முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
ஆதாரம்: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.
சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
அற்புதம் 1: காசியில் கங்கை நதியில் வீணை கிடைத்தது.
அற்புதம் 2: திருத்தணி முருகப்பெருமான் சன்னிதியில் அவன் அருளால் முதல் பாட்டைப் பாடி 440 கீர்த்தனைகளை இயற்றினார். (அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஒரு வயதான ஆள் அவர் வாயில் கற்கண்டைப் போட்டதாகவும் உடனே பாடல்கள் பொங்கி எழுந்ததாகவும் கூறுவர்). முதல் பாட்டு ‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ’ என்று அமைந்தது. அது முதற்கொண்டு எல்லா பாடல்களிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையை வைத்துப் பாடினார்.
அற்புதம் 3: எட்டயபுரத்தில் வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.
அற்புதம் 4: தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார்.
அற்புதம் 5: சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்!
இனி அரிய தகவல்கள்
அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.
தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர். ஷியாமா சாஸ்திரிகளைச் சந்தித்தது உறுதி, ஒருவேளை தியாகராஜரையும் சந்தித்திருக்கலாம்.
தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.
தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.
தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.
தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.
தகவல் 8: இது வேறு ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்: தீட்சிதர் , காஞ்சிபுரத்தில் உபநிஷத் பிரம்மம் என்ற சாதுவுடன் 4 ஆண்டுக் காலம் வசித்தார். அவர் இயற்றிய ராம அஷ்டபதிக்கு இசை அமைத்தார்.
தகவல் 9: இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர்.
மேலும் விவரம் வேண்டுவோர், என்.பார்த்தசாரதியின் “ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும்” என்ற நூலையும் டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.
தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை
இரண்டு தினங்களுக்கு முன் “மழை வர பிரார்த்தனை” என்ற தலைப்பில் மழையைப் பெய்யச் செய்யும் தமிழ் பதிகங்களைப் பிரசுரித்தேன். முத்துசுவாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடி மழை கொட்டச் செய்ததையும் மேலே படித்தீர்கள். இதே போல தாயுமானவரும் செய்திருக்கிறார்.
தாயுமானவர் ராமேஸ்வரம் சென்றபோது மழையே இல்லை, ஒரே வரட்சி. காய்ந்து கருகிப்போன பூமியில் வசிக்கும் மக்களின் அவல நிலையைக் கண்டு மனம் உருகினார். உடனே இப்படிப் பாடினார்:
சைவ சமயம் சமயம் எனில் அச் சமயத்
தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில்—ஐவரை வென்
றானந்த இன்பில் அழுந்துவது முத்தி எனில்
வானக்காண் பெய்மின் மழை.
இந்த வெண்பாவைப் பாடிய உடனே பெரு மழை கொட்டித் தீர்த்தது. மக்கள் எல்லோரும் தாயுமானவரின் பெருமையை உணர்ந்தனர்.
No comments:
Post a Comment