதும், பக்தியின் வெளிப்பாடு அதிகமாகும்போதும் வானரம் போன்று சப்தமிட்டுக்கொண்டு அங்கும் இங்கும் தாவுவாராம். கீழே விழுந்து புரள்வதும் பல்ட்டி அடிப்பதும், பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் வாழைப்பழங்களைக் கடித்துவிட்டு மீண்டும் பக்தர்களின் மீது எறிவதுமாக இருப்பாராம்.
காக்கை குருவிகளுக்கு சோறு
*****************************************
சுவாமிகள் யாசகம் செய்து அரிசி, காய்கறிகளை வாங்கி வந்து அனைத்தையும் ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்க்காமல் தாமே சமையல் செய்வார் . அது பாதி வேகும்போதே, சூட்டுடன் எடுத்து இரண்டு வாய் உண்பார். இதுதான் அவருக்கு அன்றைய உணவு. சோறு வெந்தபின், வந்திருக்கும் பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டுக் காக்கை, குருவிகளுக்கும் ஆகாரமிடுவார் .
சுவாமிகளின் மகிமையைப் பற்றி அறிந்த மக்கள், ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெறவேண்டுமென்று, சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர் . அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
சுவாமிகள் அடிக்கடி பருத்திப்பட்டில் உள்ள தமது உறவினர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்று வருவார் . 1995 - ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ம் தேதி, யுவ ஆண்டு, கார்த்திகை மாதம், 18-ம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசி திதி, பரணி நட்சத்திரத்தின்று காலை 9.10 மணிக்கு அங்கிருந்தவர்களிடம் “ராம் ராம் இவனுக்கு நேரம் வந்துவிட்டது” என்று கூறிவிட்டுப் படுத்தார் . அடுத்த கணம் சமாதியடைந்தார்.
ஆஞ்சநேயருக்கு அருகே சமாதி
*******************************************
பருத்திப்பட்டிலிருந்து சுவாமிகளின் பூதவுடலை ஊர்வலமாக சோழம்பேட்டிற்குக் கொண்டு வந்தனர். இதனை அறிந்த அவரது பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவரை எதிர்பார்த்துப் பஜனைகள் செய்து கொண்டிருந்தனர் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு அருகில் சமாதி தோண்டப்பட்டுத் தயாராக இருந்தது.
சுவாமிகள் படுத்த நிலையில் சமாதியடைந்ததால், அவரை எப்படிச் சமாதிக்குள் உட்கார வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது . சுவாமிகளின் சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளிடம் கால்களை மடக்கிக்கொள்ளுங்கள் என்று கூறியதும் சுவாமிகள் பத்மாசனமிடுவது போல் கால்களை மடக்கிக் கொண்டாராம்.
பின்னர் 108 குடங்களில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து அவரைச் சமாதியினுள் அமர வைத்தனர் . அவரைச் சுற்றி வில்வம், துளசி, விபூதி, ஆகியவற்றை நிரப்பி சமாதியை மூடினர்.
பல அதிசயங்களை நிகழ்த்திய சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை . அவரது சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளின் சமாதிப் பீடத்தின் மீது சுவாமிகளின் திருஉருவச் சிலையை ஸ்தாபிதம் செய்துள்ளார் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு எதிரே ஸ்ரீ ராமருக்கு ஒரு ஆலயம் எழுப்பியுள்ளார் . அங்கு ஸ்ரீ ராமர் சீதா தேவியுடன், தம்பி லட்சுமணன் சமேதராக எழுந்தருளியுள்ளார் .
அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சோழம்பேடு மெயின் ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்த பின், குளக்கரைக்குச் செல்லும் பாதையில் சென்றால் ஆஞ்சநேயர் ஆலயத்தை அடையலாம்.

----------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 05 : கட்டிக்குளம் சூட்டுக்கோல்
ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்
************************************
நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே " - திருமூலர்.
அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .
சிறுவனைச் சுற்றிய நாகம்
*************************************
மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .
குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.
சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.
குரு செல்லப்ப சுவாமிகள்
************************************
மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .
ஆசிர்வாதமும் வழிநடத்தலும்
*******************************************
ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .
ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .
ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .
அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .
சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .
சட்டையைக் கழற்றிவிடலாமா?
*********************************************
நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
திருக்கூடல் மலை(திருப்பரங்குன்றம்,மதுரை) என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .


1 comment: