Saturday, February 20, 2016

தாயே இதை ஏற்றுக்கொள்

தாயே இதை ஏற்றுக்கொள்.
அவர் நிறைய பணம் சம்பாதித்தவர் தான். கடல் கடந்து கப்பல் வியாபாரம். மனதை பணம் நிரப்பவில்லை. அடிவாரத்தில் ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது. குடும்ப பாசம் நெஞ்சை விட்டு அகல ஆரம்பித்தது. ஏதோ ஒரு தேடல் அந்த இடத்தை ஆக்ரமித்தது. தேசாந்திரியாக ஒவ்வொரு இடமாக கால்கள் இழுத்துச் சென்ற இடமெல்லாம் நடந்தார். இந்த நேரத்தில் அவர் தாய் இறந்தாள் என்ற செய்தி காதில் விழுந்தது. கால்கள் அவரை தானாகவே பழைய வாழ்ந்த இடத்துக்கு கொண்டு சென்றது.
தாயின் உடல் அவரை வரவேற்றது. மௌனமாக அந்த முகம் ''அப்பனே இப்போவாவது வந்தாயா. எனக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்வாயா?'' என்று கேட்பது போல் அவர் மனதில் பட்டது. ஒரு இயந்திரம் போல் அவர் செயல் பட்டார். தாயின் உடலுக்கு தீயிட்டார். தாயின் உடல் மட்டுமல்ல அவர் மனமும் வெந்தது. அவள் விட்டுப்போன பாசம் பழைய நினைவுகளாக உருவெடுத்து அவர் மனதை பிழிந்தது மட்டும் அல்லாமல் வார்த்தைகளாக உருவெடுத்து அவரைப் பேச, இல்லை இல்லை, பாட வைத்தது. எளிய தமிழில் புரியும் படியாக பாடிய வெண்பா. பிற்காலத்தில் அது எழுத்தில் அச்சானது. அடடா இது போல் இன்னொருவர் சொல்ல முடியுமா என்று நம்மை இன்றும் வியக்க வைக்கிறது..
''பத்து மாதம் படாத பாடு பட்டு உடல் வலிக்க என்னை வயிற்றில் சுமந்தாய். அடே பயலே என்று செல்லமாக கூப்பிடுவாய். முடிந்த போதெல்லாம் உன் இரு கையே எனக்கு இருக்கை யானது. பசித்ததா எனக்கு என்று எனக்கே தெரியாது. ஆனால் உனக்கு தெரியுமே! அன்போடு மார்பகத்தில் அனைத்து பால் கொடுத்து வளர்த்தாயே. இனி நான் உன்னை என்று எங்கே எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன்?''
'' ஐயிரண்டு திங்களா யங்க மெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனக முலை தந்தாளை
யெப் பிறப்பிற் காண்பேனினி.1
நான் உன் மகனாக பிறக்கவேண்டும் என்று கனவினிலும் வேண்டியதில்லை. ஆனால் நீ நான் ஒரு மகனாக உனக்கு பிறக்கவேண்டும் என்று எத்தனை வருஷம் தவம் இருந்தாயோ. கேள்விப் பட்டிருக்கிறேன். நீ நிறைய கோவில்களுக்கு சென்று, எங்கெங்கோ சுற்றி, விரதமிருந்து யார் சொன்னபடி எல்லாமோ உன் உடலை வருத்திகொண்டு சிவனை வேண்டி, நான் பிறந்தேன். ஒன்றா இரண்டா முன்னூறு நாள் போல் என்னை இரவு பகலாக கண் விழித்து ஜாக்ரதையாக காத்து அல்லோ என்னை பெற்றாய். அதற்கெல்லாம் பிரதி உபகாரம் நான் என்ன செய்கிறேன் பார். நிறைய தீயை மூட்டி உனது உடலை எரிக்கிறேன். எப்படிப்பட்ட பிரதிஉபகாரம் !!
முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாட் சுமந்தே
யந்தி பகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரிய த்தழன் மூட்டுவேன்.2
என்னைத் தாலாட்டினாய், சீராட்டினாய், ஊஞ்சலில் வைத்து பாராட்டினாய், பாடினாய். உன் மார்பில் மேலும் தோள்மேலும் நான் எத்தனையோ காலம் சுகமாக தூங்கியிருக்கிறேன். எனக்கென்று தந்தத்திலும் தங்கத்திலும் தொட்டில் வேறு வைத்திருந்தாய். . உலகிலேயே நீ அதிக பாசம் அன்பு, காதல் வைத்த ஒரே ஜீவன் நான் ஒருவனே. . தாய்ப் பறவை சிறகுக்குள் தனது குஞ்சுகளை அணைத்து காப்பது போல் என்னை உன்னருகிலேயே வைத்து அணைத்து காப்பாற்றி வளர்த்தாய். அந்த உடலுக்கு நான் இப்போது கைம்மாறு செய்கிறேனே. இங்கே தான் நிறைய காய்ந்த விறகுகள் கொண்டு வந்திருக்கிறேனே. அவற்றின் மீது உன் தலையை வைத்து எரிக்கிறேன். தக தக வென்று தீ என் நெஞ்சைப் போல் உன் உடலும் எரியட்டும்.
வட்டிலிலுந் தொட்டிலிலு மார் மேலுந் தோண் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகி லிட்டுத் தீ மூட்டுவேன்.3
எனக்கு என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை தாயே. சொன்னதையே திருப்பி திருப்பிச சொல்கிறேன். எது நினைத்தாலும் அது உன் நினைவாகவே அல்லவோ மாறி விடுகிறது. எத்தனை நோன்புகள், எத்தனை எதிர்பார்ப்புகள், என்னை பத்துமாத காலம் வயிறு முன் தள்ளி வர, நான் உள்ளே உன்னை விண் விண் என்று உதைக்க, பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கி, பெற்று வளர்த்து பாலூட்டி வளர்ந்த உன் மெய்க்கு -- உண்மையாகவே -- மெய் என்றால் உடம்பு தானே --அதை தீயிலே இட்டு எரிக்கிறேன்.
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன்.4
பாவம் என் அன்புத் தாயே. எனக்கு நேரம் பார்த்து பசி வரும் முன்பே நீ உணவளித்து வளர்த்தாயே. இப்போது உனக்கு பசிக்குமே இந்தா கொஞ்சம் அரிசியாவது உன் வாயில் இடுகிறேன். ஆத்தா, எனக்கு எத்தனை எத்தனையோ சிங்காரம் பண்ணி, அழகு செய்து, முன்னும் பின்னும் என்னை பார்த்து மகிழ்ந்த தாயே, என்னை பேர் சொல்லியா கூப்பிட்டாய். தேனே, மானே, கற்கண்டே, செல்வமே, அம்ரிதமே, என்று தானே எப்போதும் வாய் நிறைய அழைப்பாய். அந்த வாய்க்கு நிறைய அரிசி போடட்டுமா?
அரிசியோ நானி டுவே னாத்தா தனக்கு
வரிசை யிட்டுப் பார்த்து மகிழாம - லுருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியமே
மானே யென அழைத்த வாய்க்கு.5
எல்லாமே முடிந்து விட்டது. என் மகனே என் செல்வமே முத்தே என்று என் முகத்தோடு உன் முகத்தை ஒட்டி, வாய் ஓயாமல் சொல்லிய உன் வாய்க்கு கடைசி கடைசியாக வாய்க்கு கை நிறைய அள்ளி அரிசி போட்டு விட்டேன். உச்சி முகந்த உன் முகத்துக்கும் உடலுக்கும் கொள்ளி போட்டு விட்டேன். இது தான் நான் செய்ய முடிந்தது. இதை நான் செய்யவேண்டும் என்று தான் உன் விருப்பமும் கூட. நிறை வேற்றிவிட்டேன் தாயே.
அள்ளி யிடுவதரிசியோ தாய் தலை மேல்
கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே யென அழைத்த வாய்க்கு.6
இறைவா, சிவபெருமானே, ஒரு வேண்டுகோள். தயவு செய். நீ முற்காலத்தில் திரிபுரத்தை உன் நெற்றிக்கண்ணால் ஒரு நொடியில் எரித்தவன். பின்னர் ஒரு காலத்தில் ராமனாக வந்தாய். உன் பக்தன் ஆஞ்சநேயன் இலங்கைக்கு பறந்தான். அந்த மாநகருக்கே சடுதியில் தீ இட்டான். இந்த நெருப்பெல்லாம் உண்மையிலேயே ஒரு நெருப்பாகுமா? என் தாய் எனக்கு மீண்டும் கிடைக்காதவள், என் அடிவயிற்றில் இப்போது வைத்து விட்டு சென்றாளே அந்த தீ, நெருப்புக்கு வேறு எந்த நெருப்பாவது ஈடாகுமா? அப்படிப்பட்ட நெருப்பில் கொஞ்சம் எடுத்து இதோ என் தாய் சிதைமேல் இடுகிறேன். கப கப வென்று அது என் அடிவயிற்று தீபோல் எரியட்டும்.
முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென்னி லங்கையில்
அன்னைக யிட்ட தீ யடி வயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.7
என் தாய் இனி இல்லை. தீயில் கலந்து வெந்து போனாள் . பொடியாகி விட்டாள் . அவள் பெயர் இனி சாம்பல். ஒரு குருவியின் நிழல் கூட என் மீது படாமல் என்னை பாதுகாத்து வளர்த்த அந்த உடல் இனி ஒரு பிடி சாம்பல் தான்.
வேகுதே தீ யதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி
பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த் தெடுத்த கை.8
சிவ பெருமானே, என் தாய் வெந்தாளோ? உன் திருவடிகளில் அடைக்கலம் என்று வந்தாளோ? என்னை மறந்தாளோ? அவள் உன்னையே அல்லவோ சுற்றி சுற்றி வந்து வரமெல்லாம் கிடந்து என்னை பெற்றவள். என் தாய்.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின் பதத்தில்
வந்தாளோ வென்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்து வரங்கிடந்தென்
றன்னை யீன்றெடுத்ததாய்.9
என்ன வாழ்க்கை பாருங்கள் மானிடர்களே. இதோ இங்கே தான் எப்போதும் உட்கார்ந்திருப்பாள். இந்த தெருவெல்லாம் என்னைத் தோளில் சுமந்து நடந்தாள். நேற்று இருந்தாளே? இன்று?? வெந்து சாம்பலானாள் ? ஒரு நாள் ஓடிவிட்டதே வாருங்கள் பால் தெளிப்போம்? இனி என் மனத்தில் இந்த இரக்கம் வேண்டாம். இது உன் செயல், நியதி. என்றும் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது. எல்லாம் சிவ மயம் தான் சிவனின் மாயம் தான் என்று ஏற்றுக்கொண்டு பழையபடி என் வழியே நடக்கிறேன்.
வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்களே தென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்து ஸ்லோகங்கள் (தாய்ப் பாசத்தை பிழிந்து வடிகட்டி அவரால் இயற்றப்பட்டவை) -- தாய் முதல் ஸ்தானத்தில் வணங்கப் பட வேண்டியவள். தியாகத்தின் சின்னம். அனைவரும் இதை உணரவேண்டும், கடமையில் தவறாமல் வாழும்போதே அவளை திருப்தியாக வைத்துக் கொள்வதில் எந்த மகனும் மகளும் தவறக்கூடாது.
ஆதி சங்கரரைப் போலவே தென்னாட்டில் தமிழகத்தில், பட்டினத்தாரும் உணர்ச்சி கொப்புளிக்க மேலே கண்ட சில தத்துவ பாடல்களை இயற்றியிருக்கிறார். படித்துவிட்டு மற்றவருக்கும் அறிவியுங்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தாயின் மேன்மை புரியட்டும்.

No comments:

Post a Comment