Thursday, May 5, 2016

பலன் தரும் ஸ்லோகங்கள்

பலன் தரும் ஸ்லோகங்கள்
திதி நித்யா தேவியர் யார்? அவர்கள் பராக்ரமம் என்ன?
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப் 
பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இக பர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ‘தந்த்ர ராஜ தந்த்ரம்’ என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் சக்தி மயம். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே 
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.


2. பகமாலினி
இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள். 

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.

வழிபடு பலன்கள்:
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.


3. நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:
குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். 

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே 
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி
அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே 
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:
நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி
இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்: அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.
7. சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே 
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா
இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். 

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்:
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9. குலஸுந்தரி
குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே 
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி. 

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே 
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்:
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.


11. நீலபதாகா
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். 

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.


13. ஸர்வமங்களா
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. 

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே 
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.


14. ஜ்வாலா மாலினி
இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே 
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். 

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.

ஸ்ரீ வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்.


ஓம் உக்ர ரூபாயை வித்மஹே 
தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி 
தந்நோ வாராஹீ ப்ரசோதயாத்.


SRI VAARAAHI AMMAN GAYATRI MANTHRA.


OM UGRA ROOPAAYAI VIDHMAHE
THAMSHTRAAKARAANYAI DHEEMAHI
THANNO VAARAAHEE PRACHODAYATH.

Slokas and its benefits - பலன் தரும் ஸ்லோகங்கள்-varahi-villupuram-gayatri-b.jpg  

கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்


இந்திராகணி யமாக்ஷஸி ஜலபதிர் வாயுர்தனே
சசிவஹைஹி
தைஸ்திரைராயுத பூஷணைஸ்சவிஹீதா த்ரை
லோக்ய ரஹாகராஹ
ஆதித்யாதி நவகிரகஸ் சாமுதித் ஜென்மக்ஷ
யோகோமம
சூர்ய க்ரஹ சோமக்ரஹ சமஸ்த தோஷ ரஹிதம்
குர்வம்து ரக்ஷந்துமாம்.

பொதுப் பொருள்: சந்திர கிரகணத்தால் எனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அஷ்டதிக் பாலகர்களும் சூரியன் முதலான நவகிரக நாயகர்களாலும் விலகட்டும்; அவர்கள் எல்லாம் எனக்கு யோகத்தை அளிக்கட்டும். அவர்கள் என்னை நோயிலிருந்தும் வறுமையிலிருந்தும் காக்கட்டும். 

No comments:

Post a Comment